திருச்செங்கோடு: நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் தினேஷ் (29) என்பவரின் பிறந்து சில நாட்களேயான பெண் குழந்தையை விற்க வற்புறுத்திய வழக்கில் திருச்செங்கோடு அரசு மருத்துவமனை மகப்பேறு மருத்துவர் அனுராதா மற்றும் புரோக்கர் லோகாம்பாள் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். டாக்டர் அனுராதா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அவரது 2 கிளினிக்குகளும் சீல் வைக்கப்பட்டன. திருச்செங்கோடு நகர போலீசாரின் விசாரணையில் பெண் குழந்தை விற்பனையில் பெரிய அளவிலான நெட் ஒர்க் இருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. குழந்தை விற்பனைக்காக பல ஊர்களில் புரோக்கர்கள் செயல்பட்டு வருவதும் தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து விசாரித்து குற்றவாளிகளை கைது செய்ய நாமக்கல் எஸ்பி ராஜேஷ்கண்ணன் உத்தரவிட்டதன்பேரில் திருச்செங்கோடு டிஎஸ்பி இமயவரம்பன் மேற்பார்வையில், 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படையினர் பல்வேறு ஊர்களுக்கு சென்று குற்றவாளிகளை தேடி வருகின்றனர். இந்நிலையில், நேற்று இந்த வழக்கு சம்பந்தமாக தனிப்படை போலீசார் குமாரபாளையம் காவேரி நகர் அய்யம்பாளைத்தில வசிக்கும் தனசேகர் மனைவி பாலாமணி என்பவரை கைது செய்தனர். பாலாமணி ஏற்கனவே மும்பையிலிருந்து ஒரு குழந்தையை கடத்தி வந்து கர்நாடகாவில் விற்றது சம்பந்தமாக மும்பை போலீசாரால் கைது செய்யப்பட்டு 9 மாதம் சிறையில் இருந்து ஜாமீனில் வந்துள்ளார். இந்த வழக்கு தற்போதும் நடந்து வருகிறது. இதனைத்தொடர்ந்து மதுரை பேரையூரில் குழந்தை விற்பனை சம்பந்தமாக தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு தலைமறைவாக இருந்து வந்தார். இவர்தான் லோகாம்பாளிடம் பேசி தினேஷின் குழந்தையை எப்படியாவது கொண்டு வந்துவிடு என்று கூறினாராம். கைதான பாலாமணி, திருச்செங்கோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிபதி சுரேஷ்பாபு உத்தரவின்படி சேலம் சிறையில் அடைக்கப்பட்டார்.