*3 வாகனம் பறிமுதல்
திருபுவனை : திருபுவனை அவ்வை நகரில் உள்ள வீட்டில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த ராகுல் (23) என்பவர் வாடகை இருந்து வருகிறார். இவர் கலிதீர்த்தால்குப்பம் பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். கடந்த மாதம் 27ம் தேதி ராகுல், வேலைக்கு சென்றுவிட்டு, பைக்கில் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வாகனத்தை வீட்டின் எதிரே நிறுத்திவிட்டு சென்றார்.
மறுநாள் பைக் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே இச்சம்பவம் குறித்து திருபுவனை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
தொடர்ந்து சம்பவ நடந்த இடத்தில் உள்ள சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் 2 இருசக்கர வாகனத்தில் வந்த 4 மர்ம நபர்கள், ராகுலில் பைக்கை திருடி செல்வது தெரிந்தது. இதையடுத்து போலீசார் மர்ம நபர்களை தேடி வந்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ஆண்டியார்பாளையம்- கலிதீர்த்தால்குப்பம் சாலை சந்திப்பில், திருபுவனை சப்-இன்ஸ்பெக்டர் கதிரேசன் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, 2 இருசக்கர வாகனத்தில் வந்த 3 நபர்களை பிடித்து விசாரித்தனர். அதில் காடாம்புலியூர் காட்டாண்டிகுப்பம் பகுதியைச் சேர்ந்த பெருமாள் மகன் கபிலன் (19), இளந்தமிழ் மகன் சூர்யா (எ) சூரிய வேந்தன் (20), ஆகாஷ் மற்றும் ஒரு சிறுவர் ஆகியோர் பைக் திருடி சென்றது தெரியவந்தது.
இதையடுத்து, 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 3 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து கைது செய்த 3 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலப்பட்டு சிறையில் அடைத்தனர். இதில் தலைமறைவாக உள்ள ஆகாஷை தேடி வருகின்றனர்.