சென்னை: மூன்றாம் பாலினத்தவர்களை வேறுபடுத்தி பார்ப்பதன் மூலம் சமூகத்தில் வேற்றுமை ஏற்படுவதை காட்டுகிறது. சமுதாயத்தில் அனைவரும் சமமானவர்கள் என்பதை உணர வேண்டும் என நீதிபதி எஸ்.எம்.சுப்புரமணியம் கூறினார்.
கடலூர் மாவட்டம் வடலூரை அடுத்த நைனார்குப்பம் கிராமத்தில் மூன்றாம் பலினத்தவர்களுக்கு அரசு நிலம் ஒதுக்கி அதற்கான பட்டாவையும் வழங்கியுருந்தது. இந்த பட்டாவை ரத்து செய்யவேண்டும் என்ற கோரிக்கையுடன், கிரம பஞ்சாயத்து தலைவர் மோகன் மாவட்ட ஆட்சியருக்கு மனு அளித்திருந்தார். கடந்த மே மாதம் அளித்த அந்த மனுவை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையுடன் கிராம பஞ்சாயத்து தலைவர் மோகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி மூன்றாம் பாலினத்தவர்களுக்கு எதிராக கிராம பஞ்சாயத்தில் தீர்மானம் நிறைவேற்றிய செயல் என்பது அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எதிரான செயல் மட்டுமல்லாமல், அடிப்படை உரிமைகளை மீறிய செயல் என்றும் குறிப்பிட்டார். இந்த தீர்மானம் நிறைவேற்றியது தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கமளிக்கும்படி மனு தாரரான கிராம பஞ்சாயத்து தலைவரான மோகன் என்பவருக்கு நீதிபதி உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நைனார்குப்பம் ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்றிய கிராம பஞ்சாயத்து தலைவர் மோகன் நேரில் ஆஜராகி வருத்தம் தெரிவித்தார். இதனை தொடந்து வழக்கில் உத்தரவு பிறப்பிப்பதற்காக விசாரணை நாளை மறுநாள் ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.