நன்றி குங்குமம் தோழி
(5000த்துக்கும் அதிகமான மாற்றுத்திறனாளிகளுக்கு கார் ஓட்ட கற்றுக்கொடுத்த ஜெயா ஜெய் கிஷன்)
“என்னால காரை ஓட்ட முடியாதுன்னு பயந்து கிட்டே இருந்தேன் மேடம்… சே! இவ்வளவுதானா? இதை எப்பவோ கற்றுக்கொண்டிருக்கலாமே!” அந்த பரிதவிப்பும், பின்னர் ஏற்பட்ட
சுதந்திர உணர்வும், அதே முகத்தில் விரிந்த எல்லையற்ற சந்தோஷமும்! அதுதான் ஜெயா ஜெய் கிஷன் ஒவ்வொரு மாற்றுத்திறனாளிக்கும் கொடுத்திருக்கும் மகிழ்ச்சி!10 ஆண்டுகளுக்கு முன் நாம் பார்த்ததைவிட, இன்று மாற்றுத் திறனாளிகள் நிறையவே கார் ஓட்டுகிறார்கள்.
நார்மலாக உள்ளவர்களுக்கு டிரைவிங் சொல்லித்தர ஓட்டுநர் பயிற்சி பள்ளிகள் பல இருக்க, மாற்றுத்திறனாளிகள் எப்படி கார் ஓட்டுகிறார்கள்? யார் அவர்களுக்கு கார் ஓட்ட கற்றுத் தருகிறார்கள்? ஓட்டுநர் உரிமத்தை எப்படி பெறுகிறார்கள்? இவற்றுக்கான பதில்களை விரிவாக நம்மிடம் பேசத் தொடங்கினார், 15 ஆண்டுகளுக்கு மேலாக மாற்றுத்திறனாளிகளுக்கு கார் ஓட்டக் கற்றுத்தரும் சிங்கப் பெண் ஜெயா ஜெய் கிஷன்.
‘‘ஆரம்பத்தில் எனக்கு சைக்கிள் ஓட்டக்கூடத் தெரியாது. என் மகள் பள்ளி செல்லத் தொடங்கியதும்தான் சைக்கிள் ஓட்டவே கற்றுக்கொண்டேன். பிறகு ஸ்கூட்டரை ஓட்டும் போது ரெக்கை முளைத்த உணர்வுதான். அப்படியே என் கணவர் மூலமாக கார் ஓட்டவும் கற்றுக்கொண்டேன். மாற்றுத்திறனாளிகள் தாங்களாகவே வாகனங்களை ஓட்டுகிற மாதிரி, வாகன மறு உருவாக்கப் பணிகளை செய்யும் (retrofit) வாரி இஞ்சினியரிங் வொர்க்ஸ் நிறுவனத்தை சென்னை மாதவரத்தில் 20 ஆண்டுகளாக நடத்தி வருகிறார் என் கணவர் சங்கர் ஜெய் கிஷன்.
பைக் ஓட்டுவது மாதிரியே காரை ஓட்டினால் எப்படி இருக்கும் அப்படித்தான் மாற்றுத்திறனாளிகள் கார் ஓட்டுவதும். நார்மலாக இருப்பவர்கள் பிரேக், ஆக்ஸிலேட்டரை கால்களால் அழுத்தினால், மாற்றுத்திறனாளிகள் கைகளால் இயக்குவார்கள்… அவ்வளவுதான். அதற்கேற்ப கார் மாடிஃபிகேஷன் வேலைகளை என் கணவர் சிறப்பாகவே செய்து தருகிறார். எப்படியான குறைபாடுகளுடன் மாற்றுத் திறனாளி வந்தாலும், அவர்களுக்கான சர்போர்ட் சிஸ்டத்தை உருவாக்கிக் கொடுத்துவிடுவார் என்பதால், என் கணவரைத் தேடி மாற்றுத்திறனாளிகள் அதிகம் வரத் தொடங்கினர்.
ஓட்டத் தயாராகி நிற்கும் கார்களை, மாற்றுத்திறனாளிகளிடம் நேரில் டெலிவரி செய்ய முடியாதபடி, எந்த நேரமும் அவர் பிஸியாகவே இருந்ததால், கார் டெலிவரி செய்யும் வேலையை நான் எடுத்து செய்யத் தொடங்கினேன். இப்படியாகத்தான் இந்தப் பணியை நான் சுவீகாரம் எடுத்துக் கொண்டேன்’’ என புன்னகையை முகத்தில் தவழவிடும் ஜெயா, ‘‘அப்படியே மாற்றுத்திறனாளிகளுக்கு கார் டிரைவிங், ட்ரை வீலர் டிரைவிங் போன்றவற்றையும் சொல்லிக் கொடுக்கத் தொடங்கியிருக்கிறார். இன்று அதுவே எனக்கான பாஷனாய் மாற, இதுவரை 5000க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் என்னால் கார் ஓட்டுகிறார்கள்’’ என கட்டை விரல் உயர்த்தி அதே இயல்பான புன்னகையை முகத்தில் வெளிப்படுத்துகிறார் ஜெயா.
‘‘மாற்றுத்திறனாளிகள் முக்கிய பிரச்னையே மொபிலிட்டிதான். காரை அவர்களே ஓட்ட ஆரம்பித்ததும், உலகம் உள்ளங்கைக்குள் வந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். அவர்கள் முகத்தில் மகிழ்ச்சியை பார்க்கும் போது, நம்மையும் அது தொற்றிக்கொள்ளும்’’ என்றவர், குறிப்பாக ஒரு பெண் மாற்றுத் திறனாளியாக இருந்தால், தடைகளைத் தகர்த்து, வெளியில் வருவது சுலபமில்லை. ‘‘ஆண்களை நம்பி டிரைவிங் பழக அனுப்பவும் பெற்றோருக்கும் தயக்கம் இருக்கும். மேலும் வாகன இரைச்சல், சாலை நெருக்கடி இவற்றுக்கு பழக்கமின்மையால் திடீரென டிரைவர் இருக்கையில் அமர்த்தினால் பயந்துவிடுவார்கள். இந்தப் பிரச்னைகளை நான் அசால்டாக சரி செய்கிறேன்’’ என்கிற ஜெயா, மாற்றுத்திறனாளி பெண்களின் வீட்டுக்கே சென்று, அவர்கள் வீட்டிலேயே தங்கி, கார் ஓட்டப் பழக்கப்படுத்தி கொடுக்கிறார்.
‘‘ஒவ்வொரு மாற்றுத்திறனாளியின் உடல்ரீதியான பிரச்னை மாறுபடும் என்பதால், அவர்களின் பிரச்னைக்கு ஏற்ப காரை வடிவமைத்து அந்தக் காரிலேயே ஓட்ட பயிற்சியும் வழங்குகிறோம். நெருக்கடி மிகுந்த சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகளில் பயமின்றி ஓட்டும் வரை அவர்களோடு நான் இருப்பேன்’’ என்கிறார் ஜெயா.‘‘மாற்றுத்திறனாளி வெளியூர் நபர் எனில், என் கணவர் காரை மாடிஃபிகேஷன் செய்து முடித்ததுமே, அவர்கள் ஊருக்கே காரை எடுத்துச் சென்று, பயிற்சி கொடுத்து, தைரியமாக ஓட்ட வைத்த பிறகே ஊர் திரும்புவேன். இதற்காக தமிழ்நாட்டில் நான் பயணிக்காத ஊர்களே இல்லை. திருச்சி, தஞ்சாவூர், மதுரையில் தொடங்கி பெங்களூர், மங்களகிரி, மசூலிப்பட்டிணம் வரை ஆயிரக்கணக்கான கிலோ மீட்டரை கடந்திருக்கிறேன். பயணங்கள்தான் எனக்குப் பிடித்த விஷயம், அதேநேரம் இயற்கையை ரசிக்கலாமே’’ என்கிறார் புன்னகைத்து.
‘‘மாற்றுத்திறனாளிகளுக்கு கார் ஓட்டக் கற்றுக் கொடுப்பது எளிமையான விஷயம். காரணம், அவர்கள் கற்பனையிலே கார்களை ஓட்டிப் பார்ப்பதால், அந்தக் கனவுகளை சுமந்து கொண்டுதான் வருவார்கள். ஸ்டார்டிங் மட்டும்தான் அவர்களுக்கு பயமிருக்கும். பிறகு கூலாகி ஓட்டத் தொடங்குவார்கள். இறுதியில் நம்பிக்கையோடு அவர்கள் ஓட்டுவதைப் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கும். ஒருவர் மாற்றுத்திறனாளியாக இருப்பதாலே, அவர் வீட்டுக்குள்ளேயே அடைபட்டு கிடக்க வேண்டிய அவசியம் இல்லையே. அவர்களுக்கான தடைகளை நீக்கினாலே, நாம் பார்த்து ரசிக்கும் உலகை அவர்களும் ரசிப்பார்கள்தானே’’ என்றவாறு விடைபெற்றார்.
நான் ஸ்டாப்பாக பைக் ஓட்டுவேன்! – சங்கர் ஜெய் கிஷன்
‘‘நான் ஒரு பைக்கர். நான் ஸ்டாப்பாக இரண்டாயிரம் கிலோ மீட்டர் கூட பைக் ஓட்டுவேன். இந்த நிலையில் தவழும் நிலையில் இருந்த என் மாற்றுத்திறனாளி நண்பனுக்காக ஒரு ட்ரை வீலரை வடிவமைத்து அவனோடு இமயமலை வரை சென்றுவந்தேன். இந்த செய்தி ஊடகங்களில் வெளியாக, இதைப்பார்த்த மாற்றுத்திறனாளிகள் என்னைத் தொடர்பு கொள்ளத் தொடங்கினர். என் நண்பனைப் போல அவர்களும் மகிழ்ச்சியாக வலம் வரட்டுமே என முடிவு செய்து, சிறிய அளவிலான வொர்க் ஷாப்பினை தொடங்கினேன்.
கார் ஓட்டுவதை ஒரு மாற்றுத்திறனாளி புரிந்துகொண்டாலே போதும். வாகனத்தை இயக்க வைப்பது அவர் மூளைதான். மூளையிடும் கட்டளைகளை செய்வதுதான் கை, கால்கள். எனவே, கால் செயல் திறன் இல்லாதவருக்கு கைகளிலே வாகனம் இயக்கவும், இடது கை செயலிழந்தவர்களுக்கு வலது கையிலும், வலது கை செயலிழந்தவர்களுக்கு இடது கையிலுமாக மாற்றத்தை செய்து கொடுக்கிறேன்.
நானோவில் தொடங்கி மெர்சிடிஸ் பென்ஸ், ரேன்ஞ் ரோவர் வரை எந்தக் காரை வேண்டுமானாலும் மாடிஃபிகேஷன் செய்ய முடியும். இனோவா, பார்சுனர், ஆல்கஷார், எஸ்யூவி 500 போன்ற பெரிய சைஸ் வண்டிகளையும் அசால்டாக ஓட்டுகிற மாற்றுத்திறனாளி நண்பர்கள் இருக்கிறார்கள்.’’
மாற்றுத்திறனாளி ஓட்டுநர் உரிமம் பெற
* கண் பார்வை முற்றிலும் இருந்தாலே போதும்.
* செவி 50% கேட்புத்திறன் இருந்தாலே போதும்.
* K.K.நகர் புனர்வாழ்வு மையத்தில் ஆர்த்தோ சான்று பெறவேண்டும்.
* மாற்றுத்திறனாளி அடையாளச் சான்றிதழ் அவசியம்.
* ரெட்ரோபிட் செய்த காருடன் RTOவில் பதிவு செய்ய வேண்டும்.
* 40% மேல் மாற்றுத்திறன் உள்ளவர்களுக்கு ஜிஎஸ்டி விலக்கு, RTO பதிவுத்தள்ளுபடி, FASTag டோல் சலுகை உண்டு.
* LLR பெற்று கார் பழகிய பிறகு ஓட்டுநர் உரிமம் பெற விண்ணப்பிக்கலாம்.
தொகுப்பு: மகேஸ்வரி நாகராஜன்
படங்கள்: அருண்