அண்ணாநகர்: சென்னை திருமங்கலம் 100 அடி சாலையில் மெட்ரோ பணிகள் நடைபெற்று வருகிறது. இன்று அதிகாலை 5.30 மணி அளவில் 100 அடி சாலையில் பெரிய பள்ளம் ஏற்பட்டு அதில் இருந்து கழிவுநீர் பெருக்கெடுத்து சாலையில் ஓடியதால் வாகனங்கள் செல்லமுடியாமல் மக்கள் தவித்தனர். இதன்காரணமாக அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் திருமங்கலம் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் பரந்தாமன் தலைமையில் போலீசார் வந்து போக்குவரத்தை சீரமைத்தனர். இதன்பிறகு அண்ணாநகர் 8வது மண்டல குடிநீர் வாரிய பகுதி பொறியாளர் அப்துல் ரவ்ப் தலைமையில் அதிகாரிகள் மற்றும் ஊயர்கள் வந்து பொக்லைன் மூலம் ராட்சத பள்ளத்தை சீரமைத்தனர்.
வாகன ஒட்டிகள் கூறுகையில், ‘’கோயம்பேடு, திருமங்கலம் பகுதிகளில் மெட்ரோ பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளால் தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. மெட்ரோ பணிகளால் திடீரென்று சாலைகள் விரிசல், பள்ளம் ஆகியவை அடிக்கடி ஏற்படுகிறது. எனவே, முறையாக பணிகளை மேற்கொள்ளவேண்டும்’ என்றனர்.