திருவள்ளூர்: திருவள்ளூரில் உள்ள ஸ்ரீ வைத்திய வீரராகவப் பெருமாள் கோயிலில் மாசி மாத தெப்ப உற்சவம் நாளை தொடங்கி, தொடர்ந்து 3 நாட்களுக்கு நடைபெற உள்ளது. திருவள்ளூரில் உள்ள ஸ்ரீ வைத்திய வீரராகவர் பெருமாள் திருக்கோயில் 108 திவ்ய தேசங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற திருத்தலமாகும். அந்த வகையில் இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசி மாத தெப்ப உற்சவம் 3 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதேபோல், இந்த ஆண்டுக்கான மாசி மாத தெப்ப உற்சவம் நாளை தொடங்குகிறது. தொடர்ந்து மார்ச் 1ம் தேதி வரை 3 நாட்ளுக்கு நடைபெற உள்ளது.
இந்த விழாவை முன்னிட்டு நாள்தோறும் கோயிலில் இருந்து ஸ்ரீ வைத்திய வீரராகவ பெருமாள் ஸ்ரீதேவி, பூ தேவி சமேதராய் குளத்திற்கு புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து அங்கு சமேதராய் வீற்றிருக்கும் வீரராகவருக்கு சிறப்பு பூஜை மற்றும் தீப ஆராதனை நடத்தப்பட்டு மின் அலங்காரம் செய்யப்பட்ட தெப்பத்தில் 3 முறை உலா வரும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த தெப்பத்திரு விழாவில் திருவள்ளூர் மட்டுமல்லாது சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்வார்கள். இதற்கான முன்னேற்பாடு பணிகளை கோயில் கவுரவ ஏஜென்ட் ஸ்ரீ ரங்கநாதன், மக்கள் தொடர்பு அலுவலர் சம்பத் மற்றும் கோயில் அலுவலர்கள், பணியாளர்கள் செய்து வருகின்றனர்.