சென்னை: தமிழக பள்ளிக்கல்வி இயக்குநரகம் சார்பில், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
மாணவர்களுக்காக ‘தி ஜங்கிள் கேங்’ எனும் சிறார் திரைப்படம் ஒளிபரப்பு செய்ய வேண்டும். இது குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்ட முதல் இந்திய வனவிலங்கு படமாகும். 2012ம் ஆண்டு வெளியான இந்த படமானது பல்வேறு இந்திய வனவிலங்குகள் மற்றும் தாவரங்கள் குறித்து விளக்கவும், சுற்றுச்சூழல் பாதுகாப்பை முன்வைத்தும் இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தை ஒளிபரப்பு செய்வதற்கான இணைப்பு லிங்க் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
அதற்குரிய பாடவேளைகளில் படத்தை திரையிட வேண்டும். அதற்குமுன் பொறுப்பாசிரியர் அந்த படத்தை பார்த்து அதன் கதைச் சுருக்கத்தையும் படித்து மாணவர்களுக்கு படத்தின் அடிப்படை பின்னணியை விளக்க வேண்டும். மாநில அளவில் நடைபெறும் சிறார் திரைப்பட விழாவில் சிறந்து விளங்கும் 25 மாணவர்கள் வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவார்கள். இதற்கான அறிவுறுத்தல்களை பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் வழங்க வேண்டும்.