சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கை:
விடுதலை சிறுத்தை கட்சியின் ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தின் சார்பில் வருகிற 17ம் தேதி, மாலை 4 மணியளவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனின் பிறந்தநாள் விழா, புதுச்சேரி அருகேயுள்ள சங்கமித்ரா அரங்கில் நடைபெற உள்ளது.
விசிக பொதுச்செயலாளர் துரை.ரவிக்குமார் எம்.பி., தலைமை நடைபெறும் இந்த விழாவில், விழுப்புரம் தென்கிழக்கு மாவட்டச் செயலாளர் வீர.பொன்னி வளவன் வரவேற்புரை ஆற்றுகிறார். பொதுச்செயலாளர் சிந்தனைச்செல்வன் எம்.எல்.ஏ. முன்னிலை வகிக்கிறார். நிகழ்ச்சியை துணை பொதுச்செயலாளர் வன்னியரசு, தேர்தல் பணிக்குழு செயலாளர் ஜெ.குணவழகன் தொகுத்து வழங்குகின்றனர்.
காங்கிரஸ் புதுச்சேரி தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், விழுப்புரம் தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் பொன்.கவுதம சிகாமணி, இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச்செயலாளர் இரா.முத்தரசன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ., விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச்செயலாளர்கள் எஸ்.எஸ்.பாலாஜி எம்.எல்.ஏ., ஆளூர் ஷாநவாஸ் எம்.எல்.ஏ., விசிக ஊடக மைய மாநிலச் செயலாளர் பனையூர் பாபு எம்.எல்.ஏ., ஆகியோர் சிறப்புரை ஆற்றுகின்றனர். நிறைவாக கட்சியின் தலைவர் திருமாவளவன் ஏற்புரை ஆற்றுகிறார். இந்த நிகழ்வில் கட்சி வளர்ச்சிக்கென 200 பவுன் பொற்காசுகளை வழங்க விழுப்புரம் மாவட்டச் செயலாளர்கள் ஏற்பாடு செய்து வருகின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.