தீபங்களை பத்துவிதமாக ஏற்றலாம் என்கிறார்களே?
ஆம் தீபங்களை ஏற்றுவதில் சில முறைகள் உண்டு. தரையில் வரிசையாக அகல்களை ஏற்றுதல், கோலம் போட்டு அதில் வட்டமாக அகல் விளக்குகளை வைத்து ஏற்றுதல், ஏதேனும் சித்திரம் வரைந்து அதில் தீபம் ஏற்றுதல், மாலை போல வடிவம் அமைத்து தீபம் ஏற்றுதல், அடுக்கடுக்காக தீபங்களை ஏற்றுதல், மேல் முற்றத்தில் ஆகாயத்தைப் பார்த்தபடி தீபம் (ஆகாச தீபம்) ஏற்றுதல், தண்ணீரில் மிதக்க விடும் ஜலதீபம் ஏற்றுதல், ஓடம் போல் செய்து அதில் தீபம் வைத்து ஜலத்தில் விடுதல், கோயில் கோபுரங்களின் மீது தீபம் ஏற்றுதல்(மோட்ஷ டதீபம்) வீடு முழுவதும் எல்லா இடங்களிலும் தீபம் ஏற்றுதல்… இப்படி வித விதமாக தீபங்களை ஏற்றலாம். தண்ணீரில் தீபம் ஏற்றுகின்ற முறை வடநாட்டில் அதிகம் உண்டு. கங்கையில் ஆரத்தி எடுக்கும் சமயத்தில் நிறைய பேர் தண்ணீரில் தீபம் ஏற்றுவதை நீங்கள் பார்க்கலாம் ஜெக ஜோதியாக இருக்கும்.
? குலதெய்வம் வேறு இஷ்ட தெய்வம் வேறா?
– விஜய், சிவகங்கை.
ஆம் சிலருக்கு பரம்பரையாக குலதெய்வம் என்று ஒன்று இருக்கும். இஷ்ட தெய்வம் அவரவர்கள் உளவியலுக்கும் ஈடுபாட்டிற்கும் ஏற்ப ஏற்படும். ஒருவருக்கு பெருமாள் இஷ்ட தெய்வமாக இருந்தாலும் அதிலும் குறிப்பிட்ட பெருமாள் இஷ்ட தெய்வமாக இருப்பார். சிலருக்கு திருப்பதி பெருமாள். சிலருக்கு ஸ்ரீரங்கம் பெருமாள். பொதுவாகவே குலதெய்வக்கோயிலுக்கு ஆண்டுக்கு இரண்டு முறையாவது செல்ல வேண்டும் என்பார்கள். அல்லது ஒரு முறை. இயலாவிட்டால் வீட்டில் விசேஷங்கள் நடப்பதற்கு முன் ஒரு முறை செல்ல வேண்டும். இஷ்ட தெய்வக் கோயிலுக்கு நினைத்தபோது செல்லலாம்.
? கடவுளை மகிழ்விக்க என்ன செய்ய வேண்டும்?
– பெருமாள், திண்டுக்கல்.
அவர் மகிழ்ச்சிக்கு நாம் செய்யகூடியது என்ன இருக்கிறது. அவர் சதா ஆனந்தமாகவே இருப்பார். நிலையான ஆனந்தம் தான் கடவுள். ஆயினும் சில விஷயங்களை நமது முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள். உலகத்திலேயே கடவுளுக்கு மிகவும் பிடித்தமான ஒரு செயல் பெற்றோர்களை மகிழ்விப்பது. அதை முறையாகச் செய்பவர்களின் வாழ்க்கையில் எந்தத் தொல்லையும் வருவதில்லை. மாத்ரு தேவோ பவ பித்ரு தேவோ பவ என்பதுதானே வேத வாக்கியம். அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் அல்லவா? பெற்றோர்களை புறக்கணித்துவிட்டு செய்யும் தவத்தினாலோ தானத்தினாலோ பயன் இல்லை.
? பொறாமையை விட கோபம் மோசமான குணம் என்கிறார்களே?
– வள்ளியம்மன், திருநெல்வேலி.
ஒரு வகையில் சரிதான். பொறாமை உங்களுக்கு மட்டும் வயிற்றில் அல்சரைத் தரும். நிம்மதியை இழக்க வைக்கும். தூக்கத்தைக் கெடுக்கும். கப கப என்று எரிய வைக்கும். ஆனால் கோபம் எனும் குணம் உங்களுக்கும் தீமை செய்யும். மற்றவர்களுக்கும் தீமை செய்யும். தற்கொலைக்கும் கொலைக்கும் உள்ள வித்தியாசம்தான் பொறாமைக்கும்
கோபத்திற்கும் உள்ள வித்தியாசம்.
? இத்தனை விரதங்கள் தேவையா? மொத்த விரதத்தையும் கணக்கிட்டால் 365
நாட்களும் விரதங்கள் இருக்கும்போல் தெரிகிறது?
– ரமேஷ், கோவை.
ஒவ்வொரு விரதத்திற்கும் ஒவ்வொரு பின்னணி உண்டு. பலன் உண்டு அடுத்து இந்த உலகம் பல்வேறு ருசி உடையது. உணவிலேயே ஒருவருக்குப் பிடித்த உணவு இன்னொருவருக்குப் பிடிக்காது. அதைப்போலவே தெய்வ உருவங்களிலும் சில தெய்வ உருவங்கள் சிலருக்கு மிகவும் பிடிக்கும். அதேதான் விரதத்திலும். அவரவர்கள் விருப்பத்திற்குத் தகுந்தபடியும், பழக்கத்திற்கு தகுந்தபடியும், குடும்ப வழக்கத்திற்கு தகுந்தபடியும் விரதங்கள் இருக்கின்றார்கள்.
சிலர் சில பலன்களை உத்தேசித்தும் விரதம் இருக்கின்றார்கள். கிருத்திகை விரதம் இருக்கக் கூடிய சிலர் சதுர்த்தி விரதம் இருப்பதில்லை. பிரதோஷ விரதம் இருப்பவர்கள் ஏகாதசி விரதம் இருக்கமாட்டார்கள். இரண்டும் சேர்ந்து இருப்பவர்களும் உண்டு. எனவே ஏதேனும் ஒருசில நாள்களிலாவது இறைவனை நினைத்து விரதம் இருந்து பலனடையட்டும் என்பதற்காக இத்தனை விரதங்களை நம்முடைய முன்னோர்கள் அமைத்துக் கொடுத்திருக்கிறார்கள்.
? மகிழ்ச்சியாகவும் சுதந்திரமாகவும் நாம் எப்போது உணரமுடியும்?
– லட்சுமி, திருச்சி.
நடைபெறும் விஷயங்களைப் புரிந்துகொண்டு நடப்பவர்கள் எப்பொழுதும் மகிழ்ச்சியாகவும் சுதந்திரமாகவும் தான் இருப்பார்கள். எந்த விஷயங்கள் எல்லாம் உங்கள் கட்டுப்பாட்டில் உள்ளன? எந்த விஷயங்கள் எல்லாம் உங்கள் கட்டுப்பாட்டில் இல்லாதன என்பதைப் பற்றி தெளிவாக இருந்துவிட்டால் நாம் மகிழ்ச்சியாகவும் சுதந்திரமாகவும் இருக்கலாம். நம்முடைய சக்திக்கு அப்பாற்பட்ட, நம்மால் கட்டுப்படுத்த முடியாத விஷயங்கள் குறித்து நாம் மிக அதிகமாக கவலைப் படுவதன் மூலம் நம்முடைய மகிழ்ச்சியை இழக்கிறோம்.
? ரமணர் போன்ற மகான்களுக்கு புற்றுநோய் போன்ற கட்டிகள் வந்து அவஸ்தைப்
படுத்தியது ஏன்? சக்தி வாய்ந்த அவர்களால் அதைப் போக்கிக்கொள்ள முடியாதா?
– ரங்கா, ஸ்ரீரங்கம்.
அவர்களால் போக்கிக்கொள்ள முடியும். ஆனால் அவர்கள் போக்கிக் கொள்ள விரும்பவில்லை. காரணம் அனுபவிப்பது உடல்தான் ஆன்மா அல்ல என்கின்ற தெளிவான அறிவு அவர்களுக்கு இருந்தது. தங்களுக்குள் இருந்தும் ஆன்மாவை வெளியே எடுத்து தங்களுடைய உடல் அனுபவிக்கக்கூடிய துன்பத்தை அவர்களால் பார்க்க முடிந்தது. அதனால்தான் அவர்கள் தங்களுக்கு வரும் நோயைப் பற்றியோ மற்ற பிரச்னைகளைப் பற்றியோ கவலைப்படுவது கிடையாது. ‘‘அது பாட்டுக்கு இருக்கும்’’ என்று சொல்லிவிட்டுப் போய்க்கொண்டே இருப்பார்கள். இந்த பக்குவச் சிந்தனை நம்மைப் போன்ற சம்சாரிகளுக்கு கிடையாது என்பதால் நாம் சிறு பிரச்னைகளுக்கும் வருந்துகிறோம். அவஸ்தைப்படுகிறோம்.
? ஆராதனம் செய்யும் சாளக்கிராமம் உடைந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும்?
– விஜயலட்சுமி, திருத்தணி.
சாளக்கிராமமூர்த்தி இரண்டாக உடைந்து இருந்தால் அந்த இரண்டையும் ஒன்று சேர்த்து வெள்ளி அல்லது தங்க கம்பி அல்லது தாமரைக் கம்பியால் கட்டி பூஜை செய்யலாம். அதை பால், மற்றும் தீர்த்தத்தினால் திருமஞ்சனம் செய்து ஆராதிக்கலாம். ஒன்றுசேர்க்க முடியாமல் துண்டு துண்டாகப் போய்விட்ட சாளக்கிராம மூர்த்திகளை ஆறு, குளம், ஏரி, அருவி, சமுத்திரம் இவைகளில் சேர்க்கலாம். புதிய சாளக்கிராமம் வாங்கி பூஜை செய்யலாம். தண்ணீரில் சேர்க்கும் நாளில் உபவாசம் இருப்பது நல்லது.
? சுகப்பிரசவம் ஏற்பட என்ன ஸ்லோகம் சொல்ல வேண்டும்?
– ஜெயச்சந்திரன், புதுமை.
ஹிமவத் யுத்தரே பார்ஸ்வே ஸுரதா நாம யக்ஷினி தஸ்யா: ஸ்மரண மாத்ரேண விஸல்யா கர்ப்பிணி பவேத்
இமயமலையின் வடக்கே இருக்கும் யட்சினியான ஸுரதா தேவியே, உன்னை வணங்குகிறேன். தாயும் குழந்தையும் எவ்வித ஆபத்துமின்றி சுகப்பிரசவம் ஆக அருள் புரிவாயாக என்பது இந்த ஸ்லோகத்தின் பொருள். இதை பிரசவவலி கண்டது முதல் நிறுத்தாமல் மனசுக்குள் ஜபித்தால் சுரதாதேவி சுகப்பிரசவம் நடக்க உதவுவாள் என்று நம்பிக்கை. திருச்சி மலைக்கோட்டை தாயுமானவ சுவாமியையும் மனதில் நினைத்துக்கொண்டு தொடர் பிரார்த்தனை செய்யலாம்.
? சிரார்த்தத்தில் வெள்ளை எள்ளை உபயோகிக்கலாமா?
– அனுராதா, ஸ்ரீவில்லிப்புத்தூர்.
கூடாது சிரார்த்தத்தில் கறுப்பு எள்ளை உபயோகிப்பதுதான் சரி. எள் விஷ்ணுவிடமிருந்து உருவானது. கறுப்பு எள் விதைகள் வளிமண்டலத்திலும் உடலுக்குள்ளும் இருக்கும் எதிர்மறை ஆற்றல்களை உறிஞ்சும் சக்தியைக் கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது. பித்ரு பக்ஷத்தின்போது கறுப்பு எள்ளைப் பயன்படுத்தி சிரார்த்த தர்பணாதிகளைச் செய்யும்போது, திரிக்ராஹி தோஷங்கள் நிவர்த்தியாகும். திரிக்ராஹி தோஷங்கள் என்பது ராகு, கேது, சனி தோஷங்கள் ஆகும்.
? சத்சங்கம் என்பது என்ன?
– விமலா, சென்னை.
சத்சங்கம் என்பது நல்லவர்களோடு சேர்ந்திருப்பது. இன்னும் குறிப்பாகச் சொல்லப் போனால் மகான்களோடு சேர்வது, அவர்களோடு உரையாடுவது. கங்கை பாவத்தைப் போக்கும். சந்திரன் தாபத்தைப் போக்கும். கற்பகவிருட்சம் வறுமையைப் போக்கும். மகான்களின் சேர்க்கையோ இந்த மூன்றையும் போக்கும்.
? ருத்ராட்சத்தில் எத்தனை முகங்கள் உண்டு?
– சங்கர், சுவாமிமலை.
ஒரு முகத்திலிருந்து பல முகங்கள் வரை உண்டு 14 முகமுடைய ருத்ராட்சத்தை நீலகண்ட சிவன் என்கிறார்கள். ஒரு முகம் சிவபெருமானையும் இரண்டு முகம் சிவன் பார்வதியையும் மூன்று முகம் அக்னி பகவானையும் நான்கு முகம் பிரம்மாவையும் ஐந்து முகம் காலனை அழித்த சிவனையும் ஆறு முகம் சுப்பிரமணியரையும் குறிக்கும் பெரும்பாலும் ஒருமுக ருத்ராட்சத்தை சிவனடியார்களும் அறுமுக ருத்ராட்சத்தை முருக பக்தர்களும் அணிந்துகொள்கின்றனர்.
? தானங்களில் சிறந்தது எது?
– பாரதிநாதன், புதுக்கோட்டை.
சந்தேகமென்ன… அன்னதானம்தான் சிறந்தது. கிருஷ்ண பகவான் கீதையில், “எவன் தனக்காக மட்டும் ஆகாரம் தேடிச் சாப்பிட்டுக் கொள்கிறானோ அவனுடைய பாபத்தையும், முழுக்க அவனேதான் அனுபவித்தாக வேண்டும் வேறு எவரும் அதில் பங்கு எடுத்துக் கொள்ள மாட்டார்’’ என்கிறார். வேதத்தில் அன்னதானம் குறித்து
தைத்ரீயோப நிஷத்-ப்ருகுவல்லியில் இப்படி வருகிறது.:
அன்னநநிந்த்யாத் – தத்வ்ரதம்
அன்னம் பகுகுர்வீத! தத்விரதம்!
நகஞ்சன வஸதௌ ப்ரத்யால சக்ஷீதா!
தத்வ்ரதம்!
தஸ்மாத் யயா கயாச விதயா பஹ்வண்ணம்
ப்ராப்ணுயாத்!
ஆராத்யஸ்மா அன்ன மித்யா சக்ஷதே!
இதன் பொருள்:
அன்னத்தை துவேஷிக்கக் கூடாது. -அது விரதம். அன்னத்தை மிகுதியாக உண்டாக்க வேண்டும். அன்னத்தை வேண்டி வந்த எவரையும் தள்ளிவிடக்கூடாது. வருபவர்களுக்கு அன்னம் தயாராக இருக்கிறதென்று சொல்லுவர் பெரியோர்.தமிழில் ஒரு பாடல் உண்டு; பசி வந்திடப் பத்தும் பறந்து போம். அதாவது மானம், குலம், கல்வி, வலிமை, அறிவு, தானம், தவம், உயர்வு, தாளாண்மை/முயற்சி, காமம்- எல்லாம் பசி வந்தவனிடத்தில் இருக்காது.
இதையே மாற்றிப் போட்டால், பசி இல்லாவிடில் இந்த பத்துக் குணங்களும் இருக்கும். அதனால்தான் இந்துக்கள் அன்னதானத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள். வள்ளலார் பசியை “பிணி” என்கிறார். ஒருவரின் இதய நோயை மருத்துவர் மட்டும்தான் தீர்க்கலாம். பசியை யார் வேண்டுமானாலும் தீர்க்கலாம்.
அன்னதானத்தில்தான் ஒருத்தரைப் பூர்ணமாகத் திருப்திப்படுத்த முடியும். பொருளை எவ்வளவு கொடுத்தாலும் வாங்கிக் கொள்கிறவன் அதற்குமேல் தந்தாலும், ‘வேண்டாம்’ என்று சொல்லமாட்டான். சாப்பாடு போடுகிற போது தான் ஒருத்தன் என்னதான் முட்ட முட்டச் சாப்பிட்டாலும், ஓர் அளவுக்கு மேல் சாப்பிட முடியாது. “போதும்’ என்று சொல்கிறான்.
சொர்க்கம் சென்ற கர்ணனுக்கு, அவன் செய்த தானத்துக்குப் பலனாக தங்கமாளிகை கட்டித் தரப்பட்டிருந்தது.
பலவிதமான வசதிகள் செய்து தரப்பட்டிருந்தன, ஆனால், அவனுக்கு அங்கே உணவு கிடைக்கவில்லை. இதற்குக் காரணம் தெரியாமல் அவன் தவித்தபோது தேவர்கள் அவனிடம், “கர்ணா… நீ பூமியில் இருந்த போது பொன்னும், மணியுமே தானம் செய்தாய், அன்னதானம் செய்யவில்லை. என்றனர். அதனால் தான் நீ இங்கு பசியால் கஷ்டப்படுகிறாய் என்றனர். ஏகப்பட்ட தர்மங்கள் செய்த கர்ணனே அன்னதானம் செய்யாமல் போனதால் சொர்க்கத்தில் கஷ்டப்பட்டதாக சாஸ்திரம் கூறுகிறது.
அன்னம் என்பது மகத்துவமானது. அதனை வீண் செய்வதாகாது. அன்னதானத்தில் சாப்பிடுபவர்கள் தங்களுக்கு தேவையான அளவு கேட்டு சாப்பிடுதல் வேண்டும்.
அளவுக்கு அதிகமாக கேட்டு வாங்கி அதனை இலையிலேயே வைத்து விட்டு விடுகிறார்கள் அது தவறானது. அவ்வாறு மீதப்படுத்தும் அன்னம் இன்னும் பலரது பசியைப் போக்குமே.!
ஜெர்மனி போன்ற நாட்டில் விலை கொடுத்து வாங்கிய அன்னமானாலும் வீணாக்கினால் தண்டனையும் அபராதமும் உண்டு. இங்கு எவ்வளவு உணவை வீணாக்குகிறார்கள்? உணவு அளிப்பது எப்படி புண்ணியமோ, அப்படி உணவை வீணாக்குவது பாவம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
? வைணவத்தில் துளசியை புனிதமான பத்திரம் (இலை) என்று சொல்கிறார்கள், அப்படி சைவத்தில் எது புனிதமானது?
– சக்தியசீலன், சிதம்பரம்.
வில்வம். (வில்வ இலை) சிவனுக்கு உகந்தது. அதை பில்வம் என்றும் சொல்வது உண்டு. மூன்று இதழ்களுடன் கூடிய வில்வ இலைகள் சிவனின் மூன்று கண்களைக் குறிப்பிடும். செல்வத்தின் அதிபதியான லட்சுமிதேவி அமரும் இடமாகவும் இருக்கிறது. லட்சுமியைப் போற்றும் 108 அஷ்டோத்திரத்தில் “வில்வ நிலையே” என்னும் நாமாவளியும் இதை உறுதிப்படுத்துகிறது.
தேஜஸ்வி