திருக்கழுக்குன்றம்: மதுராந்தகம் அடுத்த அரசர்கோயில் பகுதியை சேர்ந்தவர் வடிவேல் (34). இவர், உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தில் கல்வெட்டியல், தொல்லியல் படிப்பு படித்து விட்டு, இவருடன் இப்படிப்பை படித்த 10 பேருடன் இணைந்து, ‘வரலாற்று ஆய்வாளர்கள் சங்கம்’ என்ற ஒன்றை தொடங்கி, செங்கல்பட்டு முதல் வாயலூர் வரையிலான பாலாற்றில் மேற்பரப்பு கள ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், இவர்களின் ஆராய்ச்சிகளின் மூலம் பல்வேறு தொல்லியல் (எச்சங்களை) கருவிகளை கண்டு பிடித்துள்ளனர்.
இந்நிலையில், திருக்கழுக்குன்றம் அடுத்த பாண்டூர் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் வரலாறு ஆசிரியராக பணிபுரிந்து வரும் ஆராய்ச்சியாளர் வடிவேல், தன்னிடம் படிக்கும் மாணவ – மாணவிகளுக்கு தொல்லியல் எச்சங்கள் பற்றிய பயிற்சி அளித்து, இப்பகுதி பாலாற்றை ஒட்டி அமைந்துள்ள பகுதி என்பதால், தங்கள் பகுதியில் தொல்லியல் சம்மந்தமான கள ஆய்வில் ஈடுபடும் படி மாணவர்களுக்கு அறிவுறுத்தி வருகிறார்.
ஆசிரியர் வடிவேலுவின் பயிற்சியை தொடர்ந்து, இவரிடம் பயின்று வரும் இரும்புலிச்சேரி கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் என்ற 10ம் மாணவன், கடந்த 2 தினங்களுக்கு முன்பு பாலாற்றில் குளிக்க செல்லும்போது, ஆற்று மணலில் புதையுண்டு லேசாக வித்தியாசமாக தெரிந்த ஒன்றை கொண்டு வந்து தொல்லியல் ஆய்வாளரான ஆசிரியர் வடிவேலுவிடம் காண்பித்தபோது அது அபூர்வமான, ‘கற்கால கைக்கோடாறி’ என்றும் அதை உரிய ஆய்வு செய்ததில் வரலாற்றுக்கு முந்தைய கால மனிதர்கள் பயன்படுத்திய இந்த கற்கருவி சுமார் 8 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட புதிய கற்காலத்தைச் சேர்ந்தது எனவும், குறுகிய பட்டை பகுதி கொண்ட இந்த கற்கோடரி மிருகங்களை வேட்டையாடும் ஆயுதமாகவும், நிலத்தை சமன்படுத்தவும் பயன்படுத்தக்கூடியதாகும் எனவும் கூறப்படுகிறது.
இந்த மாணவனை தொடர்ந்து இதேப்பள்ளியில் பயிலும் 11ம் வகுப்பு மாணவன்கள் பாண்டூரை சேர்ந்த கோபிநாத், நெரும்பூரை சேர்ந்த தங்கேஸ்வரன், விளாகம் கிராமத்தை சேர்ந்த சந்தோஷ் ஆகியோர் அந்தந்த கிராமப்பாலாற்று படுகைகளிலிருந்து முதுமக்கள் தாழி மற்றும் அதன் மூடி, கருப்பு மற்றும் சிவப்பு பானையின் பகுதி, வட்டச்சில் மற்றும் கூம்பு வடிவ ஜார், சுடுமண் ஆட்டக்காயின் ஆகியவைகளை (இந்த ஒரு மாதத்திற்குள்) கண்டுபிடித்து ஆசிரியர் வடிவேலுவிடம் ஒப்படைத்துள்ளனர்.
படிக்கின்ற இளம் வயது மாணவர்கள் தன்னெழுச்சியுடன் இதுபோன்ற கண்டுபிடிப்புகளை மேற்கொள்வது ஒரு சாதனை தான் என்று பாண்டூர் அரசுப்பள்ளி தலைமையாசிரியர் எழிலரசன் மற்றும் இதர ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த மாணவர்களை பாராட்டி வருகின்றனர். “பாலாறு பகுதிகளில் சில்லு கற்கள் உள்ளிட்ட பழைய, புதிய மற்றும் சங்ககால தொல்லியல் எச்சங்கள் ஏராளமாக கிடைக்கிறது.
மலையில் வாழத் தொடங்கிய மனிதன், சமவெளிகள், மலையடிவாரங்கள், ஆற்றங்கரைகளில் வாழ்ந்தான் என்பதற்கு சான்றாக இந்த கற்கருவிகள் உள்ளது. அரசு தனிக்கவனம் செலுத்தி, இந்த பாலாற்று பகுதியில் மேலும் தீவிர ஆய்வு செய்தால், கீழடி போல் பல ஆதாரங்கள், பழங்கால அடையாளகள், கூடுதல் சான்றுகள் கிடைக்கக்கூடும் என்று தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள், சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.