சென்னை: தேனாம்பேட்டையில் அதிவேகமாக வந்த கார் மோதி போக்குவரத்து காவலர் படுகாயமடைந்தார். சென்னை பல்லாவரம் 200 அடி சாலையை சேர்ந்தவர் கஜேந்திர பாபு(57). தேனாம்பேட்டையில் உள்ள சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் மக்கள் தொடர்புத்துறை அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.
இவர் வழக்கம் போல் இன்று காலை 9 மணிக்கு தனது காரில் அலுவலகத்திற்கு வந்து கொண்டிருந்தார். தேனாம்பேட்டை எஸ்ஐஇடி கல்லூரி முன்பு திரும்பும் போது, அதிவேகமாக காரை ஓட்டி வந்ததால், திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து இரும்பு பேரிகாடை இடித்து கொண்டு, பணியில் ஈடுபட்டிருந்த தேனாம்பேட்டை போக்குவரத்து காவலர் அழகுகுமார்(28) மீது மோதி நின்றது.
இந்த விபத்தில் போக்குவரத்து காவலருக்கு தலை மற்றும் 2 கால்களிலும் பலமான காயங்கள் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. சக காவலர்கள், அழகுகுமாரை மீட்டு ஆட்டோ உதவியுடன் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பாண்டி பஜார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், விபத்தை ஏற்படுத்திய சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவன அதிகாரி கஜேந்திர பாபுவை கைது செய்தனர். மேலும் விபத்து ஏற்படுத்திய காரும் பறிமுதல் செய்யப்பட்டது.