நெல்லை: ‘பாஜ கூட்டணியில் இருந்து அதிமுக விலகியதால் பலர் அச்சப்படுகின்றனர். தேசிய கட்சிகள் மாறி, மாறி மத்தியில் ஆட்சி அமைக்கும்’ என எடப்பாடி பழனிசாமி பேசினார். சங்கரன்கோவிலில் அதிமுக 52வது ஆண்டு துவக்கவிழா பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமை வகித்தார். கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி பேசியதாவது; அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது. பொதுமக்களுக்கு நன்மை செய்யும் கட்சியாக அதிமுக இருந்து வருகிறது. பாஜ கூட்டணியில் இருந்து அதிமுக விலகியதால் பலர் அச்சப்படுகின்றனர். தேசிய கட்சிகள் மாறி, மாறி மத்தியில் ஆட்சி அமைக்கும். மக்களவை தேர்தலில் சிறப்பான கூட்டணி அமைத்து 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம். அதிமுக யாருக்கும் அஞ்சியதில்லை. எந்த தேர்தல் வந்தாலும் அதிமுக வெற்றி பெறும். மக்களவை தேர்தல் இதற்கு அச்சாணியாக அமையும். இவ்வாறு அவர் பேசினார்.
பாஜவுடன் அதிமுக கூட்டணியில் இருந்த நிலையில், தன்னுடைய நிலையை மறந்து பாஜவுக்கு அதிமுக தலைவர்கள் காவடி தூக்கி கொண்டு இருந்தனர். இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திய பாஜ, அதிமுகவை பிளாக் மெயில் செய்து தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. இந்நிலையில், தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை தொடர்ந்து அண்ணா, ஜெயலலிதா போன்ற தலைவர்களை பற்றி தரக்குறைவாக விமர்சித்து, அதிமுக ஊழல் பட்டியலை வெளியிடுவதாக மிரட்டியதால் கூட்டணியில் இருந்து விலகுவதாக அதிமுக அறிவித்தது. இந்நிலையில், சென்னையில் நேற்று முன்தினம் பூத் கமிட்டி பொறுப்பாளர்களுடன் ஆலோசனை நடத்திய எடப்பாடி, ‘இனி எந்த காலத்திலும் பாஜவுடன் அதிமுக கூட்டணி வைக்காது என்று மக்களிடம் எடுத்து சொல்லுங்கள்’ என்று தெரிவித்திருந்தார். இதன் தொடர்ச்சியாக திண்டுக்கலில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய திண்டுக்கல் சீனிவாசன், ‘பாஜ என்ற சைத்தான் வெளியேறியது மகிழ்ச்சி’ என்று பேசி இருந்தார். இந்த சூழலில், மத்தியில் பாஜ ஆட்சி நடந்து வரும் நிலையில், பாஜ கூட்டணியில் இருந்து அதிமுக விலகிய நிலையில் மோடி பெயரை பயன்படுத்தாமல் தேசிய கட்சிகள் மாறி, மாறி மத்தியில் ஆட்சி அமைக்கும் என எடப்பாடி பழனிசாமி பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.