திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் ஒன்றியத்தில் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கத்தை ஒன்றிய குழு தலைவர் ஆர்.டி.அரசு தொடங்கி வைத்தார்.
செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் ஒன்றியம் எடையாத்தூர் கிராமத்தில், வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்க திட்டம் தொடக்க விழா நேற்று நடந்தது. செங்கல்பட்டு மாவட்ட வேளாண்மை துணை இயக்குநர் செல்வபாண்டியன் தலைமை தாங்கினார். ஒன்றிய குழு முன்னாள் துணை தலைவரும், திருக்கழுக்குன்றம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளருமான சரவணன், திருக்கழுக்குன்றம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் ஜெயராமன், எடையாத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் மனோஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக முன்னாள் எம்எல்ஏவும், திருக்கழுக்குன்றம் ஒன்றிய குழு தலைவருமான ஆர்.டி.அரசு பங்கேற்று, ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் திட்ட விழாவை தொடங்கி வைத்து பேசினார். அப்போது, விவசாயிகளுக்கு ஊட்டச்சத்து இயக்கம் மற்றும் இதர வேளாண்மை சார்ந்த தொழில்நுட்ப ஆலோசனைகள் வழங்கப்பட்டது. பின்னர், வேளாண்மை துறை மூலம் அவரை, மரத்துவரை, காராமணி விதை தொகுப்புகளும், தோட்டக்கலை துறை மூலம் 6 வகையான காய்கறி தொகுப்பு மற்றும் பழச் செடிகள் ஆகியவை விவசாயிகளுக்கு முழு மானியத்தில் வழங்கப்பட்டது. விழாவில் வேளாண்மை துறை சார்ந்த அலுவலர்கள், விவசாயிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.