திருமங்கலம்: திருமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் மக்காசோளம் விதைப்பு பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இம்முறை நல்ல மகசூல் கிடைக்கும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். மதுரை மாவட்டம், திருமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான கரிசல்காளன்பட்டி, சுவாமிமல்லம்பட்டி, செங்கப்படை, புதுப்பட்டி, நடுவக்கோட்டை, பன்னிக்குண்டு, சாத்தங்குடி, கிழவனேரி, சௌடார்பட்டி, மீனாட்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமபகுதிகளில் விவசாயிகள் மக்காச்சோளம் விதைப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். ஆடிப் பட்டத்திற்காக மானாவாரி நிலங்களை உழுது அடி உரமாக காம்பளக்ஸ் உள்ளிட்ட உரங்களை இட்டு, நிலங்களை விவசாயிகள் பண்படுத்தி வைத்திருந்தனர். இந்த நிலையில் மதுரை மாவட்டத்தில் ஆடி மாதத்தில் ஓரளவு மழைப்பொழிவு இருந்தது. இதனால், மண்ணில் ஈரப்பதம் கிடைத்த நிலையில் விவசாயிகள் தற்போது மக்காச்சோளம் மற்றும் சோளம் விதைப்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதில், திருமங்கலம் விவசாயிகள் டிராக்டர்கள் மூலமாக மக்காச்சோளம் விதைக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
இது குறித்து விவசாயி ஒருவர் கூறுகையில், “ஆடி மாதத்தில் மழை கிடைத்தது விதைப்புக்கு மண்ணை ஏதுவாக்கியது. தற்போது ஆவணி தொடங்கியுள்ள நிலையில், மக்காச்சோளம் மட்டுமல்லாமல் சோளம், பாசிப்பயறு உள்ளிட்டவைகளையும் விதைத்து வருகிறோம். தற்போது மழை தொடர்வதால் விரைவில் களை எடுக்கும் பணிகள் நடைபெறும். அதன் பின்பு விளைச்சலை அதிகரிக்க யூரியா, பொட்டாஸ் உள்ளிட்ட உரங்களை மேலுரமாக இட்டுப் பயிர்களை வளர்க்க வேண்டும். வரும் டிசம்பர் மாதத்தில் மக்காச்சோளம், சோளம் உள்ளிட்டவை விளைச்சலை தரும் என்று எதிர்பார்க்கிறோம். இந்தாண்டு ஓரளவு மழை பெய்து வருவதால் மக்காச்சோளம், சோளம், உளுந்து உள்ளிட்ட பயிர்களுக்கு நல்ல விலை கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது’’ என்றார்.