மதுரை: தூத்துக்குடி மாவட்டம், கடம்பூரை சேர்ந்த செல்வகுமார் ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், இந்தியாவின் தேசிய அறநூலாக திருக்குறளை அறிவித்து, திருக்குறளின் பெருமைகளை உலக மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். இதற்காக திருக்குறளை அறநூலாக அறிவிக்க ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிடவேண்டும் என கூறியிருந்தார். இந்த மனு நேற்று நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கவுரி ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த நீதிபதிகள், திருக்குறளை இந்திய தேசிய அறநூலாக எப்படி அறிவிக்க முடியும்? அவ்வாறு செய்தால் அனைவரும் மாநில நூல்களை தேசியநூலாக அறிவிக்க வேண்டும் என ஐகோர்ட்டை தேடி வருவார்கள். திருக்குறள் என்பது அனைவருக்கும் பொதுவான கருத்தினை சொல்லும் ஒரு நூல் மட்டுமே. அதன்படி வாழ்க்கை நெறிமுறைகளை கடைபிடிப்பது அவரவர்களின் விருப்பம். எனவே திருக்குறளை தேசிய நூலாக அறிவிப்பு செய்வது தேவையற்றது. இந்த மனு முடித்து வைக்கப்படுகிறது என உத்தரவிட்டனர்.