திருமலை: ஆந்திர மாநிலம், விஜயநகரம் மாவட்டம் பாபிலி நகரைச் சேர்ந்தவர் சீரா ஸ்ரீனிவாச ராவ் (50). இவருக்கு அருகே உள்ள அலஜங்கி கிராமத்தில் சொந்தமான விவசாய நிலம் உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் தனது வீட்டை பூட்டிவிட்டு விவசாய நிலத்திற்கு சென்று அங்கேயே தங்கி விவசாய பணிகளில் ஈடுபட்டிருந்தார். இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன் அங்கு வந்த ஒரு மர்ம ஆசாமி சீரா ஸ்ரீனிவாச ராவ் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றார். அங்கிருந்த வெள்ளி மற்றும் பித்தளைப் பொருட்களை திருடிய அவர், அதனை வெளியே எடுத்துச்சென்று விற்றுள்ளார்.
இந்த பணத்தில் உணவு வாங்கிக்கொண்டு மீண்டும் அந்த வீட்டுக்கு வந்து நோட்டமிட்டுள்ளார். ஆனால் யாரும் வராததால் அந்த வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர், உணவை சாப்பிட்டுள்ளார். இரவு மீண்டும் மது வாங்கிக்கொண்டு வந்து குடித்துவிட்டு அங்கேயே படுத்து குறட்டை விட்டு தூங்கியுள்ளார். இவ்வாறு கடந்த 3 நாட்களாக வீட்டில் இருக்கும் பொருட்களை ஒவ்வொன்றாக எடுத்துச்சென்று விற்றுவிட்டு இரவில் மது குடித்து தங்கியிருந்தார். இந்நிலையில் பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் வெளியூர் சென்றுவிட்டு நேற்றுமுன்தினம் வீடு திரும்பினர்.
அப்போது ஸ்ரீனிவாசராவ் வீட்டில் மர்ம நபர் வந்து செல்வதை பார்த்த அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. தொடர்ந்து அவரை கண்காணித்து, ஸ்ரீனிவாசராவுக்கும் போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். இதையடுத்து அன்றிரவு போலீசார், ஸ்ரீனிவாசராவ் வீட்டுக்கு வந்தனர். அங்கு மது குடித்துவிட்டு குறட்டை விட்டு தூங்கிக்கொண்டிருந்த திருடனை எழுப்பி கைது செய்தனர். விசாரணையில், 3 நாட்களாக னிவாசராவ் வீட்டில் திருடிய பொருட்களை விற்று சாப்பிட்டு பின்னர் மது அருந்தி இங்கு வந்து தூங்கியதாக அந்த நபர் தெரிவித்துள்ளார்.