*ஆபத்தான குளியல், துணி துவைத்தலை தவிர்க்க வலியுறுத்தல்
தேனி : மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த தொடர்மழை மற்றும் பெரியாறு, வைகை அணைகளில் இருந்து கூடுதல் தண்ணீர் திறப்பால், தேனி மாவட்டத்தில் உள்ள நதிகள், குளங்களில் நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
தமிழக-கேரள எல்லைப்பகுதியில் உள்ளதால் தேனி மாவட்டம், மலைகள் சூழ்ந்து பசுமையாகவும், சில்லென்ற சீதோஷ்ண நிலையும் இருப்பதன் காரணமாக பார்ப்பதற்கு மிகவும் ரம்மியமாக காட்சியளிக்கும். இந்த மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் நதிகள், குளங்களில் தண்ணீர் நிறைந்து காணப்படும்.
இதில் உள்ள ஆபத்தை அறியாமல் விடுமுறை நாட்களில் அதிகளவில் மக்கள் நீர்நிலைகளில் குளிக்கின்றன. தண்ணீர் ஓடும் வேகம் அதிகரித்துள்ளது. ஆனால் இதனை உணராமல் சிலர் ஆபத்தான குளியலை தொடர்ந்த வண்ணம் உள்ளனர். தண்ணீரின் வேகமான சுழலில் சிக்கிய பலர் கடந்த காலங்களில் இழுவைத் தண்ணீர் அடித்து சென்று உயிர்பலிகள் அதிகம் ஏற்பட்டுள்ளது. தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் இக்காலத்தில் உரிய கவனம் எடுத்து ஆறுகளில் குளிக்க வருபவர்கள், துவைக்க வருபவர்கள் என அனைவரையும் தடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
அதிக மழைபெறும் காலங்களில் நீர்வரத்து அதிகரித்தால், ஆற்றங்கரைப்பகுதிகளில் வசிக்கின்ற பொது மக்கள் கவனமுடனும், முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். குழந்தைகளை ஆற்றங்கரைப்பகுதிகளில் விளையாடவோ, குளிக்கவோ அனுமதிக்க கூடாது. நீர்நிலைகளுக்கு செல்ல வேண்டாமென ஒலிபெருக்கி மூலம் உள்ளாட்சி அமைப்பினரால் விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டு வருகிறது.
அதுபோல் கால்நடைகளை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்ல வேண்டும். விவசாயிகள் அதிக மழைபொழிவு ஏற்படும் காலங்களில் மழைநீரில் நெற்பயிர் மூழ்கியுள்ள தாழ்வான பகுதிகளை இனம் கண்டு வயல்களில் தண்ணீரை வடித்திட வேண்டும். வயலில் தேங்கியுள்ள நீரை வயல் மட்டத்தை விட ஆழமான வாய்க்கால்கள் அமைத்து வடித்துவிட வேண்டும்.
மேலும் சாலைகளில் விழும் மரங்கள் மற்றும் பாறைகளை அகற்றிட மர அறுவை இயந்திரம், ஜே.சி.பி போன்ற இயந்திரங்களை பயன்படுத்துவதற்கு ஏதுவாக தயார் நிலையில் வைத்திருக்க தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித்துறை, உள்ளாட்சித்துறை, மின்சார வாரியம் மற்றும் வேளாண் பொறியியல் துறைகளுக்கு மாவட்ட சார்பில் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.
வீரபாண்டி தடுப்பணையிலும் கவனம்
தேனி அருகே வீரபாண்டியில் முல்லைப் பெரியாறு பாய்கிறது. இப்பகுதியில் முல்லைப் பெரியாற்றின் குறுக்கே பிரம்மாண்டமாக தடுப்பணை உள்ளது. முல்லைப் பெரியாறு அணையில் திறந்து விடப்படும் தண்ணீரானது இத்தடுப்பணையை தாண்டி செல்லும்போது வெள்ளியை உருக்கியது போல காட்சியளிக்கும்.
தேனியில் இருந்து வீரபாண்டி கவுமாரியம்மன் கோவிலை கடந்து சின்னமனூர், உத்தமபாளையம், கம்பம், குமுளி செல்லக்கூடிய வாகனங்களில் பயணிப்போர் வீரபாண்டி முல்லைப் பெரியாற்று தடுப்பணை அருகே உள்ள பாலத்தில் வாகனங்களை நிறுத்தி தடுப்பணையின் அழகை கண்டு ரசித்துச் செல்கின்றனர்.
இந்நிலையில் வீரபாண்டி முல்லைப் பெரியாற்று தடுப்பணையின் மேல் பகுதியில் ஆபத்து மிகுந்த சுழிகள் உள்ளன. இச் சுழிகளில் சிக்கி ஏராளமானோர் உயிரிழந்தனர். கடந்த வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் திருவிழாவின் போது கூட 10 வயது சிறுவன் மற்றும் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் தடுப்பணையில் மூழ்கி உயிரிழந்தனர். தற்போது தடுப்பணை பகுதியில் தண்ணீர் குறைந்த அளவில் வந்து கொண்டிருந்தாலும், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால் திடீரென நீர்வரத்து அதிகரிக்கக் கூடும். எனவே வீரபாண்டி தடுப்பணை பகுதியில் சிறுவர்கள், பெரியவர்கள் குளிப்பதை தவிர்க்க வேண்டும்.
அணைகள் நீர்மட்டம் கிடுகிடு
அணைகளின் நீர்மட்டம் விபரம் வருமாறு : வைகை அணை நீர்மட்டமான 71 அடி உயரத்தில் தற்போது அணையில் 52.81 அடி உயரத்திற்கு நீர் நிரம்பியுள்ளது. அணைக்கு வினாடிக்கு 34 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 72 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மஞ்சளாறு அணை நீர்மட்டமான 57 அடி உயரத்தில் தற்போது அணையில் 39.50 அடி உயரத்திற்கு நீர் நிரம்பியுள்ளது.
அணைக்கு வினாடிக்கு 15 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. சோத்துப்பாறை அணை நீர்மட்டமான 126.28 அடி உயரத்தில் தற்போது அணையில் 93.96 அடி உயரத்திற்கு நீர் நிரம்பியுள்ளது. அணைக்கு வினாடிக்கு 17 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 3 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. சண்முகாநதி அணை நீர்மட்டமான 52.55 அடி உயரத்தில் தற்போது அணையில் 43.20 அடி உயரத்திற்கு நீர் நிரம்பியுள்ளது. அணைக்கு வினாடிக்கு 3 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.
நொடிகளில் இழுத்து விடுகிறது
சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘‘மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் மழைகாரணமாக போடி அருகே வறண்ட நிலையில் காணப்பட்ட கொட்டக்குடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, போடி முந்தல் சாலையில் உள்ள மூக்கறை அணைப்பிள்ளையார் தடுப்பணையிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது. நீர்நிலைகளில் தண்ணீர் இருப்பதால், ஆபத்தை உணராமல் குளிப்பதும், உற்சாகமாக துவைப்பதும் அதிகமான அளவில் நடக்கிறது.
பள்ளங்கள் அதிகமான அளவில் ஏற்பட்டுள்ளதால் எந்த இடம் மிகவும் ஆபத்தான இடம் என தெரியாமல் மாணவர்கள், சிறுவர்கள் துள்ளிக்குதித்து ஆற்றில் குளியல் போடுகின்றனர். இதனால் நீச்சல் தெரிந்தவர்களை கூட நொடிகளில் இழுத்து சென்றுவிடுகிறது. தண்ணீரில் மூழ்குபவர்கள் சில நிமிடங்களில் மூச்சுத்திணறி இறக்கும் நிலை உள்ளது. எனவே பெற்றோர், தங்களது பிள்ளைகளை மிக கவனமாக பார்ப்பதுடன் ஆற்றில் சென்று குளிக்க வேண்டாம் என அறிவுரை வழங்க வேண்டும்’’என்றனர்.