‘‘பாலியல் சீண்டல் வழக்கில் அக்கியூஸ்டை கைது செய்யாம இருக்க லகரம் வாங்கி மாட்டிக்கிட்ட விவகாரம் ரகசிய விசாரணை வரை போயிடுச்சாமே..’’ என்றபடி வந்தார் பீட்டர் மாமா.‘‘சேலம் மாநகரில் மூன்று லேடீஸ் போலீஸ் ஸ்டேசன் இருக்கு.. இதில் ஒரு ஸ்டேசனில் சர்ச்சைகளுக்கு எப்பவுமே பஞ்சமே இருக்காதாம்.. புகார் மனு கொடுக்க வருவோரிடம், பார்சல் டீ வாங்கி வருமாறு கூறி ரவுண்டு கட்டி குடிப்பாங்களாம்.. அதோடு பேப்பர் பண்டல், பேனா போன்றவற்றை கொத்துக்கொத்தாக வாங்கி வீட்டுக்கு கொண்டு போவதுடன், காசை கறப்பதற்கு நீண்டநேரம் உட்கார வச்சு விசாரிப்பாங்களாம்..
இது தொடர்பான விவகாரத்தில் அங்கிருந்த ஏட்டும், இன்சும் மாற்றப்பட்டாங்களாம்.. அதன்பிறகு சுமுகமாக போயிட்டிருந்த நிலையில், மீண்டும் மாநகரின் நடுவில் இருக்கும் அந்த ஸ்டேசனில் பூகம்பம் வெடித்திருக்காம்.. சமீபத்தில் பாலியல் சீண்டல் வழக்கில், அக்கியூஸ்டை கைது செய்யாமல் இருப்பதற்கு லகரம் பேசப்பட்டதாம்.. பசை கை மாறிய நிலையில், கொடுத்த வாக்குறுதியை அதிகாரி நிறைவேற்றினாராம்.. இந்த விவகாரம் உச்ச அதிகாரியின் காதுக்கு போயிருக்கு.. பார்க்க சாதுவாக இருக்கும் அந்த அதிகாரி, தப்புன்னு தெரிஞ்சி போச்சுன்னா எரிமலையா வெடிச்சிருவாராம்.. லீவு இடத்துக்கு வந்த அந்த இன்சை பிடிபிடியென பிடிச்சிட்டாராம்..
அவர் கொடுத்த கொடையில, மறுநாளே அந்த அக்கியூஸ்ட் ஜெயிலுக்கு போயிட்டதா காக்கிகள் சொல்றாங்க.. யானை வாயில போன கரும்பு திரும்புமா என்பது போல வாங்கிய காசு திரும்பலையாம்.. அதே நேரத்துல மேலிடம் ஆதரவு இல்லாம, ஒத்தை ஆளா அந்த இன்சால பெரும் தொகையை வாங்க முடியாதுங்குற சந்தேகம் உயரதிகாரிகளுக்கு எழுந்திருக்காம்.. அதுகுறித்து ரகசிய விசாரணை நடந்துக்கிட்டிருக்காம்.. இந்த விவகாரம் தான் மாநகர காக்கிகளிடையே ஒரே பேச்சா இருக்கு..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘கேஸ் போடாமல் மணல் கடத்தல்காரர்கள், சூதாட்டகாரர்களிடம் இருந்து கரன்சிகளை வாங்கி குவிக்கிறாராமே மற்றொரு காக்கி அதிகாரி..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘மன்னர் மாவட்டம் எல்லையில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் கனகு என தொடங்கும் பெயர் கொண்ட காக்கி எஸ்ஐ ஒருவர் பணியாற்றி வருகிறார். இங்கு இவர் சொல்வது போல் தான் நடக்க வேண்டும். அவரை மீறி எதுவும் நடக்க கூடதாம்.. மணல் கடத்துவது, சூதாட்டம் என சட்ட விரோத செயலுக்கு துணை போகும் அந்த காக்கி அதிகாரி, லாரி உரிமையாளர்களிடம் இருந்து கரன்சி வாங்கிக் கொண்டு அவர்கள் மீது எந்தவித கேஸ் போடாமல் அவர்களை காப்பாற்றி விடுவாராம்..
இவருக்கு மேல் உள்ள காக்கி இன்ஸ்கள், மணல் கடத்தல்காரர்கள் மற்றும் சூதாட்டகாரர்கள் மீது கேஸ் போட வேண்டும் என உத்தரவு பிறப்பித்தாலும் சம்பந்தப்பட்டவர்களுக்கு தகவல் தெரிவித்து அவர்களை எஸ்ஐ காப்பாற்றி அவர்களிடமிருந்து நற்பெயர் வாங்கிக்கொள்வாராம்.. காவல் நிலையத்தில் மேல்அதிகாரிகள் பேசுவதை ஒட்டுக்கேட்டு சம்பந்தப்பட்ட குற்ற வழக்கில் உள்ள ரவுடிகளிடம் தெரிவிக்கும்போது இதற்கு பெரிய அளவில் அவருக்கு கவனிப்பு நடக்குதாம்.. இவரது செயலை கண்டுபிடித்து அதனை தடுக்க இருக்கும் மேல் அதிகாரிகளை சம்பந்தமில்லாத பிரச்னைகளில் மாட்டிவிட்டு அவர்களை இடம் மாறுதல் செய்யும் அளவிற்கு அந்த எஸ்ஐ சிக்கல் ஏற்படுத்தி விடுவாராம்.. இதுபோல் இரண்டு இன்ஸ்கள், அந்த எஸ்ஐயால் இடம் மாறுதலாகி சென்று விட்டனராம்.. இந்த டாப்பிக் பற்றிதான் அந்த காவல் நிலைய காக்கிகளுக்குள்ளே பரபரப்பாக பேசப்படுகிறது..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘பலாப்பழக்காரர் ஊருல கூட்டம் நடத்த படாதபாடுபடும் சேலத்துக்காரரை அதிர்ச்சிக்கும், ஆத்திரத்திற்கும் ஆளாக்கிய தெர்மாக்கோல்காரர் பேசிய கதை தெரியுமா..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா. ‘‘தூங்கா நகரில் இலைக்கட்சியில் இரு மாஜிகள் மட்டுமல்லாது, செல்லமானவர், மருத்துவர் என அத்தனை முக்கிய நிர்வாகிகளுமே பல்வேறு நிலைகளில் தனித்தனிக் கோஷ்டியாக பிரிந்தே கிடப்பது அத்தனை பேருக்கும் தெரிந்த விஷயம்.
பலாப்பழக்காரரை கட்சிக்குள் கொண்டு வருவதில் கடுகளவும் விருப்பமில்லாமல் சேலத்துக்காரர் இருக்கும் நிலையிலும், தூங்கா நகரத்து இந்த நிர்வாகிகளில் சிலர் அவ்வப்போது பலாப்பழக்காரரருக்கு ஆதரவுக்கரம் நீட்டி பேட்டி தந்து, சேலத்துக்காரரை ஆத்திரத்திற்கு ஆளாக்கி வருவதும் நடக்குது.. முதலில் செல்லமானவரின் ஆதரவு பேட்டியை தொடர்ந்து, தெர்மாகோலும் ‘அண்ணன்’, ‘சார்’ என்று மரியாதைமிகு அடைமொழியில் பலாப்பழத்தையும், பரிசுப்பெட்டியையும் அழைத்தது கட்சிக்குள் புலம்பலை தந்திருக்கு.. இதற்கிடையில் ஹனிபீ மாவட்டத்தின் பலாப்பழக்காரரின் பிக் பாண்ட் ஊருக்கே போய் சேலத்துக்காரர் கூட்டம் நடத்தி ஆதரவு திரட்ட படாதபாடு பட்டிருக்கிறார்.
இந்நிலையில், தூங்கா நகரில் நேற்று முன்தினம் இரவு நடந்த பொதுக்கூட்டத்திலும் தெர்மாகோல்காரர், கட்சி பிரிந்திருந்தது, சேர்ந்தோம் சின்னம் கிடைத்தது. போட்டியிட்டு வென்று, இப்போது பிரிந்துள்ளோம். மீண்டும் எதுவும் நடக்கலாம்.. சேர்வோம்.. என்று பலாப்பழக்காரரை, பரிசுப்பெட்டிக்காரரை இணைப்பதைப் பூடகமாகப் பேசி கட்சி தொண்டர்களுடன், கட்சித் தலைமையான சேலத்துக்காரரையும் அதிர்ச்சிக்கும் ஆத்திரத்திற்கும் ஆளாக்கியுள்ளார்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘பட்டியல் சேகரிக்க உத்தரவால் அரசு துறைகளில் சலசலப்பு ஏற்பட்டு இருக்காமே எங்கேயாம்..’’ என்றார் பீட்டர் மாமா.‘‘ஆன்மிக பூமியான புதுச்சேரியில் அரசு துறைகளில் நீண்ட நாட்களாக காலி பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருக்கிறதாம்.. இதனால் பணிச்சுமை அதிகமாகி பணியாளர்கள் புலம்பி வருகிறார்களாம்.. தங்களது துறைகளில் நெருக்கடிகள் அதிகமாகவே, சிலர் மாதக்கணக்கில் விடுப்பில் இருந்து வருகிறார்களாம்.. ஆனால் விடுப்புக்கான காலக்கெடு முடிவடைந்த பிறகும் சிலர் தொடர்ந்து தங்களது அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி பணிக்கு திரும்பாமல் காலம் கடத்தி வருகிறார்களாம்..
இதனால் பணியில் உள்ள சக ஊழியர்களுக்கு பணிச்சுமை அதிகமாகவே இவ்விவகாரத்தை தங்களது ஆதரவு சங்கங்களின் கவனத்துக்கு கொண்டு சென்று முறையிட்டார்களாம்.. இதன் எதிரொலியாக அரசு துறைகளின் முதன்மை அதிகாரியானவர், பணிக்கு திரும்பாமல் உள்ளவர்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்தி நடவடிக்கை எடுக்க தடாலடியாக உத்தரவுகளை பிறப்பித்தாராம்.. இதன் காரணமாக அரசின் பல்வேறு துறைகளில் நீண்ட விடுப்பில் சென்றவர்களின் பட்டியல் சேகரிக்கப்பட்டு வருகிறதாம்.. இது அரசுத்துறை வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்காம்..’’ என்று முடித்தார் விக்கியானந்தா