Thursday, February 29, 2024
Home » எதிர்வினை உண்டு

எதிர்வினை உண்டு

by Ranjith

கடந்த 2020ம் ஆண்டு பீகாரில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் பாஜ, ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று நிதிஷ்குமார் முதல்வரானார். அதன் பிறகு பாஜவுடன் அதிருப்தி ஏற்பட்டதால், 2022ல் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகினார். ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் அடங்கிய மெகா கூட்டணியில் இணைந்து பீகாரில் புதிய ஆட்சியை அமைத்தார். அப்போது நிதிஷ்குமார் பேசும்போது, உயிரே போனாலும் பாஜவுடன் கூட்டணி வைக்க மாட்டேன், என்றார்.

வரும் மக்களவை தேர்தலில், எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து, பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை வீழ்த்தி தேசிய அரசியலில் முக்கிய பங்காற்ற நிதிஷ்குமார் விரும்பினார். எதிர்க்கட்சி தலைவர்கள் பலரது முயற்சியில் இந்தியா கூட்டணி உருவானது. இந்நிலையில், பீகாரில் 2 முறை முதல்வராக இருந்த கர்ப்பூரி தாக்கூருக்கு பாரத ரத்னா விருதை ஒன்றிய அரசு அறிவித்தது. இவர் பீகாரில் மக்கள் தலைவர் என அனைத்து தரப்பு மக்களாலும் அழைக்கப்பட்டவர். பாஜவின் அடுத்தடுத்த செயல்பாடுகள் எல்லாம் மக்களின் வாக்கு வங்கியை கவரும் வகையில் இருந்தது.

நிதிஷ்குமார் செயல்பாடுகளால், கடந்த 2 நாட்களாக பீகாரில் அரசியலில் ஸ்திரத்தன்மை நிலவியது. உயிரே போனாலும் கூட்டணி வைக்க மாட்டேன் எனக்கூறிய அவர், பாஜவுடன் ரகசிய பேச்சு நடத்தினார். தொடர்ந்து நேற்று முன்தினம் காலையில் நிதிஷ்குமார், ராஜினாமா செய்தார். மாலையில் பாஜவை சேர்ந்த 2 துணை முதல்வருடன் மீண்டும் முதல்வராக பதவியேற்றார். நிதிஷ்குமார் கடந்த 10 ஆண்டுகளில் 7வது முறையாக கூட்டணியை மாற்றியுள்ளார். ஆரம்ப வரலாறும் மோசமாக உள்ளது.

முன்னாள் ஒன்றிய அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டசின் சமதா கட்சியில் நிதிஷ்குமார் இருந்தார். பின்னர் ஐக்கிய ஜனதா தளத்துடன் இணைந்தார். மீண்டும் சமதா கட்சிக்கு வந்தார். மீண்டும் ஐக்கிய தளத்துடன் ஐக்கியமானார். இதுபோன்று கொள்கை, கோட்பாடு இல்லாமல் முதல்வர் பதவிக்காக அடிக்கடி கூட்டணி மாறியது அரசியல் தெரியாத மக்கள் மனதில் வெறுப்பை ஏற்படுத்தியது. அடிக்கடி கட்சி மாறுபவர்களும், பதவிக்காக கூட்டணி மாறியவர்களின் நிலையை பார்த்தால் மக்களின் பார்வையில் இருந்து காணாமல் போனதாக தான் வரலாறு உண்டு.

தமிழகத்தில் பாஜவை வளர்க்க, அதிமுகவை உடைத்து பல அணிகளை உருவாக்கி உள்ளது. மோடி நினைத்து இருந்தால் எப்போதே அதிமுகவை ஒருங்கிணைத்து இருக்கலாம். அவ்வாறு ஒருங்கிணைத்து இருந்தால் பாஜவை தமிழகத்தில் வளர்க்க முடியாது என்பது அவருக்கு தெரியும். இதுபோன்று நிதிஷின் சுயரூபத்தை அறிந்த பாஜ, அவரது கட்சியில் உள்ள நிர்வாகிகளையும் தொண்டர்களையும் ஆக்டோபஸ் போன்று விழுங்கும் காலம் வெகுதொலைவில் இல்லை.

பாஜ கூட்டணியில் பெரிய கட்சிகள் எதுவும் இல்லை. ஆனால் இந்தியா கூட்டணியில் பல்வேறு மாநிலங்களில் உள்ள பெரிய கட்சிகள் அணிவகுத்தன. இது பாஜவின் கண்ணை உறுத்தியது. அதனால் இந்தியா கூட்டணியில் இருந்து ஐக்கிய ஜனதா தளத்தை உடைத்தது. வரும் மக்களவை தேர்தலுக்குள் பல கட்சிகளை உடைக்க குதிரை பேரத்தில் பாஜ ஈடுபடும். ஒவ்வொரு மாநிலத்தில் உள்ள சிறிய கட்சிகளை வளைத்து போடும்.

இந்தியா கூட்டணியில் இருந்து அறிவிக்கப்படும் பிரபலமான வேட்பாளர்களையும் கடைசி நேரத்தில் பாஜ வளைத்து போடும் வேளையில் இறங்கும் என அரசியல் வல்லுநர்கள் அடித்து கூறுகின்றனர். ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு என்பது நியூட்டனின் மூன்றாம் விதி. இதுபோன்று பாஜவின் அரசியல் தந்திரங்கள், ஆள்பிடிக்கும் வேலை ஆகியவை எதிர்காலத்தில் எதிர்வினையை ஏற்படுத்தும் என்பது ஐயமில்லை.

You may also like

Leave a Comment

one × four =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi