சாளக்கிராமமூர்த்தி இரண்டாக உடைந்து இருந்தால், அந்த இரண்டையும் ஒன்று சேர்த்து வெள்ளி அல்லது தங்கக்கம்பி அல்லது தாமரைக் கம்பியால் கட்டி பூஜை செய்யலாம். அதை பால், மற்றும் தீர்த்தத்தினால் திருமஞ்சனம் செய்து ஆராதிக்கலாம். ஒன்று சேர்க்க முடியாமல் துண்டு துண்டாகப் போய்விட்ட, சாளக்கிராம மூர்த்திகளை ஆறு, குளம், ஏரி, அருவி, சமுத்திரம் இவைகளில் சேர்க்கலாம். புதிய சாளக்கிராமம் வாங்கி பூஜை செய்யலாம். தண்ணீரில் சேர்க்கும் நாளில் உபவாசம் இருப்பது நல்லது.
மரணத்தைக் குறித்த அச்சம் வருவதால்தான் மனிதன் தவறு செய்யாமல் இருக்கின்றானா?
– கண்ணன், விருதுநகர்.
இப்பொழுது மனிதர்கள் நடந்து கொள்கின்ற முறையைப் பார்த்தால், அவர்கள் மரணத்தைப் பற்றி அச்சப்படுபவர்களாகவா இருக்கிறார்கள்? சந்தோஷமாக வரவேற்பவர்கள் போல அல்லவா நடந்துகொள்கிறார்கள்.
தீபங்களை பத்து விதமாக ஏற்றலாம் என்கிறார்களே?
– அட்சயா, சென்னை.
ஆம். தீபங்களை ஏற்றுவதில் சில முறைகள் உண்டு. தரையில் வரிசையாக அகல்களை ஏற்றுதல், கோலம் போட்டு அதில் வட்டமாக அகல் விளக்குகளை வைத்து ஏற்றுதல், ஏதேனும் சித்திரம் வரைந்து அதில் தீபம் ஏற்றுதல், மாலைபோல வடிவம் அமைத்து தீபம் ஏற்றுதல், அடுக்கடுக்காக தீபங்களை ஏற்றுதல், மேல் முற்றத்தில் ஆகாசத்தைப் பார்த்தபடி தீபம் (ஆகாச தீபம்) ஏற்றுதல், தண்ணீரில் மிதக்கவிடும் ஜலதீபம் ஏற்றுதல், ஓடம் போல் செய்து அதில் தீபம் வைத்து ஜலத்தில் விடுதல், கோயில் கோபுரங்களின் மீது தீபம் ஏற்றுதல் (மோட்ஷடதீபம்) வீடு முழுவதும் எல்லா இடங்களிலும் தீபம் ஏற்றுதல். இப்படி விதவிதமாக தீபங்களை ஏற்றலாம். தண்ணீரில் தீபம் ஏற்றுகின்ற முறை வடநாட்டில் அதிகம் உண்டு. கங்கையில் ஆரத்தி எடுக்கும் சமயத்தில் நிறைய பேர் தண்ணீரில் தீபம் ஏற்றுவதை நீங்கள் பார்க்கலாம் ஜெக ஜோதியாக இருக்கும்.
இத்தனை விரதங்கள் தேவையா? மொத்த விரதத்தையும் கணக்கிட்டால், 365 நாட்களும் விரதங்கள் இருக்கும்போல் தெரிகிறது?
– ரமேஷ், கோவை.
ஒவ்வொரு விரதத்திற்கும் ஒவ்வொரு பின்னணி உண்டு. பலன் உண்டு. அடுத்து இந்த உலகம் பல்வேறு ருசி உடையது. உணவிலேயே ஒருவருக்குப் பிடித்த உணவு இன்னொருவருக்குப் பிடிக்காது. அதைப் போலவே தெய்வ உருவங்களிலும் சில தெய்வ உருவங்கள் சிலருக்கு மிகவும் பிடிக்கும். அதேதான் விரதத்திலும். அவரவர்கள் விருப்பத்திற்குத் தகுந்தபடியும், பழக்கத்திற்கு தகுந்தபடியும், குடும்ப வழக்கத்திற்கு தகுந்த படியும் விரதங்கள் இருக்கின்றார்கள். சிலர் சில பலன்களை உத்தேசித்தும் விரதம் இருக்கின்றார்கள். கிருத்திகை விரதம் இருக்கக்கூடிய சிலர் சதுர்த்தி விரதம் இருப்பதில்லை. பிரதோஷ விரதம் இருப்பவர்கள் ஏகாதசி விரதம் இருக்க மாட்டார்கள். இரண்டும் சேர்ந்து இருப்பவர்களும் உண்டு. எனவே ஏதேனும் ஒரு சில நாள்களிலாவது இறைவனை நினைத்து விரதம் இருந்து பலனடையட்டும் என்பதற்காக இத்தனை விரதங்களை நம்முடைய முன்னோர்கள் அமைத்துக் கொடுத்திருக்கிறார்கள்.
சிரார்த்தத்தில் (நீத்தார் கடன்) வெள்ளை எள்ளை உபயோகிக் கலாமா?
– அனுராதா, ஸ்ரீவில்லிப்புத்தூர்.
கூடாது. சிரார்த்தத்தில் கறுப்பு எள்ளை உபயோகிப்பதுதான் சரி. எள் விஷ்ணுவிடமிருந்து உருவானது. கறுப்பு எள் விதைகள் வளி மண்டலத்திலும் உடலுக்குள்ளும் இருக்கும் எதிர்மறை ஆற்றல்களை உறிஞ்சும் சக்தியைக் கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது. பித்ருபக்ஷத்தின் போது கறுப்பு எள்ளைப் பயன்படுத்தி சிரார்த்த தர்பணாதிகளைச் செய்யும் போது, திரிக்ராஹி தோஷங்கள் நிவர்த்தியாகும். திரிக்ராஹி தோஷங்கள் என்பது ராகு, கேது, சனி தோஷங்கள் ஆகும்.
ருத்ராட்சத்தில் எத்தனை முகங்கள் உண்டு?
– சங்கர், சுவாமிமலை.
ஒரு முகத்திலிருந்து பல முகங்கள் வரை உண்டு. 14 முகமுடைய ருத்ராட்சத்தை நீலகண்ட சிவன் என்கிறார்கள். ஒரு முகம் சிவபெருமானையும், இரண்டு முகம் சிவன் பார்வதியையும், மூன்று முகம் அக்னி பகவானையும், நான்கு முகம் பிரம்மாவையும், ஐந்து முகம் காலனை அழித்த சிவனையும், ஆறுமுகம் சுப்பிரமணியரையும் குறிக்கும். பெரும்பாலும், ஒரு முக ருத்ராட்சத்தை சிவனடியார்களும், ஆறுமுக ருத்ராட்சத்தை முருகபக்தர்களும் அணிந்து கொள்கின்றனர்.
தினசரி காலையில் எழுந்தவுடன் எவற்றையெல்லாம் பார்க்க வேண்டும்?
– மாளவிகா, அருப்புக்கோட்டை.
அஷ்ட மங்கலங்கள் என்று எட்டு பொருள்களைப் பார்க்க வேண்டும் என்று சொல்லுகிறார்கள். பொதுவாகவே நம் மனதுக்கு எது நிம்மதியையும் அமைதியையும் தருகிறதோ அந்த மாதிரியான பொருள்களை நாம் பார்க்க வேண்டும். கோயில் கோபுரம், தெய்வங்களின் திருவுருவங்கள், புஷ்பங்கள், மேகம் சூழ்ந்த மலைகள், தீபம், கண்ணாடி, சந்தனம் வீணை, மிருதங்கம் முதலிய வாத்தியக் கருவிகள், கன்றுடன் கூடிய பசு, உள்ளங்கை, தாய் தந்தை மனைவி குழந்தைகள், மகான்களின் படங்கள் ஆகியோர் காலையில் எழுந்தவுடன் பார்க்கத் தகுந்தவர்கள் உங்களுக்கு யாராவது உதவி செய்திருந்தால், அந்த உதவி செய்தவரை ஒரு கணம் நினைத்துக்கொள்ளுங்கள்.
வைணவத்தில் துளசியை புனிதமான பத்திரம் (இலை) என்று சொல்கிறார்கள், அப்படி
சைவத்தில் எது புனிதமானது?
– சக்தியசீலன், சிதம்பரம்.
வில்வம். (வில்வஇலை) சிவனுக்கு உகந்தது. அதை பில்வம் என்றும் சொல்வதுண்டு. மூன்று இதழ்களுடன் கூடிய வில்வ இலைகள் சிவனின் மூன்று கண்களைக் குறிப்பிடும். செல்வத்தின் அதிபதியான லட்சுமிதேவி அமரும் இடமாகவும் இருக்கிறது. லட்சுமியைப் போற்றும் 108 அஷ்டோத்திரத்தில் “வில்வ நிலையே” என்னும் நாமாவளியும் இதை உறுதிப்படுத்துகிறது.
சத் சங்கம் என்பது என்ன?
– விமலா, சென்னை.
சத் சங்கம் என்பது நல்லவர்களோடு சேர்ந்திருப்பது. இன்னும் குறிப்பாகச் சொல்லப்போனால், மகான்களோடு சேர்வது, அவர்களோடு உரையாடுவது. கங்கை பாவத்தைப் போக்கும். சந்திரன் தாபத்தைப் போக்கும். கற்பகவிருட்சம் வறுமையைப் போக்கும். மகான்களின் சேர்க்கையோ, இந்த மூன்றையும் போக்கும்.