*சிஇஓ மகேஸ்வரி தொடங்கி வைத்தார்
திருச்செங்கோடு : 3 மூன்று வயது முதல் 25 வயது வரையிலான மாணவ -மாணவியர்களை உறுப்பினர்களாகக் கொண்ட பாரத சாரண சாரணியர் இயக்கத்தின் ஒரு பிரிவான திரிசாரணர் பிரிவில் பயிற்சி பெற்று வருவோருக்கு மாநில அளவில் ஆளுநரால் வழங்கப்படும் உயரிய விருதான ராஜ்யபுரஸ்கார் விருது தேர்வில் பங்கேற்கவுள்ள திரிசாரணர் -திரிசாரணீயர்களுக்கான முகாம் திருச்செங்கோட்டில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் மூன்று நாட்கள் நடைபெற்றது.
நாமக்கல், திருச்செங்கோடு, சென்னை, கோவை மற்றும் ஆத்தூர் சாரண மாவட்டங்களைச் சார்ந்த 60 பேர் இம்முகாமில் கலந்து கொண்டனர். சாரண இயக்க மாவட்ட துணைத்தலைவர் சீனிவாசன் தலைமை வகித்து பேசினார். முகாம் செயலர் விஜய் வரவேற்றார்.
மாவட்டக் கல்வி அலுவலர்கள் கற்பகம்(இடைநிலை), பச்சமுத்து(தொடக்கக் கல்வி), ஜோதி(தனியார் பள்ளிகள்) மற்றும் கல்வி நிறுவன இயக்குனர்கள் மோகன், செந்தில்குமார், சத்யசேகர், முதல்வர் கோபி, நாமக்கல் சாரண மாவட்ட செயலர் ரகோத்தமான், இணை செயலர் தேன்மொழி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் முதன்மை ஆணையர் மகேஸ்வரி சிறப்பு விருந்தினராக பங்கேற்று, முகாமினைத் துவக்கி வைத்தார்.
தேசிய தலைமையக பாடத்திட்டத்தின் படி சக்தி கைலாஷ், ஜெய்னுலாபுதீன், பரத் இளவரசன், உமேரா ஆகியோர் அடங்கிய குழு தேர்வினை நடத்தியது. முகாமில் அணிமுறை, முதலுதவி, ஆக்கல் கலை, நிலப்படம் உள்ளிட்ட பிரிவுகளில் மதிப்பீடு செய்யப்பட்டது.
நிறைவு விழாவில் மாவட்ட சாரண இயக்க ஆணையர் சிங்காரவேல், பயிற்சி திடல் செயலாக்க குழுமச் செயலர் கஸ்தூரிபா காந்தி, சிதம்பரம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு பேசினர். ஏற்பாடுகளை மாவட்ட உதவி செயலர்கள் தீபக், மணியரசன் ஆகியோர் செய்திருந்தனர்.