*உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை
தேனி : தேனியில் பைபாஸ் சாலையில் விபத்துகளைத் தவிர்க்க சாலையை அகலப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தேனி நகரில் இருந்து திண்டுக்கல் செல்வதற்காக ரிசர்வ் பாரஸ்ட்டின் மத்தியில் சுமார் 4.5 கிமீ நீளமுள்ள சாலையாக பைபாஸ் சாலை உள்ளது. தேனி நகருக்கான புதிய பஸ் நிலையம் கடந்த 2103ம் ஆண்டு டிசம்பர் மாதம் திறக்கப்பட்டது. புதிய பஸ் நிலையம் வரும் வரை பைபாஸ் சாலை வழியாக வாகனங்கள் அதிகம் செல்லாத நிலையே இருந்து வந்தது.
புதிய பஸ் நிலையம் வந்தபிறகு, தேனியில் இருந்து திண்டுக்கல், திருப்பூர், கோவை, சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வரக்கூடிய அனைத்து பேருந்துகளும், இந்த பைபாஸ் சாலை வழியாகவே சென்று வருகிறது. மேலும், தேனி புதிய பஸ் நிலையம் அருகே கலெக்டர் அலுவலக வளாகம் உள்ளது. இதனால், கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள பல்வேறு துறைகளில் பணிபுரியும் அலுவலர்கள் ஏராளமானோர் டூவீலர்களில் தேனி பைபாஸ் சாலையில் பயணித்து வருகின்றனர். இதன்காரணமாக புதிய பஸ் நிலையம் வந்தபிறகு, பைபாஸ் சாலையில் வாகன போக்குவரத்து அதிகரித்து விட்டது.
இந்நிலையில், இந்த சாலையானது சுமார் 7 மீட்டர் அகலம் கொண்டதாக இருந்தது. மேலும் தார்ச்சாலையை ஒட்டி சரளைக்கற்கள் நிரம்பிய மண்சாலை உள்ளது. போக்குவரத்து அதிகரித்துள்ளநிலையில், இரவு நேரங்களில் இச்சாலையில் மின்விளக்கு வசதியில்லாத நிலையில், கனரக வாகனங்கள் ஒன்றையொன்று முந்தியபடி வரும்போது, சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்குகின்றனர்.
தற்போதுள்ள சாலையின் இருபுறமும் தலா 5 மீட்டர் வீதம் மொத்தம் சுமார் 10 மீட்டர் அகலத்திற்கு நெடுஞ்சாலைக்கு சொந்தமான இடம் உள்ளது. இதற்காக தேனி
அன்னஞ்சி பிரிவு முதல் தேனி நகர் மதுரை ரோடு பிரிவு வரையில் 4.5 கிமீ தூரத்திற்கு சாலையின் இருபுறமும் மாநில நெடுஞ்சாலைத் துறை தங்களுக்கு சொந்தமான சாலை பகுதி என்பதாக அடையாளக் கற்களை ஊன்றியுள்ளனர். இதனிடையே மிகக் குறுகிய சாலையாக உள்ளதை இருசக்கர வாகனங்களும் செல்வதற்கு வசதியாக சாலையை அகலப்படுத்த பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதனையடுத்து, நெடுஞ்சாலைத் துறை மூலம் அன்னஞ்சி பிரிவில் இருந்து சாலையை அகலப்படுத்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கடந்த 2019ம் ஆண்டு பணிகள் துவங்கியது. இதனையடுத்து, அன்னஞ்சி பிரிவில் இருந்து 7 மீட்டர் சாலை 10 மீட்டர் சாலையாக சிங்கப்பாறை பகுதியில் உள்ள பாலம் பள்ளி வரை சாலை அகலப்படுத்தப்பட்டது. ஆனால், அதற்கு மேல் உள்ள பகுதியில் வனத்துறையினர், சாலையை அகலப்படுத்த தடைவிதித்தனர்.
இதனால், பாலம் பள்ளி அருகே சாலை அகலப்படுத்தும் பணி நின்று போனது. இது குறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து சாலையை அகலப்படுத்தி விபத்துகள் ஏற்படுவதைத் தவிர்க்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.