தென்காசி: தென்காசி அடுத்த சாம்பவர் வடகரையைச் சேர்ந்தவர் முருகன் (46). கூலி தொழிலாளியான இவர் கடந்த 15ம் தேதி இரவு 11 மணியளவில் உடையார் தெரு ரயில்வே கேட் பகுதியில், ஓடி வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு ட்ரம் செட் வாசிக்கும் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் அடங்கிய குழுவினர், அவரை வழிமறித்து திருடன் என நினைத்து சரமாரியாகத் தாக்கினர். இதில் படுகாயமடைந்த முருகன் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து விசாரணை நடத்திய தென்காசி ரயில்வே போலீசார், தாக்குதலில் ஈடுபட்டதாக சிறுவர்கள் 8 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இவர்களில் 5 பேரை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பாளையங்கோட்டையில் உள்ள சிறுவர் கூர் நோக்கு இல்லத்தில் அடைத்தனர். மேலும் 3 பேரை தேடி வருகின்றனர்.
இதுகுறித்து தென்காசி ரயில்வே போலீசார் கூறுகையில் ‘‘ கூலித் தொழிலாளி முருகன், கையில் கொஞ்சம் பணம் வைத்திருந்துள்ளார். அப்பகுதியில் சுற்றித்திரிந்த மாற்று பாலினத்தவர்களிடம் இருந்து தப்பிக்கும் பொருட்டு ஓடிக் கொண்டிருந்தார். ஆனால், இதைப் பார்த்த ட்ரம் செட் வாசிக்கும் குழுவைச் சேர்ந்த சிறுவர்கள், திருட்டு அல்லது வேறு ஏதேனும் பிரச்னை காரணமாக முருகன் ஓடிவருவதாக நினைத்து கையாலும், கற்களாலும் சரமாரி தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த முருகன், மருத்துவமனையில் நேற்று உயிரிழந்தார். தாக்குதலில் ஈடுபட்ட சிறுவர்களில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர் இருவர் அடங்குவர்’’ என்றனர்.