* லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக அருங்காட்சியகத்தில் இருந்து கொண்டு வரப்படுகிறது
* சிலை திருட்டு தடுப்பு பிரிவுக்கு டிஜிபி பாராட்டு
சென்னை: கும்பகோணம் சவுந்திரராஜபெருமாள் கோயிலில் கடந்த 1957ம் ஆண்டு காலத்தில் திருடப்பட்ட திருமங்கை ஆழ்வார் சிலையை லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக அருங்காட்சியத்தில் இருந்து 67 ஆண்டுகளுக்கு பிறகு சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீசார் மீட்டுள்ளனர். தஞ்சை மாவட்டம் கும்பகோணம் சவுந்திரராஜபெருமாள் கோயிலில் கடந்த 1957 மற்றும் 1967ம் ஆண்டு இடைப்பட்ட காலத்தில் பல கோடி மதிப்புள்ள திருமங்கை ஆழ்வார், காளிங்கநர்த்தன கிருஷ்ணர், விஷ்ணு மற்றும் தேவி ஆகிய 4 உலோக சிலைகள் திருடுபோனதாக கடந்த 2020ம் ஆண்டு தமிழ்நாடு சிலை திருட்டு தடுப்பு பிரிவுக்கு புகார் வந்தது.
அந்த புகாரின் படி போலீசார் வழக்கு பதிவு ெசய்து விசாரணை நடத்திய போது, கோயிலில் இருந்து திருடப்பட்ட சிலைகள் வெளிநாட்டு சிலை கடத்தல் கும்பல் மூலம் கடத்தப்பட்டது தெரியவந்தது. திருடப்பட்ட சிலைக்கு பதில் கொள்ளையர்கள் போலியான சிலைகளை வைத்திருந்ததும் தெரியவந்தது. அந்த போலியான சிலைகள் தான் தற்போது பொதுமக்கள் வழிபாட்டிற்கு வைக்கப்பட்டுள்ளதும் விசாரணையில் தெரியவந்தது. மேலும், திருடப்பட்ட சிலைகள் குறித்து வெளிநாடுகளில் உள்ள பல்வேறு அருங்காட்சியங்களின் இணையதளங்களில் தேடினர்.
அப்போது திருமங்கை ஆழ்வார் சிலை, லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் உள்ள அஸ்மோலியன் அருங்காட்சியகத்தில் இருப்பது உறுதியானது. இந்த சிலையை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கடந்த 1967ம் ஆண்டு வாங்கியதும் தெரியவந்தது. உடனே சிலை திருட்டு தடுப்பு பிரிவு அதிகாரிகள் லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திற்கு திருமங்கை ஆழ்வார் சிலை குறித்து முழுமையான அறிக்கையை உரிய ஆதாரங்களுடன் அனுப்பினர். அதன்படி ஆகஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் இருந்து பிரதிநிதி ஒருவர் சில நாட்களுக்கு முன்பு தமிழகம் வந்தார்.
அவரிடம் சிலை திருட்டு தடுப்பு பிரிவு எஸ்பி சந்திரசேகரன் திருமங்கை ஆழ்வார் சிலைக்கான ஆவணங்களை சமர்ப்பித்தார். அதை ஆய்வு செய்த ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக பிரதிநிதி அதை முழுமையாக ஏற்றுக்கொண்டு, கும்பகோணம் சவுந்திரராஜ பெருமாள் கோயிலுக்கு சொந்தமானது தான் திருமங்கை ஆழ்வார் சிலை என்று அதற்கான அறிக்கையை அவர் தனது பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு அளித்தார். அதனை தொடர்ந்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக அருங்காட்சியகத்தில் உள்ள திருமங்கை ஆழ்வார் சிலையை இந்தியாவுக்கு திரும்ப கொடுப்பது என்றும், அதற்கான பயண முழு செலவுகளையும் பல்கலைக்கழகமே ஏற்கும் என்றும் உறுதி அளித்துள்ளனர்.
அதனை தொடர்ந்து லண்டனில் உள்ள திருமங்கை ஆழ்வார் சிலை, 67 ஆண்டுகளுக்கு பிறகு விரையில் தமிழகம் கொண்டுவரப்படும் என்று சிலை திருட்டு தடுப்பு பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மீதமுள்ள காளிங்கநர்த்தன கிருஷ்ணர், விஷ்ணு மற்றும் தேவி சிலைகள் அமெரிக்காவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த சிலைகளையும் விரைவில் மீட்க சிலை திருட்டு தடுப்பு பிரிவு அதிகாரிகள் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளனர். லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் இருந்து திருமங்கை ஆழ்வார் சிலையை மீட்க உரிய நடவடிக்கை எடுத்த சிலை திருட்டு தடுப்பு பிரிவுக்கு டிஜிபி சங்கர் ஜிவால் பாராட்டு தெரிவித்துள்ளார்.