‘‘தீ பாவளி பண்டிகை வசூலுக்காக கல்லா கட்டியதை பொறி வைத்து பிடிச்சுதாமே லஞ்ச ஒழிப்புத் துறை..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘ஆமா..முத்துக்குளித்தலுக்கு பெயர் போன நகரத்தில் உள்ள பொதுப்பணித் துறை அலுவலகத்தில் தீபாவளி வசூல் கொடி கட்டிப் பறப்பதாக அந்த ஊரின் லஞ்ச ஒழிப்பு போலீசுக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தது. மாலை நேரத்தில் அதிரடியாக அங்குள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தின் உள்ளே லஞ்ச ஒழிப்புத் துறையினர் புகுந்தனர். அதன் பின்னர் யாரையும் வெளியில் செல்ல அனுமதிக்கவில்லை. அலுவலகத்தில் இருந்த பணியாளர்கள், உள்ளே வந்த பொதுமக்கள் என அனைவரையும் சோதனை செய்தனர். இதில் அலுவலக பணியாளர்களிடம் கத்தைகத்தையாக ரூ.2 லட்சம் சிக்கியது.
அதிகாரிகளை சந்திக்க வந்தவர்களிடம் ரூ.1.37 லட்சம் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. அவ்வளவும் 500 ரூபாய் நோட்டுக்கள். இந்த பணத்திற்கு கணக்கு இல்லை என்பதால் ரூ.3.37 லட்சத்தையும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அள்ளிச் சென்றனர். அதிகாரிகள் தப்பித்தோம், பிழைத்தோம் என இருந்தாலும் லஞ்ச ஒழிப்புத் துறை கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகிறதாம். யாரும் உளறிக் கொட்டி விடக் கூடாதே…..நம்ம தலை உருண்டு விடுமே என பொதுப்பணித்துறை அதிகாரிகள் கலக்கத்தில் இருக்கிறார்களாம். உப்பை தின்றால் தண்ணி குடித்து தானே ஆகனும்’’ என்றார் விக்கியானந்தா. ‘‘தென்மாவட்டம் என்றாலே திகில் ஆகிறாராமே சேலத்துக்காரர்..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘ஆமா.. கடந்த மார்ச் மாதம் வடமாநில நதியில் முடியும் நகரில் பொதுக்கூட்டம் நடத்துவதில் பெரும் போராட்டம் நடத்த வேண்டியிருந்தது. அதே தேதியில் தேனிக்காரர் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவெடுத்ததால் சட்டம், ஒழுங்கு பாதிக்குமென பிரச்னை எழுந்தது. நீதிமன்றம் வரை பிரச்னை போய் ஒருவழியாக ஒரே தேதியில் 2 சம்பவங்களும் நடந்தது. இதேபோல தேனிக்காரர் நடத்திய மாநாட்டை போல, நாமும் நடத்த வேண்டுமென்ற ஆர்வக்கோளாறில், சேலத்துக்காரர் தூங்காநகரில் மாநாடு நடத்த முடிவெடுத்தார். ஏர்போர்ட் பக்கமிருக்கிறது என இங்கேயும் நடத்த தடை விதிக்க நீதிமன்றம் வரை வழக்கு சென்றது.
கடைசியில் ஒருவழியாக அனுமதி கிடைத்து நடந்தது. அங்கேயும் வேகாத புளியோதரை, அடி பிடிச்ச சாம்பார் சாதமென டன் கணக்கில் வீணானது. மாநாடு மேட்டர் வைரலாகுமென பார்த்த சேலத்துக்காரருக்கு, வீணான உணவுகள் வைரலானதால் கடும் அதிர்ச்சி அடைந்தார். சமீபத்தில் நடந்த கல் வீச்சு, காலணி வீச்சு சம்பவங்களால், தென்மாவட்டங்கள் என்றாலே சேலத்துக்காரர் எரிந்து விழுகிறாராம். கட்சி சார்பான விஷயங்களை பேசக்கூட இங்குள்ள மாஜிக்கள் அஞ்சுகின்றாராம். ‘என்ன பண்ணுவீங்களோ, ஏது பண்ணுவீங்களோ.. ஒண்ணு பொறுப்புல இருந்து, பழைய மாதிரி கட்சியை கொண்டு வாங்க…
இல்லாட்டி அம்மா மாதிரி நானும் அதிரடி நடவடிக்கை எடுப்பேன் என தென்மாவட்ட மாஜிக்கள், மாவட்ட செயலாளர்களிடம் கடுமையாகவே பேசியிருக்கிறார். இதனால் தென்மாவட்ட மாஜிக்கள் கதிகலங்கி நிற்கின்றனராம்…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘பருப்பு வேகாததால் அடுத்து என்ன செய்யலாமுன்னு தாமரை பார்ட்டி யோசிக்கிறதா சொல்றாங்களே.. என்ன விஷயம்..’’ என ஆர்வமாக கேட்டார் பீட்டர் மாமா. ‘‘சேலத்துக்காரரு இலைகட்சியின் தொண்டர்களை தக்கவைப்பதற்காக, பத்தில் எட்டு பேருக்கு ஏதாவது ஒரு பொறுப்பு என்ற புதிய யுக்தியை கையில் எடுத்திருக்காரு என்பது ஏற்கனவே லீக்கான விஷயம்.
இதில் பொறுப்புகள் கிடைச்ச உள்ளூர் ர.ர.,க்கள் கொஞ்சம் ஹேப்பியா இருக்காங்களாம். இதுக்கு இன்னொரு முக்கிய காரணமும் இருக்காம். தாமரை கட்சியின் பிரதர்மவுண்டன் லீடரு, அடுத்த மாசம் மாங்கனி மாவட்டத்துக்கு யாத்திரை வரப்போறாரு. அப்போது கெத்து காட்டணும் என்பதற்காக, இலையின் நிர்வாகிகள் சிலருக்கு வலை வீசி, தாமரை லீடரு முன்னிலையில் கட்சியில் சேர்க்கும் பிளான் போய்கிட்டு இருக்காம். இதில் இலையின் முக்கிய நிர்வாகிகள் யாரும் சிக்காத நிலையில், வார்டு செயலாளர் லெவலுக்கு இறங்கி ஆள்பிடிக்க ஆரம்பிச்சிருக்காங்களாம் தாமரை பார்ட்டிகள்.
இதில் சிலர் கொஞ்சம் இறங்கி வந்த நிலையில் தான், சேலத்துக்காரரு பொறுப்பு என்ற புதிய அஸ்திரத்தை கையில் எடுத்து வீசி கலைச்சி விட்டிருக்காராம். இதேபோல், உதிரி கட்சிகளில் இருந்த சில பொறுப்பாளர்களுக்கும் தாமரை பார்ட்டிங்க வலைவீசி பார்த்திருக்காங்க. அவர்களும் சிக்கலையாம்.இப்படி எந்த பருப்பும் வேகாத நிலையில், அடுத்து என்ன செய்யலாம் என்ற ஆழ்ந்த யோசனையில் இருக்காங்களாம் தாமரை பார்ட்டிகள்’’ என்றார் விக்கியானந்தா. ‘‘காக்கி துறை சேதி ஏதும் இருக்கா..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘வெயிலூர் மாவட்டத்துல காட்டுப்பாடி பக்கத்துல பொன்னான ஆறு ஓடுற ஏரியாவுல காவல் நிலையம் இருக்குது. இந்த காவல்நிலையத்துல 3 எழுத்து பெயர்கொண்ட தனி காக்கி பணிபுரிஞ்சு வர்றாரு. இவர் தான் இந்த காவல்நிலையத்துல முன்னாடி 3 ஸ்டார் காக்கிக்கு சாரதியாக இருந்தாராம். அப்பவே இவர் எல்லா வேலைகளையும் தெரிஞ்சவராக இருந்தாராம். இப்ப திரும்பவும் சப்ரேட் பிரிவு காக்கியாக வந்து சேர்ந்துட்டாராம். ஏற்கனவே செஞ்ச வேட்டைய இப்ப தொடங்கியிருக்குறாருன்னு ஸ்டேஷன் காக்கிகளே குமுறி வர்றாங்களாம்.
அவர் மேல யாராவது புகார் சொன்னா அவங்களை பத்தி, இல்லாத புகார்களை கூறி மிரட்டுறாராம். எல்லா சோஷியல் விரோதிகளோடவும் லிங்க்ல இருக்காராம். இவர்மேல நடவடிக்கை எடுக்கவே தயங்குறாங்களாம். உயர் அதிகாரிங்க கேட்பதாக கூறி வசூல்வேட்டை நடத்துறாராம். பொன்னான ஏரியாவை இவர்தான் தன்னோட கட்டுப்பாட்டுல வெச்சிருக்காராம். தனிக்காட்டு ராஜாவாக திரியும் தனி காக்கியை விசாரிச்சு, நடவடிக்ைக எடுக்கணும்னு காக்கிகளே குறையாக சொல்றாங்க’’ என்றார் விக்கயானந்தா.