Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தேனி கலெக்டர் அலுவலகத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

தேனி: தேனி கலெக்டர் அலுவலகத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் அனைத்து துறை ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. தேனி, சிவகங்கை மாவட்ட அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்றிரவு மதுரை வந்தார். விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து காரில் புறப்பட்டு இரவு தேனி வந்தடைந்தார்.

தேனியில் உள்ள தனியார் விடுதியில் தங்கிய துணை முதலமைச்சர் இன்று காலை 10 மணியளவில் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டு, வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து ஆய்வு செய்தார். இதில் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதையடுத்து பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் தேனியில் பகல் 12.30 மணியளவில் நேரு சிலை அருகே துணை முதல்வருக்கு திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தொடர்ந்து தேனி அருகே மதுராபுரியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தேனி ஒருங்கிணைந்த மாவட்ட திமுக சார்பு அணிகளின் நிர்வாகிகளுடன் தேர்தல் தொடர்பான கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்துரையாடினார். இதனையடுத்து, தேனி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தேனி தொகுதி எம்.பி தங்கதமிழ்செல்வன் அலுவலக அறையை துணை முதலமைச்சர் திறந்து வைத்தார். மாலையில் 3 மணியளவில் தேனியில் உள்ள தனியார் ஓட்டலில் தேனி வடக்கு, தெற்கு மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் இளைஞர் அணி நிர்வாகிகளின் சந்திப்பு நடந்தது. மாலை 4.30 மணி வரை மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் பொறுப்புக்கான நேர்காணல் நடைபெற்றது.

இன்றிரவு மதுரைக்கு காரில் திரும்பும் துணை முதலமைச்சர், மதுரை அழகர்கோவில் ரோட்டில் உள்ள ஓட்டலில் தங்குகிறார். நாளை 17ம் தேதி காலை காரில் சிவகங்கை செல்லும் அவர், அங்கு நடக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று, நாளை இரவு மதுரை திரும்பி, இரவு 8 மணி விமானத்தில் சென்னைக்கு செல்கிறார்.