கம்பம்: தேனி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலமாக விளங்கும் சுருளி அருவியில் படகு சவாரி தொடங்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேனி மாவட்டத்தின் முக்கிய சுற்றுத்தலமாக உள்ள சுருளி அருவி முக்கிய சுற்றுலாத்தலமாகவும், புண்ணிய தலமாகவும் விளங்குகிறது. ஹைவேவிஸ் மலைப்பகுதியில் பெய்யும் மழை நீர் மற்றும் தூவானம் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் சுமார் 9 கிலோமீட்டர் தூரம் அடர்ந்த வனப்பகுதி வழியாக பல்வேறு மூலிகை செடிகளில் கலந்து சுருளி அருவியாக கொட்டுகிறது.
இதில் குளித்தால் நோய்கள் குணமாகும் என்பது ஐதீகம். இதனால் தேனி மட்டுமல்லாது திண்டுக்கல், மதுரை, சிவகங்கை உள்ளிட்ட வெளிமாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இதே போல் இறந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யவும் ஏராளமானவர்கள் சுருளி அருவிக்கு வந்து செல்கின்றனர். இதனால் தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
சுருளி அருவிக்கு வரும் சுற்றுலாபயணிகளிடம் வனத்துறை சார்பில் நுழைவு கட்டணமாக பெரியவர்களுக்கு ரூபாய் 30, 5 வயதுக்கு மேல் 12 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு ரூபாய் 20 என கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருகிறது. சுருளி அருவியை மேம்படுத்துவதற்காக புலிகள் காப்பகத்தினர் பல்வேறு வளர்ச்சி பணிகளை தொடங்கி உள்ளனர். சிறுவர் பூங்கா, கண்காட்சியகம், மூலிகை பண்ணை, சுற்றுச்சூழல் பாதுகாக்கும் வகையில் தயாரிக்கப்படும் பொருள்கள் விற்பனை மையம் ஆகியவை உள்ளன. மேலும் உணவருந்தும் அரங்கம், முதியோர் குளிக்க ஷவர் குழாய், பேட்டரி கார், சுற்றுலா பயணிகளுக்கான சைக்கிள் சவாரி உள்ளிட்டவைகள் அமைக்க பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது.
இந்நிலையில் சுருளி அருவியில் வெளியேறும் நீரினை தடுப்பணை மூலம் தடுத்து நிறுத்தி சிறிய அளவில் படகு சவாரி அமைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பட்ட சுற்றுலா பயணிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர். சுருளி அருவியில் படகு சவாரி தொடங்கினால் சுற்றுலா தலத்தில் மேற்கொண்டு வளர்ச்சி அடையும் என்பது மற்றொரு கருத்தாக உள்ளது. ஆண்டிபட்டி பகுதியில் உள்ள வைகை அணை போன்ற அணைப்பகுதியில் கூட இன்று வரை படகு சவாரிகள் இல்லை. அணைப்பகுதியில் விபத்து அபாயம் அதிகம் என்பதால் படகு சவாரி அமைக்க எவ்வித முயற்சியும் செய்யவில்லை. ஆனால் சுருளி அருவியை பொறுத்தவரை மாதந்தோறும் 25,000 மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
சுருளி அருவியில் குளித்துவிட்டு அருகில் சுற்றி பார்க்க வேறு இடம் இல்லாததால் படகு சவாரி தொடங்கும் பொழுது அதிகப்படியான சுற்றுலா பயணிகளை படகு சவாரி மூலம் ஈர்க்க முடியும். சுற்றுலா வளர்ச்சி கழகமும் நல்ல வருவாய் ஈட்ட முடியும் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது. சுற்றுலா பயணிகள் மட்டுமல்லாது ஆன்மீக பக்தர்களும் அதிகளவில் சுருளி அருவிக்கு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. சுருளி மலையில் அபூர்வ மூலிகைகள், கைலாசநாதர் குகை, விபூதி சித்தர் குகை, சுருளி தீர்த்தம், சன்னாசியப்பன், கன்னிமார் கோயில்கள் போன்றவைகள் உள்ளன. மேலும் ஆண்டு முழுவதும் சுருளி அருவியில் நீர்வரத்து இருக்கும்.
தமிழகத்தின் அனைத்து பகுதி பொதுமக்கள் மற்றும் அருகில் உள்ள கேரள மாநில மக்கள் என நாள்தோறும் பல ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் இடமாக சுருளி அருவி உள்ளது. எனவே பக்தர்கள் சுற்றுலா பயணிகள் வருகையை கணக்கில் கொண்டு சுருளி அருவியில் படகு சவாரி துவங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
மாதம் ரூ.10 லட்சம் வரை வசூல்
சுருளி அருவிக்கு நாளொன்றுக்கு சுமார் 300 முதல் 1000 நபர்கள் வரை வருகின்றனர்.இவர்கள் மூலமாக நுழைவுக்கட்டணமாக மாதத்தோறும் ருபாய் 3 இலட்சத்தில் இருந்து 10 இலட்சம் வரை பணம் வனத்துறைக்கு வசூலாகிறது. இப்பணம் மூலம் சுருளி அருவியில் தற்காலிக ஊழியர்களாக பணியாற்றி வரும் நபர்களுக்கு மாத சம்பளமாக ரூபாய் கொடுக்கப்படுகிறது. நுழைவு கட்டணம் வசூலிக்கும் இடத்தில் இருந்து சுருளி அருவிக்கு செல்ல வனத்துறை சார்பில் வாகன ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 2 கிலோ மீட்டர் தூரமுள்ள அருவிக்கு வாகன கட்டணமாக ரூபாய் 10 வசூலிக்கப்படுகிறது. காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை பொதுமக்கள் குளிக்க அனுமதி உண்டு. மேலும் வருவாயை அதிகரிக்க படகு சவாரி தொடங்கி அதற்கு கட்டணம் வசூல் செய்யலாம் என்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்
தமிழக அரசு சார்பில் சாரல் விழா கொண்டாடுவதற்காக இடங்களை தேர்வு செய்வதற்காக கலெக்டர் ஷஜீவனா நேற்று முன் தினம் சுருளி அருவியில் இடங்களை ஆய்வு செய்தார். ஆய்வுக்கு வந்த இடத்தில் பொதுமக்கள் இப்பகுதியை மேம்படுத்தும் விதத்தில் படகு சவாரி துவங்க வேண்டும் என கலெக்டரிடம் கோரிக்கை விடுத்தனர். அந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட கலெக்டர் ஷஜீவனா, படகு சவாரி திட்டம் குறித்து பரிசீலிக்கப்படுவதாக தெரிவித்தார். மேலும் படகு சவாரி துவங்குவதற்காக சாத்திய கூறுகள் குறித்து ஆய்வு செய்யவும் அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.