டெல்லி: தேனி எம்.பி ரவீந்திரநாத்தின் தேர்தல் வெற்றி செல்லாது என்ற தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஓ.பி.ரவீந்திரநாத் நாடாளுமன்ற உறுப்பினராக தொடர உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. 2 வாரங்களில் இருதரப்பினரும் பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு அளித்து வழக்கு விசாரணை அக். 4ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வழக்கில் எதிர்மனுதாரர்கள் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், தங்க தமிழ்ச்செல்வன், மிலானி பதிலளிக்க உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
வேட்புமனுவில் உண்மை விவரங்களை மறைத்தால் ரவீந்திரநாத் தேர்தல் வெற்றி செல்லாது என ஐகோர்ட் தீர்ப்பு அளித்துள்ளது. சொத்து விவரங்கள், வருமான விவரங்களை ரவீந்திரநாத் எம்.பி மறைத்ததாக மிலானி என்பவர் வழக்கு தொடர்ந்தார். இதனை தொடர்ந்து ஓ.பி.ரவீந்திரநாத் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது
கடந்த 2019-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தேனி மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு எம்.பி ரவீந்திரநாத் வெற்றி பெற்றது செல்லாது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தேனி தொகுதி வாக்காளர் மிலானி தொடர்ந்த தேர்தல் வழக்கில் உயர் நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.
2019-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், தேனி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஓ.பி.ரவீந்திரநாத் வெற்றி பெற்றார். அவரது வேட்புமனுவில், சொத்து விவரங்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை மறைத்துள்ளார். எனவே, தேனி தொகுதியில் அவர் வெற்றி பெற்றதை செல்லாது என அறிவிக்க வேண்டும் எனக் கோரி தேனி தொகுதி வாக்காளரான மிலானி என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், “தனக்கு வாக்களிக்க, வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து ரவீந்திரநாத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். பணப்பட்டுவாடா புகாரின் பேரில், வேலூர் தொகுதி தேர்தல் தள்ளிவைக்கப்பட்ட நிலையில், தேனி தொகுதியிலும் அதிக பணப்பட்டுவாடா நடந்தும், தேர்தல் தள்ளிவைக்கப்படவில்லை” என்று கூறியிருந்தார். ஆனால் இந்தத் தேர்தல் வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல. எனவே வழக்கை விசாரணைக்கு ஏற்கக்கூடாது என ரவீந்திரநாத் நிராகரிப்பு மனுவை தாக்கல் செய்திருந்தார்.
அவரது கோரிக்கையை ஏற்க மறுத்த உயர் நீதிமன்றம், ரவீந்திரநாத்தின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு விசாரணைக்காக, மூன்று நாட்கள் நேரில் ஆஜரான ரவீந்திரநாத் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து சாட்சியம் அளித்திருந்தார். தேர்தல் ஆணைய அதிகாரிகள் உள்ளிட்டோரும் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்திருந்தனர். இந்த வழக்கில் வாதங்கள் நிறைவடைந்த நிலையில், வழக்கை தேதி குறிப்பிடாமல் தீர்ப்புக்காக ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் வழக்கு, நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் முன்பு ஜூலை 6 விசாரணைக்கு வந்தது. வழக்கில் நீதிபதி பிறப்பித்த தீர்ப்பில், “இதுவரை இந்த வழக்கில் நடத்தப்பட்ட விசாரணை மற்றும் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஆவணங்களின் அடிப்படையில், 2019-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில், தேனி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஓ.பி.ரவீந்திரநாத்தின் வெற்றி செல்லாது” என்று தீர்ப்பளித்தார்.
இந்நிலையில் சொத்து விவரங்கள், வருமான விவரங்களை ரவீந்திரநாத் எம்.பி மறைத்ததாக மிலானி என்பவர் வழக்கு தொடர்ந்தார். இதனை தொடர்ந்து ஓ.பி.ரவீந்திரநாத் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. தேனி எம்.பி ரவீந்திரநாத்தின் தேர்தல் வெற்றி செல்லாது என்ற தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஓ.பி.ரவீந்திரநாத் நாடாளுமன்ற உறுப்பினராக தொடர உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.