பெங்களூரு: நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கொலை செய்து அவரின் தலையுடன் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்த வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பெங்களூரு, ஆனேக்கல் சூரியா நகர் போலீஸ் சரகம் காசனாயகனஹள்ளி பகுதியை சேர்ந்தவர் சங்கர், (26). தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறார். அப்போது ஹெப்பகோடியை சேர்ந்த மானசா (26) உடன் பழக்கம் ஏற்பட்டது. இரண்டு பேரும் திருமணம் செய்து கொண்டனர். நான்கு வருட திருமண வாழ்க்கையில் ஒரு குழந்தையும் பிறந்துள்ளது.
இந்நிலையில் மானசாவுக்கும் முகிலன் என்பருக்கும் பழக்கம் ஏற்பட்டது. கடந்த 3ம் தேதி, இரவு கள்ளக்காதலன் முகிலன், மானசாவை சந்திப்பதற்கு வந்துள்ளார். இதை முன்கூட்டியே எதிர்பார்த்த சங்கர் இரவு 1 மணி அளவில் வீட்டிற்கு வந்த போது இரண்டு பேரும் கையும் களவுமாக சிக்கிக்கொண்டனர். முகிலன் தப்பி ஓடிய நிலையில் மானசாவை வீட்டை விட்டு வெளியே சென்றுவிடு என்று சங்கர் கூறியுள்ளார். ஆனால், மானசா மறுக்கவே ஆத்திரம் அடைந்த சங்கர் மனைவியின் கழுத்தை தனியாக வெட்டி எடுத்துள்ளார். மானசா உடலில் இருந்து ரத்தம் பீறிட்டதையும் பொருட்படுத்தாத சங்கர் மானசாவின் தலையுடன் போலீஸ் நிலையத்திற்கு சென்று சரண் அடைந்தார்.