‘‘கவனிப்பதை கவனித்தா, இடத்திற்கு செல்லாமலேயே நிலத்தை அளந்து விட்டதா வரைபடத்தோடு ஆவணங்கள் ரெடியாகி விடுகிறதாமே..’’ என்றபடி வந்தார் பீட்டர் மாமா.
‘‘மிஸ்டர் பத்தூர் மாவட்டம், வாணியான நகர எல்லைக்குள் நிலங்களை அளவீடு செய்யும் பணிகளுக்காக வாணியான நகர அலுவலகத்திலேயே தனியாக ஒரு அறை அளவீட்டாளர்களுக்கு வழங்கப்பட்டிருக்கு.. இங்கு தங்கள் வீடு, கடை, நிலங்கள், காலி மனைகளுக்கு அளவீடு செய்வது, பட்டா, சிட்டா, வரைபடம் வழங்கும் பணிகளுக்காக ஏராளமானவங்க வர்றாங்க.. ஆனால், அவங்க தொடர்ந்து அலைக்கழிக்கப்பட்டு வருகிறார்களாம்.. அதேநேரத்தில், புரோக்கர்கள் மூலம் சென்றால் காலதாமதமின்றி பணி நடக்கிறதாம்.. அவர்களிடம் பல ஆயிரங்களை திணித்தால், குறிப்பாக அவர்கள் கேட்கும் ‘ப’வை கவனித்தால் அடுத்த நிமிடம் கேட்கும் ஆவணங்கள் ரெடி என்ற நிலைதான் உள்ளதாம்.. அதுவும் இடத்துக்கு செல்லாமலே நிலத்தை அளந்துவிட்டதாக கூறி வரைபடம் தயாரித்து ஆவணங்களை வழங்கி விடுகிறார்களாம்.. இந்த பூனைகளுக்கு யார் மணி கட்டுவதென்று தெரியாமல் மக்கள் விழிபிதுங்கி நிற்கிறார்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘மூன்று ஸ்டார் காக்கிக்கே டப் கொடுக்கும் ரெண்டு ஸ்டார் காக்கியின் ஆட்டம் தாங்க முடியலையாமே எந்த ஸ்டேசன்ல..’’ என கேட்டார் பீட்டர் மாமா.
‘‘வெயிலுக்கு பேர் போன மாவட்டத்துல கொஞ்ச நாள் மழை அடிச்சு ஓய்ஞ்சதுல இதமான சூழல் நிலவி மக்கள் நிம்மதியா இருந்தாங்கலாம்.. இப்ப மறுபடியும் வெயில் சதம் அடிச்சிறுக்குற நிலைமையில பள்ளி கொண்ட ஊர்ல இருக்கற காவல் நிலையத்தோட 2 ஸ்டார் காக்கி போடுற ஆட்டம் அதவிட ஹாட்டா தகிதகிச்சுனு இருக்குதாம்..
பாதிக்கப்பட்ட பொது ஜனங்க புகார் மனுவ எடுத்துக்கினு ஸ்டேசன் வாசல்ல காலடி வைக்கும் போதே கடுகடுனு சீறிப்பாயும் எங்க உயிர வாங்க எல்லாத்துக்கும் நாங்க தா வர்ரணுமா.. வேற வேல எங்களுக்கு இல்லையா..’ என எரிந்து விழும் போதே புகார்தாரர் நிலைகுலைஞ்சு போயிடுராங்களாம்.. யார் மீது புகார் கொடுக்கறாங்களோ அவங்கள கூப்பிட்டு கண்டிக்காம புகார் கொடுக்க வந்தவங்கள திசை திருப்பி எதிர் பார்ட்டிங்க கிட்ட பாத்தியா உன் மேல புகாரே கொடுக்க விடலணு ‘ப’ விட்டமின கறகறனு கறந்துட்றாராம்.. இதுமட்டுமில்லாம இவரு ஸ்டேசன் எஸ்எச்ஓ வா இருக்கறதால இவருக்கு பிடிக்காத காக்கிகள ஸ்டேசன்லே தங்க விடாம ஓவர் டைம் பாக்க வச்சி கடும் மன உளைச்சலுக்கு ஆளாக்கி வர்றாராம்.. அதுவும் லேடி காக்கிங்க இவர் சொல்ற பேச்சு கேக்கலனா பனிஷ்மென்ட் வேற மாதிரி இருக்காம்.. இதனால ஸ்டேசன்ல இருக்கற மொத்த காக்கிங்களும் 3 ஸ்டாருக்கு பயப்பட்றாங்களோ இல்லையோ 2 ஸ்டார் காக்கி மேல கொளுத்துற வெயில கொதிச்சு போயிருக்காங்களாம்.. மாவட்ட காவல் உயர் காக்கியோட பார்வை நம்ம ஸ்டேசன் மேல பட்டு நல்ல காலம் பொறக்காதானு சக காக்கிங்க ஏங்கி புலம்பி தவிக்கிறாங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘ஊராட்சி முறைகேடுகளுக்கு தண்டனை பெற்றுக்கொடுத்தே தீர வேண்டும்னு காம்ரேடுகள் களத்தில் தீவிரமா குதிச்சிட்டாங்களாமே..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘கடைகோடி மாவட்டத்தில் மலராத கட்சியின் நிர்வாகத்தின் கீழ் இருந்த தர்மமான ஊராட்சியில் தலைவராக இருந்தவர் பல லட்சம் முறைகேடு, நிதி இழப்பு ஏற்படுத்திய விவகாரத்தில் தகுதி நீக்கம், தண்டச்சான்று வழங்கல் என்று நடவடிக்கைக்கு உள்ளானார். முறைகேடுகள் உறுதியாகி தொகையை திரும்ப செலுத்த கடைசியில் மாவட்ட கலெக்டரால் முன்னாள் ஊராட்சி தலைவருக்கு உத்தரவிடப்பட்டதாம்.. முன்னதாக முறைகேட்டில் திரும்ப செலுத்த வேண்டிய தொகையை குறைக்க தலைவர் தரப்பில் பலகட்ட முயற்சிகள் செய்திருக்காங்களாம்.. இப்போது எல்லாம் தாண்டி மேல்முறையீடாக தலைநகரில் விஷயம் ஊரக வளர்ச்சி துறை உயர் அதிகாரி மேஜையில் உள்ளதாம்.. மாவட்ட அளவில் தலைவர் தரப்பில் பலரையும் பிடித்து சரிகட்ட முயற்சித்து ஓரளவு பலன் கிடைச்சிருக்கு.. தற்போது மேல்மட்ட அளவில் விஷயம் உள்ளதால் இனியும் இதனை விடக்கூடாது, முறைகேடுகளுக்கு தண்டனை பெற்றுக்கொடுத்தே தீர வேண்டும் என்று காம்ரேடுகள் தீவிரமாக களத்தில் இறங்கியுள்ளார்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘அரசியலில் முகவரி இல்லாமல் போய் விடக்கூடாது என்பதற்காக தான் 10 ஆண்டுக்கு முன்பு ஓரம்கட்டியவரையே நேரில் சந்தித்து கெஞ்சியது யாரு..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடக்கும் நிலையில் இலை கட்சியும், மலராத கட்சியும் பகையை மறந்து சமீபத்தில் ஒட்டிக்கொண்டன.. ஆனால் தேனிக்காரர் நிலைதான் அந்தோ பரிதாபமாகிவிட்டதாம்.. ஒரு காலத்தில் தேனிக்காரர் இலை கட்சியில் முதன்மை பதவியில் இருந்தார். அப்போது அல்வா ஊரின் எம்எல்ஏ இலை கட்சியில் தனக்கு ்நிகராக வளர்ந்து விடுவார் என தேனிக்காரர் அவரை ஓரம்கட்டி விட்டாராம்.. அதனால் தான் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அல்வா ஊரின் எம்எல்ஏ ஜெயித்தாலும் மீண்டும் விஐபி ஆக முடியவில்லையாம்.. ஆனால் தற்போது நிலைமை தலைகீழாக மாறி விட்டதாம்.. மம்மி மறைந்து விட, கட்சியை சேலம்காரர் கைப்பற்றி விட்டதால் தேனிக்காரரை புறந்தள்ளி விட்டார். அல்வா ஊரின் எம்எல்ஏவும் இலை கட்சியில் இருந்து மலராத கட்சியில் இணைந்ததுடன் தற்போது மாநில தலைவர் பதவியையும் பிடித்து விட்டார். இதனால் மலராத கட்சியின் கூட்டணி பேச்சுவார்த்தை, முடிவு, அதிகாரம் எல்லாம் அல்வா ஊரின் எம்எல்ஏக்கு வந்து விட்டது. இந்நிலையில் தான் தேனிக்காரரும், அல்வா ஊரின் எம்எல்ஏவும் ஓரிரு நாட்களுக்கு முன்பு மீனாட்சி குடி கொண்டுள்ள நகரத்தில் திடீரென சந்தித்தனராம்.. அப்போது எப்படியும் தன்னை கூட்டணிக்கு கொண்டு வந்து விடுங்கள் என தேனிக்காரர் அல்வா ஊரின் எம்எல்ஏவிடம் கேட்டுக் கொண்டாராம்.. சட்டமன்ற தேர்தல் வரும் நிலையில் கூட்டணி இல்லையென்றால் தேர்தலில் நிற்க முடியாது. தேர்தலில் நிற்கா விட்டால் அரசியலில் முகவரி இல்லாமல் ஆகிவிடுவேன் என தனது நிலையை விளக்கினாராம்.. அரசியல் சதுரங்கம் எப்படி ஆகிவிட்டது பார்த்தீர்களா? என தேனிக்காரரின் நிலையை பார்த்து அல்வா ஊரின் இலை கட்சியினரும், மலராத கட்சியினரும் நையாண்டி செய்கின்றனராம்..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.
ஒருகாலத்தில் தான் ஓரங்கட்டி வைத்திருந்தவரிடமே போய் கெஞ்ச வேண்டிய நிலை தேனிக்காரருக்கு ஏற்பட்டதை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா
0