சென்னை: திருமங்கலம் அடுக்குமாடி குடியிருப்பில் ஒரே குடும்பத்தை சேர்ந்த டாக்டர் உள்ளிட்ட 4 பேர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். ரூ. 5 கோடிக்கு மேல் வாங்கிய கடனால் இந்த விபரீத முடிவு நடந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. சென்னை அண்ணாநகர் மேற்கு 17வது பிரதான சாலையில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்கு உள்ள 2வது தளத்தில் கடந்த 3 வருடங்களாக டாக்டர் பாலமுருகன் (57), அவரது மனைவி சுமதி (47) மற்றும் மகன்கள் ஜஸ்வந்த் குமார் (19), லிங்கேஷ்குமார் (16) ஆகியோர் குடும்பத்துடன் வசித்து வந்தனர்.
பாலமுருகன் அண்ணாநகர் 13வது பிரதான சாலையில் ஸ்கேன் சென்டர் நடத்திவந்தார். சுமதி, சென்னை உயர்நீதிமன்றம் வழக்கறிஞராக பணியாற்றிவிட்டு தற்போது பணிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இதில், மூத்த மகன் ஜஸ்வந்த்குமார் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றுவிட்டு தற்போது நீட் தேர்வுக்கு தயாராகி வந்துள்ளார். மற்றொரு மகன் லிங்கேஷ்குமார், அண்ணாநகரில் உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில், டாக்டர் பாலமுருகனின் வீட்டு வேலைக்கார பெண் ரேவதிக்கு நேற்று காலை 7 மணி அளவில், வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது.
இதனால் அதற்கு என்ன மாத்திரை போடவேண்டும் என்று கேட்பதற்காக டாக்டர் பாலமுருகனின் செல்போனுக்கு தொடர்பு கொண்டுள்ளார். நீண்ட நேரம் செல்போனில் ரிங் அடித்துகொண்டே இருந்துள்ளது. யாரும் போனை எடுத்து பேசவில்லை என்பதால் பதற்றம் அடைந்த வேலைக்கார பெண் உடனடியாக சுமதி செல்போனுக்கு தொடர்பு கொண்டபோதும் அந்த போனும் சுவீட்ச் ஆப் செய்யப்பட்டிருந்ததால் மேலும் பதற்றம் அடைந்தார். இதையடுத்து டாக்டரின் மகன்களில் செல்போனுக்கும் அழைத்தபோதும் எந்தவித பதிலும் அளிக்கவில்லை என்றதும் வேலைக்கார பெண் அதிர்ச்சி அடைந்தார்.
இதையடுத்து உடனே பதற்றத்துடன் ரேவதி, டாக்டர் வீட்டுக்கு வந்து நீண்டநேரம் கதவை தட்டியும் திறக்கவில்லை. அக்கம்பக்கத்தினர் உதவியை நாடியுள்ளார். ஆனால் உதவிக்கு யாரும் வராததால் அங்கேயே கதறி அழுதபடி சுற்றி, சுற்றி வந்துள்ளார். இதன்பிறகு ஒருசிலர் வந்து கேட்டபோது விஷயத்தை தெரிவித்ததும் உடனடியாக முன்பக்க கதவின் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். அங்கு ஒரு அறையில் டாக்டர், அடுத்தடுத்த அறைகளில் தனித்தனியாக மகன்கள், மற்றொரு அறையில் டாக்டரின் மனைவி ஆகியோர் தூக்கில் பிணமாக கிடந்ததால் இதை பார்த்தவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி சென்னை காவல் கட்டுபாட்டு அறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது, போலீசார் விரைந்துவந்தனர். பின்னர் வீட்டில் சென்று விசாரித்தனர்.
இதுபற்றி அறிந்ததும் திருமங்கலம் போலீசார் வந்து விசாரணை மேற்கொண்டனர். இதில், டாக்டர் பாலமுருகன், மனைவி சுமதி, மகன்கள் ஜஸ்வந்த், லிங்கேஷ் ஆகியோர் தற்கொலை செய்திருப்பது தெரிந்தது. அவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்து நடத்திய விசாரணையில், டாக்டர் பாலமுருகன் நடத்திவந்த ஸ்கேன் சென்டர் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் அந்த தொழிலை விரிவு படுத்த வங்கிகளில் சுமார் ரூ.5 கோடிக்கு மேல் கடன் வாங்கியதாக தெரிகிறது. இதன்காரணமாக கடும் மன உளைச்சலுக்கு ஆளான டாக்டர், குடும்பத்துடன் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் போலீசார் விசாரித்து வருகின்றனர். சென்னையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் டாக்டர் குடும்பமே தூக்கிட்டு தற்கொலை செய்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.