திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர தெப்பல் உற்சவம் கடந்த 9ம்தேதி தொடங்கியது. 5 நாட்கள் நடக்கும் இந்த உற்சவத்தில் சீதா, கோதண்டராம சுவாமியுடன் லட்சுமணரும், ருக்மணி சமேத ஸ்ரீகிருஷ்ணர், ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமிகள் ஆகியோர் வலம் வந்தனர்.
4ம் நாளான நேற்று அலங்கரிக்கப்பட்ட தெப்பலில் ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி ஐந்து சுற்றுகள் குளத்தை சுற்றி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். அப்போது தெப்பக்குளத்தை சுற்றி அமர்ந்திருந்த ஏராளமான பக்தர்கள் கற்பூர ஆரத்தி காட்டி தரிசனம் செய்தனர்.
இந்நிலையில் தெப்பல் உற்சவ 5ம் நாளான இன்றிரவு ஸ்ரீதேவி பூதேவியுடன் மலையப்ப சுவாமி வலம் வர உள்ளார். இன்றுடன் தெப்பல் உற்சவம் நிறைவு பெறுகிறது. திருமலை ஏழுமலையான் கோயிலில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமியன்று கருடசேவை நடப்பது வழக்கம். அதன்படி மாசி மாத பவுர்ணமியொட்டி நாளை இரவு தங்க கருடவாகனத்தில் எழுந்தருளும் மலையப்ப சுவாமி மாடவீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.