‘‘20 ஆண்டாக ஒரே இடத்தில் பணியாற்றி, பவர்புல் ஆக வலம் வர்றாராமே ஒரு பெண் காக்கி.. உண்மையா..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘ஆமா.. வெயிலூர் மாவட்டத்துல மாவட்ட உயர் காக்கி அலுவலகம் இருக்குது. இந்த அலுவலகத்துல சமூகத்தோட நீதி பிரிவு இயங்கி வருது. இந்த பிரிவுல தற்போது 3 எழுத்து பெயர் கொண்ட பெண் காக்கி பணியாற்றி வர்றாங்களாம். இவங்க போலீசாக வேலைக்கு ேசர்ந்ததுல இருந்து, அந்த ஆபிஸ்லயேதான் வேலை செஞ்சி வர்றாங்களாம். பிரிவு வேணும்னா மாறுமே தவிர, அந்த ஆபீசவிட்டு இவங்க மாறுனதே இல்லையாம். அதோட, சேர்ந்ததுல இருந்து யூனிபார்ம் போட்டதே இல்லையாம்.
அந்தந்த பிரிவு ஸ்டார் காக்கிகளை கட்டுக்குள்ள கொண்டுவந்து, இவங்களுக்கு பிடிக்காதவங்களை அங்கிருந்து அனுப்பி வெச்சிடுவாங்களாம். இப்படி பவர்புல் காக்கியா வலம் வர்றாங்களாம். சமீபத்துல கூட இவங்க பவரை பயன்படுத்தி அங்க இருக்குற சில காக்கிகளை வேற ஸ்டேஷனுக்கு அனுப்பி வெச்சிட்டாங்களாம். அந்தளவுக்கு அந்த டிபார்ட்மெண்ட, கன்ட்ரோல்ல வெச்சிருக்காங்களாம். இது மாவட்ட காக்கி அலுவலகத்தோட புலம்பலாக இருக்குது’’ என்றார் விக்கியானந்தா.
‘‘கலக்கத்துல இருக்காங்களாமே சிறை அதிகாரிங்க…என்னா காரணம்..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘தமிழ்நாட்டில் 9 மத்திய சிறைகள் இருக்கு. இதுல 4 கண்காணிப்பாளர் பணியிடம் காலியா இருக்கு. இந்த நிலையில, சிறைத்துறை டிஐஜியா இருந்த ஒருவர், ஒரு புகார்ல சிக்கினதால, கண்காணிப்பாளரா பதவியிறக்கம் செய்யப்பட்டு, பாளையங்கோட்டை சிறைக்கு மாத்தப்பட்டாரு. ஆனா, அவரு தன்னோட பதவியிறக்கத்தை ரத்து செய்யனும்னு, கோர்ட்ல வழக்கு தொடர்ந்திருக்காரு. அதுமட்டுமில்லாம, டூட்டியிலும் ஜாயின் பண்ணாம விடுப்புல இருக்காரு. அதே போல, கோவை சிறையில இருந்து கடலூர் சிறைக்கு மாத்தப்பட்ட ஒரு பெண் அதிகாரியும், ஒரு மாசமாகியும் புது இடத்துல டூட்டிக்கு போகாம இருக்காரு. ஏற்கனவே 4 பணியிடங்கள் காலியா இருக்கிற நிலைமையில, இடமாற்றம் செய்யப்பட்ட அதிகாரிகளும் பணியில சேராம இருக்கிறதால, சிறைப்பணிகள் ரொம்பவே பாதிக்கப்பட்டிருக்காம்.
இந்த நிலையில, சில சிறைகள்ல டிஐஜி மற்றும் கண்காணிப்பாளர்கள் குவார்ட்டர்சுக்கு, சிறையில் இருந்து முறைகேடா மின்இணைப்பு எடுத்து பயன்படுத்தியது அம்பலமானது. அதை ஒப்புக் கொண்ட அதிகாரிகளும், மின்வாரியத்துறைக்கு அபராதமா ரூ.2 லட்சம், ரூ.3 லட்சம் வரை கட்டினாங்க. அந்த பிரச்னை ஓயுறதுக்குள்ள, முறைகேடா மின்சாரத்தை எடுத்து பயன்படுத்தின சிறை அதிகாரிகள் மீது, துறை ரீதியா நடவடிக்கை எடுக்கனும்னு, திருச்செந்தூரைச் சேர்ந்த ஒருவர் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு ெதாடர்ந்திருக்காரு. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரப்போவுது. அதனால், சம்மந்தப்பட்ட சிறைத்துறை அதிகாரிகள் கலக்கத்துல இருக்காங்களாம்’’ என்றார் விக்கியானந்தா.
‘‘இலை கட்சியில் மம்மி மறைந்த பிறகு தென் மாவட்டங்களில் குக்கர்காரர் பவர்புல்லா இருந்தாரே.. இப்ப எப்பிடி இருக்கு நிலைமை..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘இந்த மாவட்டங்களில் அடிக்கடி விசிட் அடித்து வாய்சும் கொடுத்து வந்தார் குக்கர். ஆனால் சேலம்காரர் ஆட்சியில் இருந்ததால், குக்கர்காரரின் பின்னால் நின்றவர்கள் ஒருவர் பின் ஒருவராக மீண்டும் இலை கட்சியில் ஐக்கியமாகி விட்டனர். இதனால் குக்கர்காரரின் தென் மாவட்ட செல்வாக்கு சுவற்றில் அடித்த பந்து போல் ஆனது. இதனால் தனது தென் மாவட்ட வருகையை குக்கர்காரர் குறைத்துக் கொண்டார். இந்நிலையில் முத்து நகரில் ஒரு நிகழ்ச்சிக்காக வந்திருந்த குக்கர்காரரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். தனது அரசியல் எதிரியான சேலம்காரரை ஒரு பிடி பிடித்தார். தாமரை கட்சியால் சேலம்காரர் அனைத்து பலனையும் அடைந்து விட்டு கூட்டணியில் இருந்து விலகியது மிகப் பெரிய துரோகம் என்றார். அத்தோடு நின்று விடாமல் சேலம்காரர் முதல்வராக வருவததற்கும், இலை கட்சியின் ஆட்சியை காப்பற்றியவர்களுக்கும் துரோகம் செய்து விட்டார். துரோகம் தான் சேலம்காரரின் இயல்பான குணம் என்றார். தேசிய கட்சியால் சேலம்காரர் பலன் அடைந்தார் என குக்கர்காரர் புள்ளி வைத்து விட்டு சென்றுள்ளார். இனி இதுபோல் ஆப்பு வைக்கும் வேலை அடிக்கடி நடக்கும் என்றும் குக்கர்காரர் சொல்லி சென்றிருக்கிறாராம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘குமரிப் பக்கம் என்ன விவகாரம்..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘நாகர்கோவில் கோட்டாரில் தமிழ்நாட்டின் ஒரே அரசு ஆயுர்வேத மருத்துவ கல்லூரி அமைந்துள்ளது. இங்கு மாணவிகளுக்கும், பெண் மருத்துவர்களுக்கும் உயர் பொறுப்புகளில் அதிகாரி நிலையில் உள்ளவர்கள் சிலர் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளனர். இது அவ்வப்போது பிரச்னையாக வெடித்து எழுந்தபோதிலும் அது மூடி மறைக்கப்பட்டு வந்துள்ளது. அவ்வாறே அண்மையில் பெண் மருத்துவர் ஒருவரிடம் மருத்துவ அதிகாரி நிலையில் உள்ளவர் பாலியல் ரீதியில் துன்புறுத்தல் மேற்கொள்ள அதனை விசாகா கமிட்டி, கல்லூரி டீன் ஆகியோரிடம் அந்த பெண் மருத்துவர் புகாராக கொண்டு சென்றுள்ளார். ஆனால் அதனை முறையாக கையாளாமல் விசாகா கமிட்டியும், டீனும் விடுமுறையில் சென்றுவிட்டார்களாம். இதனை தொடர்ந்து மாதர் சங்க நிர்வாகிகளை அணுகி பாதிக்கப்பட்ட பெண் மருத்துவர் புகார் அளிக்க மருத்துவ உயர் அதிகாரி உட்பட போலீசாரால் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இதனை ஆரம்பத்திலேயே தட்டி வைத்திருந்தால் இந்த அளவுக்கு நிலைமை சென்றிருக்காது என்கின்றனர் விபரம் அறிந்தவர்கள்’’ என்றார் விக்கியானந்தா.