நன்றி குங்குமம் ஆன்மிகம்
குறளின் குரல்
தெய்வத்தைப் பற்றிக் குறிப்பிடும் திருக்குறள் வானுலகத் தேவர்கள் பற்றியும் குறிப்பிடுகிறது. தேவலோகம் என ஒன்று உள்ளதையும் அங்கே தெய்வத்தின் அடுத்த நிலையில் தேவர்கள் வாழ்வதையும் திருக்குறள் ஏற்கிறது என்று கருத இடமுண்டு.
`தேவர் அனையர் கயவர் அவரும்தாம்
மேவன செய்துஒழுக லான்.’
(குறள் எண் 1073)
கயவர்களை ஒருவகையில் தேவர்கள் என்றுதான் கூறவேண்டும். ஏனென்றால் கயவர்களும் தேவர்களைப் போன்றே தாம் விரும்பியவற்றையெல்லாம் செய்பவர்களாக இருக்கிறார்கள். இவ்விதம் வஞ்சப் புகழ்ச்சியாக கயவர்களைப் போற்றுகிறார் வள்ளுவர்.
`சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு.’
(குறள் எண் 18)
வானம் வறண்டு மழை பொழியாமல் போகுமானால் வானுலகத் தேவர்களுக்கும் பூஜை நடைபெறாது.
`யான்எனது என்னும் செருக்குஅறுப்பான் வானோர்க்கு
உயர்ந்த உலகம் புகும்.’
(குறள் எண் 346)
நான், என்னுடையது என்கிற ஆணவத்தை விட்டு விட்டவர்கள் வானோர் வாழும்
உலகம் செல்வார்கள்.
`ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்
கோமான் இந்திரனே சாலுங் கரி.’
(குறள் எண் 25)
ஐம்புலன்களையும் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டிருக்கும் முனிவர்களின் ஆற்றலுக்கு தேவர்களின் தலைவனான இந்திரனே சரியான சான்றாவான்.
`இமையாரின் வாழினும் பாடிலரே இல்லாள்
அமையார்தோள் அஞ்சு பவர்.’
(குறள் எண் 906)
மனைவியின் தோளுக்கு அஞ்சி வாழ்பவர் கண்ணிமைக்காத வானோர் போல் சிறப்புற வாழ்ந்தாலும் அவர்கள் பெருமை இல்லாதவராகவே கருதப்படுவர்.
`பெற்றார்ப் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
புத்தேளிர் வாழும் உலகு.’
(குறள் எண் 58)
பெண்கள் இல்வாழ்வில் பெருமையைப் பெற்றால், அந்தப் பெண்கள் தேவர்கள் வாழும் உலகில் மிகுந்த மேன்மையை அடைவார்கள். இவ்விதம் பல குறட்பாக்களில் தேவர்களைப் பற்றிப் பேசுகிறது திருக்குறள். தேவர்களை `தேவர், வானோர், அகல்விசும்புளார், இமையார், புத்தேளிர்’ என்ற சொற்களால் வள்ளுவம் குறிப்பிடுகிறது.வானுலகில் வாழும் தேவர்கள் என்பவர் யார்? தேவர்களுக்கும் தெய்வீக அற்றல்கள் பல உண்டு என்றாலும், தெய்வத்தின் கட்டளைக்கு உள்பட்டு அடங்கி நடப்பவர்களே தேவர்கள்.
மொத்தம் முப்பத்து முக்கோடி தேவர்கள் வானுலகில் வாழ்கிறார்கள் என்கின்றன புராணங்கள். அவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பணியைச் செய்கிறார்கள். எடுத்துக் காட்டாக வருண தேவனின் பணி மழை பொழிவது. வாயு தேவனின் பணி காற்று வீசுவது. அக்கினி தேவனின் பணி நெருப்பைத் தோற்றுவிப்பது. கண்ணன் கதையைச் சொல்லும் பாகவத புராணத்தில் இந்திரன் பற்றி ஒரு செய்தி வருகிறது. கோகுலத்தில் ஆண்டுதோறும் இந்திர பூஜை செய்வது வழக்கம். இந்திரனுக்கு ஏன் பூஜை நிகழ்த்த வேண்டும் என்ற கேள்வியை முதன்முறையாக எழுப்புகிறான் கண்ணன்.
கோபர்களுக்கு ஆதாரமானவை ஆனிரைகள். அந்த ஆனிரைகளுக்குத் தேவையான புல் முதலியவற்றையும் இன்னும் மனிதர்களுக்குத் தேவையான பற்பல வளங்களையும் வற்றாமல் தருவது கோவர்த்தன மலைதான்.எனவே கண்ணுக்குத் தெரியாத இந்திரனுக்குச் செய்யும் பூஜையை நிறுத்திவிட்டு, கண்ணெதிரே காட்சியளிக்கும் கோவர்த்தன கிரியை பூஜிப்பதுதான் சரி எனக் கண்ணன் அறிவுறுத்துகிறான். கீதையைச் சொன்ன கண்ணன், சொல்வதெல்லாம் கீதைதானே? கண்ணன் கட்டளைக்கு முழுமனதோடு பணிகிறது கோகுலம். கோகுலத்தில் இந்திர பூஜையை நிறுத்திவிட்டு, கோவர்த்தன கிரிக்கு பூஜை செய்தார்கள் கோபர்கள்.
அதனால் இந்திரன் கடும் சீற்றமடைந்தான். தேவனான தனக்குச் செய்ய வேண்டிய பூஜையை ஒரு மலைக்குச் செய்வதா?
சீற்றம் இந்திரன் கண்ணை மறைத்தது. கண்ணன் முழுமுதல் கடவுளே என்ற உண்மையை மறந்தான். வருண தேவனை அழைத்து கோகுலத்தின்மேல் விடாது மழை பொழியுமாறு கட்டளையிட்டான். தேவர்களின் அரசனான தேவேந்திரனின் கட்டளையை வருணன் மீற இயலாதே? அதனால் வருண தேவன் பெரும் மழையைத் தோற்றுவித்து கோபர்களை அச்சுறுத்தினான். பிரளய காலம் போல் பொழிந்த பெருமழையால் கோபர்களும் கோபியர்களும் நடுநடுங்கினார்கள்.
ஆனால் கிருஷ்ணர் கோவர்த்தன கிரியை அநாயாசமாய்த் தூக்க கோபர்களும் கோபிகைகளும் ஆனிரைகளும் அங்கே தஞ்ச மடைந்தார்கள் என்கிறது பாகவத புராணம்.ஏழு நாட்கள் மழை பொழிந்த பின்னர் இந்திரனுக்குப் புத்தி வந்ததையும் தான் முழுமுதல் கடவுளுக்கு அடங்கிய தேவனே என்பதை அவன் உணர்ந்து கொண்டதையும் கண்ணனிடம் மன்னிப்பு வேண்டியதையும் பாகவத புராணம் மேலும் விவரிக்கிறது.
ஆக தேவர்கள் கடவுளல்லர். அவர்கள் கடவுளுக்கு அடங்கியவர்களே. எனினும் தங்களுக்கெனத் தனிச் சக்திகளும் உடையவர்கள் அவர்கள்.தேவர்கள் ஆதித்தர், ருத்திரர், அஸ்வினி தேவர் என்றெல்லாம் பலவாறாக வகைப்படுத்தப் படுகிறார்கள். இவர்களில் ஆதித்தர்கள் பன்னிரண்டு பேர் உண்டு. ருத்திரர்கள் பதினோரு பேர் இருப்பதாகப் புராணங்கள் சொல்கின்றன. அஸ்வினி தேவர்கள் இருவர். இவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு கோடி பரிவாரங்கள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அனைவரையும் சேர்த்து மொத்தம் முப்பத்து முக்கோடி தேவர்கள் எனச் சொல்வது வழக்கம்.
தேவர்களுக்கும் கடவுளுக்கும் உள்ள வேறுபாடுகள் போலவே, தேவர்களுக்கும் மனிதர்களுக்கும் சில வேறுபாடுகள் உண்டு.தேவர்களின் விழிகள் இமைப்பதில்லை. ஆகையால் அவர்கள் கண் சிமிட்டுவதில்லை. அதனால் அவர்களுக்கு இமையார் என்ற காரணப் பெயர் உண்டு.அவர்களின் பாதங்கள் பூமியில் தோய்வதில்லை. பூமிக்குச் சற்று மேலேயே அவர்கள் அந்தரத்தில் நிற்பார்கள். அவர்கள் அணியும் மலர்மாலை ஒருபோதும் வாடுவதில்லை.
தேவர்கள் எலும்பும் சதையும் ரத்தமுமான உடல் உடையவர்கள் அல்லர். அவர்கள் உடல், ஒளியால் உருவான ஒளியுடல். எனவே ஒளி அவர்களை ஊடுருவும் என்பதால் அவர்களின் நிழல் தரையில் விழுவதில்லை.தமயந்திக்கு நடந்த சுயம்வரத்தின்போது, தமயந்தியின் பேரழகால் கவரப்பட்ட தேவர்களான இந்திரன், வாயு, வருணன், அக்னி ஆகியோர் தமயந்தியின் காதலனான நளனைப் போலவே வேடமிட்டு வந்து சுயம்வரத்தில் கலந்துகொண்டார்கள்.
பேரழகியான தமயந்தி மனிதர்களை விட உயர்வான தங்களில் ஒருவரை மணப்பாள் என அவர்கள் நம்பினார்கள். ஆனால் அனைத்துத் தேவர்களையும் புறக்கணித்து நளனையே தன் மணாளனாக ஏற்றாள் தமயந்தி. மாறு வேடத்திலிருந்த தேவர்களிடமிருந்து பிரித்து அவள் தன் காதலன் நளனை எப்படி இனங்கண்டாள் என்பதைப் புகழேந்திப் புலவரின் நளவெண்பா ஓர் அழகிய பாடலில் விவரிக்கிறது. ‘கண்ணிமைத்த லால்அடிகள் காசினியில் தோய்தலால்வண்ண மலர்மாலை வாடுதலால்-எண்ணிநறுந்தா மரைவிரும்பும் நன்னுதலே அன்னாள்அறிந்தாள் நளன்தன்னை ஆங்கு.’
நளனின் கண்கள் இமைத்ததாலும் அவன் பாதங்கள் பூமியில் பட்டிருந்ததாலும் அவன் அணிந்த வண்ண மலர்மாலை சற்றே வாடிக் காணப்பட்டதாலும் அவன் தேவனல்லன், மனிதனான நளனே என உறுதி செய்துகொண்டு அவனுக்கு மாலையிட்டாளாம் தமயந்தி.அவளின் உயரிய காதல் சிறப்பை உணர்ந்துகொண்ட தேவர்களும் அவளை வாழ்த்தினார்கள் என்றும், அவர்கள் நளனுக்குப் பல்வேறு வரங்களை வழங்கினார்கள் என்றும் நளசரிதம் தெரிவிக்கிறது.
தேவர்கள் மனிதர்களை விட உயர்ந்தவர்களே என்றாலும், தவ ஆற்றல் படைத்த முனிவர்களால் தேவர்கள் சாபம் பெற்று வருந்தியதையும் புராணங்கள் பதிவு செய்துள்ளன. அப்படிப்பட்ட ஒரு புராணச் செய்தியைத் திருக்குறளும் குறிப்பிடுகிறது.கெளதமர் தன் மனைவி அகலிகை மேல் இச்சை கொண்ட தேவனான இந்திரனைச் சபிக்கிறார். அவன் உடல் முழுவதும் பெண்மையின் சின்னங்கள் தோன்றட்டும் எனச் சீற்றத்துடன் முழங்குகிறார்.
நடுநடுங்கிய இந்திரன் பணிந்து மன்னிப்புக் கேட்கிறான். சாப விமோசனம் அருளுமாறு வேண்டுகிறான். சீற்றம் தணிந்த முனிவர் இரக்கம் கொள்கிறார். அந்தச் சின்னங்கள் மற்றவர் கண்களுக்கு விழிகளாகத் தோன்றும் எனச் சாப விமோசனம் அருள்கிறார்.ராமாயணத்தில் இடம்பெற்றுள்ள இந்த அகலிகை பற்றிய புராணக் கதையை ஓர் உதாரணமாக எடுத்தாள்கிறார் வள்ளுவர். `ஐந்தவித்தானாகிய முனிவனின் ஆற்றலுக்கு அகல்விசும்புளார் கோமானான இந்திரனே சாட்சி என்கிறார்.
தேவர்கள் அரக்கர்களால் துன்பப்படும் போது அவர்கள் கடவுளைச் சரணடைந்து தங்களைக் காப்பாற்றுமாறு வேண்டுவது உண்டு. ராவணனால் தேவர்கள் பட்ட துன்பங்கள் மிக அதிகம். அந்தத் துன்பங்கள் எல்லை மீறின. தேவர்களை அடிமைபோல் நடத்தி வேலை வாங்கினான் ராவணன்.அதுமட்டுமல்ல, தேவலோகப் பெண் களையும் தனக்கு அடிமையாக்கிக் கொண்டான். ஊர்வசி, மேனகை போன்ற பேரழகிகளெல்லாம் அவனுக்குத் தொண்டூழியம் செய்யுமாறு வற்புறுத்தப் பட்டார்கள்.
அசோக வனத்தில் சிறைவைக்கப் பட்டிருந்தாள் சீதாதேவி. அவளைத் தேடிவந்தான் மூவுலகங்களையும் வென்ற இலங்கையின் அதிபதியான ராவணேஸ்வரன். அவன் ஒரு கூட்டம் தன்னைப் பின்தொடர எவ்விதம் சீதையைத் தேடிவந்தான் என்பதைக் கம்ப ராமாயணம் ஒரு பாடலில் விவரிக்கிறது.
‘உருப்பசி யுடைவா ளேந்தினள் தொடர
மேனகை வெள்ளடை யுதலச்
தெருப்பினைத் தாங்கித் திலோத்தமை செல்ல
அரம்பையர் குழாம்புடை சுற்றுக்
கருப்புரச் சாந்துங் கலவையு மருங்
கலந்துமிழ் பரிமள கந்தம்
மருப்புடைப் பொருப்பேர் மாதிரக் களிற்றின்
வரிக்கைவாய் மூக்கிடை மடுப்ப.’
தேவலோக நடனமணியான ஊர்வசி ராவணனின் உடைவாளை எடுத்துக்கொண்டு பணிவோடு பின்னே வந்தாள். மேனகையோ வெற்றிலைப் பெட்டியைத் தாங்கியவாறு அஞ்சி அஞ்சி உடன் நடந்தாள். திலோத்தமை ராவணனின் செருப்பினைச் சுமந்தபடிச் சென்றாள்.இவ்விதம் தேவ மகளிரின் கூட்டம் ராவணனுக்குத் தொண்டூழியம் செய்தவாறு அவனைப் பின்தொடர்ந்த காட்சியை விவரிக்கிறது இப்பாடல். தேவ மகளிர் மட்டுமல்ல, வருணன் வாயு உள்ளிட்ட தேவர்களே கூட ராவணனின் கட்டளைக்குப் பணிந்து ஏவல் செய்ய வேண்டியிருந்தது.
விரக தாபத்தால் வருந்திய ராவணன் கட்டளையிட்டதும் வாயு பகவான் தென்றலாக மாறி வீசியதையும் இதுபோலவே பிற தேவர்களெல்லாம் அஞ்சி நடுங்கி ராவணனின் கட்டளைக்கு உட்பட்டு நடந்ததையும் ராமாயணம் பேசுகிறது. ராவணனின் கொடுங்கோன்மையால் வருந்திய தேவர்கள் கடவுளான திருமாலின் பாதங்களைச் சரணடைந்து முறையிட்டார்கள். திருமால் மண்ணுலகில் அவதரித்து ராவணனை வதம் செய்து தங்களைக் காக்க வேண்டும் என வேண்டினார்கள்.
அவர்களின் வேண்டுகோளுக்கு இறைவன் செவிசாய்த்ததையும் அதனாலேயே ராமாவதாரம் நிகழ்ந்தது என்பதையும் ராமாயணம் சொல்கிறது.அசுரர்கள் தேவர்களுக்குத் துன்பம் கொடுக்கும் நேரங்களிலெல்லாம் தேவர்கள் முழுமுதற் கடவுளான திருமாலைச் சரணடைந்து அவர் அருளால் காப்பாற்றப் படுவதைப் புராணங்களில் பல இடங்களில் நாம் காணலாம். பாற்கடலைக் கடைந்து அமுதத்தை வெளிப்படுத்தி அந்த அமுதத்தை அருந்தச் செய்து தேவர்களுக்கு மரணமில்லாத் தன்மையை அருளியதும் கடவுளான திருமால்தான். மிகப் பழைய காப்பியமான சிலப்பதிகாரம் இச்செய்தியைப் பேசுகிறது.
`வடவரையை மத்தாக்கி வாசுகியை நாணாக்
கிக்
கடல்வண்ணன் பண்டொருநாள் கடல்வயிறு
கலக்கினயே
கலக்கியகை அசோதையார் கடைகயிற்றால்
கட்டுண்கை
மலர்க்கமல உந்தியாய் மாயமோ மருட்கைத்
தே!’
கடவுளைப் போல் தேவர்களும் பல ஆற்றல்களைப் பெற்றவர்கள்தான் என்றாலும் அவர்களின் ஆற்றல்கள் கடவுளின் ஆற்றல்களுக்கு இணையானவை அல்ல. தேவர்களுக்கு ஒரு துன்பம் நேரும்போது கடவுள்தான் அவர்களைக் காப்பாற்ற வேண்டியிருக்கிறது.
திருவள்ளுவர் இந்து மதம் குறிப்பிடும் தேவர்களைப் பற்றித் தாம் எழுதிய திருக்குறளில் பதிவு செய்துள்ளார். திருவள்ளுவரையே தேவர் என்றும் தெய்வம் என்றும் பழந்தமிழ் குறிப்பிடுவதைப் பார்க்கிறோம். தெய்வப் புலவர் திருவள்ளுவர் என அவர் தெய்வம் என்ற அடைமொழி சேர்த்து அறியப்படுகிறார்.
`தேவர் குறளும் திருநான்மறை முடிவும்
மூவர் தமிழும் முனிமொழியும் – கோவைத்
திருவா சகமும் திருமூலர் சொல்லும்
ஒருவா சகமென் றுணர்’
என நல்வழியில் ஒளவை அருளிய வெண்பா, திருவள்ளுவரைத் தேவர் என்றே குறிப்பிடுகிறது. தேவர்களைப் பற்றித் திருவள்ளுவர் குறிப்பிடுகிறார். ஆனால் திருவள்ளுவரையே தேவராகவும் ஏன் தெய்வமாகவுமே உலகம் கொண்டாடுகிறது.
(குறள் உரைக்கும்)
தொகுப்பு: திருப்பூர் கிருஷ்ணன்