மதுராந்தகம்: மதுராந்தகம் அடுத்த முதுகரை முதல் கிழக்கு கடற்கரை சாலை பகுதியான கடலூர் கிராமம் வரை மாநில நெடுஞ்சாலை சார்பில் விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால், நெடுஞ்சாலையின் இருபுறமும் அமைந்துள்ள ஆலமரம், அரசமரம், வேப்பமரம், பனைமரம், புளியமரம் போன்ற பசுமை நிறைந்த 100க்கும் மேற்பட்ட மரங்களை நெடுஞ்சாலை துறையினர் அடியோடு வெட்டி அகற்றி வருகின்றனர்.
இந்நிலையில், மரங்கள் வெட்டப்பட்டதை கண்டித்தும், மரங்களை வெட்டி சாய்க்காமல் வேரோடு பிடுங்கி பள்ளிகள், குளம், பூங்காக்கள், நீர் பிடிப்பு பகுதிகள் மற்றும் அரசு புறம்போக்கு நிலங்கள் போன்ற பகுதிகளில் நட வேண்டி வலியுறுத்தியும், அடியோடு வெட்டி சாய்க்கப்பட்ட மரங்களுக்கு இறுதி அஞ்சலி தெரிவிக்கும் வகையில் செங்கல்பட்டு தெற்கு மாவட்ட பசுமைத்தாயகம் சார்பாக வெட்டப்பட்ட மரங்களுக்கு மாலை அணிவித்து, மெழுகுவர்த்தி ஏற்றி பால் ஊற்றி இறுதி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி கீரல்வாடி கிராமத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது.
இந்த போராட்டத்திற்கு பசுமைத்தாயகம் செங்கல்பட்டு தெற்கு மாவட்ட தலைவர் ஓட்டகோயில் சுரேஷ் தலைமை தாங்கினார். நிகழ்வில், பசுமைத் தாயகம் மாநில துணை செயலாளர் கண்ணன் செங்கல்பட்டு தெற்கு மாவட்ட பா.ம.க செயலாளர் குமரவேல், லத்தூர் தெற்கு ஒன்றிய செயலாளர் மோகனரங்கம், எடையாளம் அன்பு மற்றும் மாணவர் அணி மாவட்ட செயலாளர் வினோத்குமார், கிளியாநகர் சுரேஷ் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.