திருமங்கலம் : திருமங்கலம் அருகே அரசு டவுன் பஸ், கார் மோதிய விபத்தில், குழந்தை, தாத்தா உயிரிழந்தனர். பெற்றோர் உட்பட 6 பேர் காயமடைந்தனர்.மதுரை மாவட்டம், டி.கல்லுப்பட்டி அருகே காடனேரியை சேர்ந்தவர் செந்தில் (எ) சென்றாயபெருமாள் (36). மனைவி பிரியங்கா (30). மகள் சிவானிகா (2). உடல்நலக்குறைவு காரணமாக செந்தில், மனைவியின் சொந்த ஊரான வேலூரில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் இரவு, இவர்கள் காரில் காடனேரி புறப்பட்டனர். காரில் செந்தில், பிரியங்கா, குழந்தை சிவானிகா, பிரியங்காவின் சித்தப்பா சௌந்தரராஜன் (50), உறவினர்கள் சுரேஷ் (35), லல்லியம்மாள் (56). சாந்தா (56) ஆகியோர் இருந்தனர். காரை திருப்பத்தூரை சேர்ந்த டிரைவர் அபிஷ் (29) ஓட்டி வந்தார்.
இவர்கள் வந்த கார் நேற்று காலை 6 மணியளவில் திருமங்கலம் – ராஜபாளையம் ரோட்டில் புதுப்பட்டி பாலத்தை கடந்தபோது, எதிரே முத்துலிங்காபுரத்திலிருந்து திருமங்கலம் நோக்கி வந்த டவுன் பஸ்சுடன் நேருக்கு நேர் மோதியது. இதில் கார் அப்பளம் போல் நொறுங்கி பஸ்சில் சிக்கியது. தகவல் அறிந்த டி.கல்லுப்பட்டி, திருமங்கலம் தாலுகா போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டனர்.
இந்த விபத்தில் குழந்தை சிவானிகா, சௌந்தரராஜன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மற்ற 6 பேர் படுகாயமடைந்தனர். இவர்கள் மீட்கப்பட்டு 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு முதலுதவிக்கு பின் அவர்கள் அனைவரும் உயர் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். டவுன் பஸ்சில் சிக்கிக் கொண்ட காரை தீயணைப்பு படையினர் நீண்ட நேரம் போராடி மீட்டனர். விபத்து குறித்து டி.கல்லுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தினால் திருமங்கலம் – ராஜபாளையம் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.