Saturday, September 14, 2024
Home » நூற்றாண்டுகளாக வற்றாத திருஉத்தரகோசமங்கை தெப்பக்குளம் தண்ணீர் வெளியேற்றம்: கோயில் மராமத்து பணிக்கு ரூ.2 கோடி ஒதுக்கீடு

நூற்றாண்டுகளாக வற்றாத திருஉத்தரகோசமங்கை தெப்பக்குளம் தண்ணீர் வெளியேற்றம்: கோயில் மராமத்து பணிக்கு ரூ.2 கோடி ஒதுக்கீடு

by Neethimaan

ராமநாதபுரம்: திருஉத்தரகோசமங்கையில் ரூ.2கோடி மதிப்பில் மராமத்து பணிகள் நடந்து வருவதால், பல நூற்றாண்டுகளாக வற்றாமல் இருந்த கோயில் தெப்பக்குளம் சீரமைக்கும் பணிக்காக தண்ணீர் வெளியேற்றப்பட்டது. ராமநாதபுரம் அருகே திருஉத்தரகோசமங்கையில் 3 ஆயிரத்து 100 ஆண்டு பழமையான மங்களேஸ்வரி அம்மன் உடனுரை மங்களநாதர் திருக்கோயில் உள்ளது. சிவன் கோயில்களில் ஆதி சிதம்பரம் என அழைக்கப்படுகிறது. இங்குள்ள ஒற்றை பச்சை நிற மரகத கல்லால் ஆன நடராஜருக்கு ஆண்டுக்கு ஒருமுறை நடக்கக் கூடிய சந்தனம் காப்பு மற்றும் ஆருத்ரா தரிசனம் உலக புகழ்பெற்றது. இங்கு நாள்தோறும் உள் மாவட்ட மக்கள் மட்டுமின்றி தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்கள், வெளிமாநிலங்களை சேர்ந்த ஏராளமான ஆன்மீக சுற்றுலாபயணிகள் உள்ளிட்ட பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

இந்த கோயிலுள்ள மண்டபம், தூண்கள். சிலைகள், சிற்பங்கள் உள்ளிட்டவை கலை நுணுக்கங்களுடன் அழகிய சிற்ப வேலை பாடுகளுடன் அமைந்துள்ளது. புராணமும், புராதனமும் பின்னிப்பிணைந்த அற்புதமான இக்கோயிலில் பல அதிசயங்களும் நிறைந்து காணப்படுகிறது. அந்த வகையில் பல நூற்றாண்டுகளாக வற்றாமல் இருக்கிறது, கோயில் பகுதியில் அமைந்துள்ள ஆதிகங்கை என்ற அக்னி தீர்த்த தெப்பக்குளம். சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இக்கோயிலுக்கு பல்வேறு காலக்கட்டங்களில் மன்னர்கள் திருப்பணிகள் செய்துள்ளனர். திருவிளையாடல் புராணத்தில் வரும் வலைவீசும் படலம் எனும் சாபத்தால் மீனவ பெண்ணாக இருந்த பார்வதி தேவியை சிவப்பெருமான் வலை வீசி மீன்(திமிங்கலம்)பிடித்து, மனதில் புகுந்து ஆள்கொண்ட நிகழ்வு நடந்த இடம் என வரலாற்று ஆய்வுகளில் கூறப்படுகிறது.

அந்த வகையில் இங்கு கடல் இருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. இவற்றின் எச்சமாக மழை தண்ணீருடன், கடல் தண்ணீர் நிறைந்த தெப்பக்குளம் இன்றும் உள்ளது. பொதுவாக கோயில் தெப்பக்குளங்களில் நல்ல தண்ணீர் இருப்பது வழக்கம். ஆனால் இங்கு கடலில் உள்ள உப்புத்தன்மையுடன் கூடிய உப்புத் தண்ணீரே உள்ளது. மழை பெய்து குளம் பெருகினாலும் உப்புதன்மையுடனேயே இருக்கிறது. இந்த தெப்பக்குளம் ஆதிகங்கை என்றழைக்கப்பட்டுள்ளது.  இங்குள்ள தெப்பக்குளத்து கரையில் அமைந்துள்ள 3,100 ஆண்டு பழமையான இலந்தை மரத்தடியில் சமய குறவர்கள் நால்வரில் ஒருவரான திருவாசகத்தை இயற்றிய மாணிக்கவாசகர் உள்ளிட்ட 1000 முனிவர்கள் தவம் இருந்தனர். அப்போது குளத்தில் அக்னி பிழம்பாக சிவப்பெருமான் தோன்றியதாகவும், அதில் மாணிக்கவாசகரை தவிர்த்து மற்ற 999 முனிவர்கள் தீயில் மாண்டு,சிவப்பெருமானுடன் முக்தியடைந்ததால் ஆதிகங்கை, அக்னி தீர்த்தமாக மாறியதாக தல புராணம் கூறுகிறது.

இந்த தெப்பக்குளம் ராமேஸ்வரம், காசிக்கு நிகரான புனிதமான தீர்த்தமாக கருதப்படுகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் அவ்வபோது பருவமழை பொய்த்து போய் வறட்சி ஏற்படுவது வழக்கம். சில ஆண்டுகள் தொடர் வறட்சியும் ஏற்பட்டது. இத்தகைய சூழ்நிலையில் தண்ணீர் வற்றி அளவு குறைந்து காணப்படும். ஆனால் ஒருமுறை கூட குளத்து தண்ணீர் முழுமையாக வற்றியது கிடையாது என்கின்றனர். தெப்பக்குளத்தில் வாழக்கூடிய மீன்கள், நல்ல தண்ணீர் மற்றும் கடலில் வாழும் தன்மை கொண்டதாக இருப்பது ஆச்சரித்தை தருகிறது. இந்நிலையில் கோயிலுக்கு குடமுழுக்கு நடத்தி 12 வருடங்கள் கடந்து விட்டதால், இந்தாண்டு குடமுழுக்கு நடத்த திட்டமிட்டு, கடந்தாண்டு அக்டோபர் மாதம் பாலாலய பூஜைகள் நடத்தப்பட்டது. தொடர்ந்து சேதுபதி சமஸ்தானம், தேவஸ்தானம் சார்பில் உள்பிரகாரம் மண்டபங்கள், சிலைகள், சிற்பங்கள்,தூண்கள் உள்ளிட்டவற்றில் மராமத்து பணிகள், வண்ணம் பூசுதல் உள்ளிட்ட பணிகள் நடந்து வரும் தருவாயில் கோயிலுக்கு குடமுழுக்கு மற்றும் மராமத்து பணிகளுக்கு தமிழ்நாடு அரசு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ.2கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதனால் சுவாமி, அம்பாள் சன்னதிகளுக்கு முன்புள்ள ராஜகோபுரங்களுக்கு வண்ணம் பூசும் பணிக்காக கம்புகளால் சாரம் கட்டும் பணி துவங்கப்பட்டுள்ளது. பணி முடிந்து சுமார் 6 மாதங்களுக்குள் குடமுழுக்கு சிறப்பாக நடக்க உள்ளது. இந்நிலையில் கோயில் தெப்பக்குளத்தில் உள்ள குவிமாடங்களுடன் கூடிய கோபுர அமைப்புகனை உடைய மண்டபங்கள், படிக்கட்டுகள், சுற்றுச்சுவர்களில் சீரமைப்பு பணிகள் நடப்பதால், தெப்பக்குளத்தில் இருந்த தண்ணீர் பம்புசெட் குழாய் மூலம் முழுமையாக வெளியேற்றப்பட்டு தற்போது காலியாக இருக்கிறது. பல ஆண்டுகளாக தண்ணீருடன் பார்த்த தெப்பக்குளம் இன்று வற்றி காணப்படுவதால் பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர்.

பாண்டியர்கள் கால கட்டிடகலை
பொதுவாக கோயில்கள் 3 வகையில் சிறப்புபெறும். அந்த வகையில் மூர்த்தி(சுவாமி,அம்பாள்),தீர்த்தம்,விருட்சம் ஆகும். இத்தகைய சிறப்பு வாய்ந்த இக்கோயில் உள்ள தெப்பக்குளம் 4 ஏக்கரில் அமைந்துள்ளது. வாயிலில் சிற்பங்களுடன் கூடிய மண்டபம் உள்ளது. 16 பாறை படிகளால் அமைக்கப்பட்டு 40 அடி ஆழம் கொண்ட இந்த தெப்பக்குளம் 230 கனஅடி கொள்ளளவை கொண்டது. பெறும்பாலும் தெப்பக்குளங்களின் தரைப்பகுதி மண் பரப்பில் மட்டமாக இருப்பது வழக்கம். ஆனால் இந்த தெப்பக்குளம் வற்றிவிடக் கூடாது என்பதற்காக கிணறு போன்று இயற்கையாகவே தண்ணீர் ஊற்றுகள் அமைக்கப்பட்டுள்ளது. சிறந்த கட்டிட கலைக்கு உதாரணமாக விளங்குகிறது. ஊற்றுகளை சுற்றி கபாறைகள் போடப்பட்டு, மீன்களின் இருப்பிட வசதிக்காக வட்டவடிவிலான சிறிய பள்ளங்கள் ஆயிரக்கணக்கில் அமைக்கப்பட்டுள்ளது. சிறப்பு வாய்ந்த இந்த தெப்பக்குளம் பாண்டியர்கள் கால கட்டிடகலைக்கு எடுத்துக்காட்டாக விளக்குகிறது.

You may also like

Leave a Comment

two − one =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi