அண்ணாநகர்: சென்னை திருமங்கலம் பகுதியை சேர்ந்தவர் கண்ணன் (32). பழ வியாபாரியான இவர், கடந்த 2000ம் ஆண்டு அதே பகுதியில் தள்ளுவண்டியில வாழைப்பழம் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது, ஆட்டோவில் வந்த 6 பேர், கண்ணனை கத்தி முனையில் மிரட்டி, தள்ளுவண்டியில் இருந்த பழங்கள் மற்றும் கல்லா பெட்டியில் இருந்த 1000 ரூபாயை பறித்து சென்றனர். இதுகுறித்த புகாரின்பேரில், திருமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து, சேத்துப்பட்டு பகுதியை சேர்ந்த விஜயகுமார் (49) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த விஜயகுமார், வழக்கு சம்பந்தமாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல், 23 வருடமாக தலைமறைவானார். அவரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்பேரில், உதவி ஆணையர் பரமானந்தம் மற்றும் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ரத்தினகுமார் தலைமையில் தனிப்படை போலீசார், தலைமறைவான விஜயகுமாரை தேடி வந்தனர். விசாரணையில் அவர், இரவு நேரங்களில் ரகசியமாக வீட்டிற்கு வந்து செல்வது தெரியவந்தது. இதையடுத்து, நேற்று முன்தினம் நள்ளிரவு சேத்துப்பட்டு பகுதியில் உள்ள விஜயகுமார் விட்டை சுற்றி ரகசியமாக கண்காணித்து வந்தனர். அப்போது யாருக்கும் தெரியாமல் வீட்டிற்கு வந்த விஜயகுமாரை, போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். பின்னர் அவரை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.