‘‘தொகுதி எம்பியாக்கி விடுவேன் என ஆசைவார்த்தை காட்டிய மாஜி அமைச்சர் மீது உச்சக்கட்ட கோபத்தில் வேட்பாளர் இருக்கிறாராமே..’’ என கேட்டார் பீட்டர் மாமா. ‘‘டெக்ஸ்டைல்ஸ் தொகுதியில் இலை கட்சி சார்பில் மாஜி அமைச்சர் தனக்கு வேண்டிய நபரை வேட்பாளராக களத்தில் இறக்கினார். பிரசாரத்தின் போது தொகுதி முழுவதும் எதிர்ப்பு அலை இருந்ததால் வேட்பாளர் கூட மாஜி அமைச்சர் தவிர முக்கிய நிர்வாகிகள் யாரும் கூட செல்லவில்லை. காரணம் தேர்தல் முடிவு என்ன என்பது முன்பே தெரிந்ததால் முக்கிய நிர்வாகிகள் களத்தில் நிற்காமல் நைசாக கழன்று விட்டார்களாம்… இதனால் அப்செட்டில் இருந்த வேட்பாளரிடம் எப்படியாவது தொகுதியில் வெற்றி பெற வைத்து தொகுதி எம்பியாக்கி விடுகிறேன்னு மாஜி அமைச்சர் ஆசைவார்த்தை கூறியதோடு தேர்தல் பிரசாரம் தொடங்கியது முதல் இறுதிக்கட்ட பிரசாரம் வரை வேட்பாளரை செலவழிக்க வைத்துள்ளார்.
இதை நம்பிய வேட்பாளரும் ‘விட்டமின் ப ’ அதிகளவில் செலவழித்து இருக்கிறார்.. தேர்தல் ரிசல்ட் முதல் நாள் வரை தொகுதி எம்பியாகி விடுவோம்னு வேட்பாளர் கனவில் இருந்து வந்தாராம்.. ஆனால் தேர்தல் முடிவில் வேட்பாளர் படு தோல்வியை சந்தித்து விட்டார். இதனால் கடும் அப்செட்டில் சென்ற வேட்பாளர் மாஜி அமைச்சரை நம்பி பிரசாரத்தில் ‘விட்டமின் ப’ வை இழந்தது தான் மிச்சம்னு அவர் மேல உச்சக்கட்ட கோபத்தில் இருக்கிறாராம்…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘வாக்கு குறைந்ததால் அதிமுக சிட்டி செகரட்டரிய மாத்த போறதா பேச்சு ஓடுதே.. உண்மைதானா..’’ என கேட்டார் பீட்டர் மாமா. ‘‘வெயிலூர் தொகுதியில இலைக் கட்சி சார்பில் போட்டியிட்டவரு டெபாசிட் இழந்தாரு. 6 சட்டமன்ற தொகுதிகளில் வெயிலூர் தொகுதியில் தான் மிகவும் குறைவான ஓட்டு அதாவது வெறும் 11 ஆயிரம் ஓட்டுகள வாங்கினாராம்.
சாதாரணமா மாநகராட்சி தேர்தல் நடந்தா 4 வார்டுகளில வாங்க கூடிய வாக்குகளை கூட வாங்க முடியாத பரிதாப நிலைக்கு இலைக் கட்சி தள்ளப்பட்டுள்ளது. சட்டமன்ற வாரியாக ஒரு சுற்றில் கூட ஆயிரம் வாக்குகளை வாங்கவில்லை என்பது கேலிக்கூத்தாக மாறி உள்ளது. இலை கட்சி ஆட்சியில வெயிலூர் தொகுதியில் மூன்று எழுத்துக்கார டாக்டர் எம்எல்ஏ ஆகவும் அமைச்சராகவும் இருந்ததுள்ளார். கடந்த 10 ஆண்டு கால ஆட்சியில் இருந்தபோதும் சரி, ஆட்சியில் இல்லாதபோதும் சரி வெயிலூரில் இலை கட்சிய மொத்தமாக வீரமான மாஜி அமைச்சரும், சிட்டி செகரட்டரியும் இணைந்து அதலபாதாளத்துக்கு தள்ளிட்டாங்கன்னு ரத்தத்தின் ரத்தங்களே கொதிக்கிறாங்களாம். இதனால அவர்களை பதவியிலிருந்து நீக்கிடுவாங்கன்னு இல கட்சியினரே பரபரப்பா பேசிக்கிறாங்க..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘தேனீக்காரர் கூடாரத்தை கலைக்க சேலத்து தலைவர் விரித்த வலை பற்றி சொல்லுங்க..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘இலைக்கட்சியில் இருந்து நீக்கப்பட்ட தேனீக்காரரின் கோஷ்டி ரெண்டா உடைஞ்சிப்போச்சு. இலை கட்சியில் முதல்வரா இருந்துக்கிட்டு, மலராத கட்சியோட கூட்டணி வச்சிக்கிட்டு, பலாப்பழத்துல நின்றதோடு மட்டுமல்லாமல் யாரிடமும் அவர் சொல்லலையாம். இதனால இனிமேல் இந்த கடையில் டீ ஆத்த முடியாதுன்னு நினைச்சிக்கிட்டிருந்த நேரத்துல இன்னொரு அணியை தொடங்குவோமுன்னு பெங்களூருக்காரர் பேசத்தொடங்கியிருக்காரு. இதற்கிடையில் சேலத்துத்தலைவர், தேனீக்காரர் கூட்டத்தை கொஞ்சம் கொஞ்சமாக தூக்க திட்டமிட்டு வேலையை செஞ்சிக்கிட்டிருக்காராம். இந்த வலையில மாஜி மந்திரியான மூன்றெழுத்துக்காரர் சிக்கிட்டாராம். வரும் தேர்தலில் ரங்கமும், தேர்தல் செலவோடு, அமைப்பு செயலாளர் பதவியும் வழங்கப்படும் என உத்தரவாதம் கொடுத்திருக்காங்க. இந்த டீல் மூன்றெழுத்து மாஜிக்கு பிடித்துப்போனதாம்.
உடனடியா சம்மதம் தெரிவிச்சதோடு மட்டுமல்லாமல் வரும்போது மா.செயலாளர்களை தூக்கிட்டு வருவதாகவும் உறுதி சொல்லியிருக்காராம். இதற்காக தேனீக்காரரரின் மா.செக்களை இழுக்கும் வேலையில் மாஜி ஈடுபட்டிருக்காராம். அதே நேரத்தில் நேரடியாக இலைக்கட்சி தலைவரிடம் சென்றால் ஏதாவது நினைத்துவிடுவார்களோ என்ற எண்ணத்தில் இருந்த மாஜி, மம்மியோட சமாதியில மண்டியிட போறாராம். அங்கிருந்து மம்மி கட்சியை வலுப்படுத்த சேலத்துக்காரரருடன் சேருன்னு சொன்னாங்க என்ற வசனத்தோடு இலைக்கட்சியில் சேரப்போவதாக ரத்தத்தின் ரத்தங்கள் அடிச்சி சொல்றாங்க…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘தோத்தவங்க எல்லாம் ஒன்றியத்துல அமைச்சராகுறதுக்கு துடிக்கிறாங்களாமே..’’ என கேட்டு சிரித்தார் பீட்டர் மாமா. ‘‘கடைக்கோடி மாவட்டத்தில் 10 வது முறையாக மக்களவை தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை தழுவிய பொன்னானவர் தற்போது ஒன்றிய அமைச்சரவையில் இடம்பிடிக்க முயன்று வருகிறாராம்.
இந்த பட்டியலில் ஆளுநர் பதவியை கை கழுவி வந்தவரும், கதர் கட்சியில் இருந்து எம்எல்ஏ பதவியை கை கழுவி தாமரை கட்சிக்கு வந்தவரும் வரிசையில் நிற்கிறார்களாம். ஆனால் மேலிடமோ மவுண்ட் தலைவர் உள்ளிட்டோருக்கே வாய்ப்பு வழங்குவது சந்தேகம் என்ற நிலைதான் தற்போது உள்ள சூழலாம். இருந்தாலும் இதுதான் கடைசி வாய்ப்பு என்று பொன்னானவர் உள்ளிட்டோர் முறுக்கிக்கொண்டு நிற்கிறார்களாம். தங்களது டெல்லி ஆதரவாளர்களை சந்தித்து பேசி வருகிறாராம். போகபோகத்தான் தெரியும் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்..’’ என்றார் விக்கியானந்தா.