Monday, March 4, 2024
Home » அலங்காநல்லூர் அருகே பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள புதிய ஜல்லிக்கட்டு அரங்கம் முதல்வர் நாளை திறக்கிறார்: போட்டியில் பங்கேற்க 9,312 காளைகளும், 3,669 வீரர்களும் முன்பதிவு

அலங்காநல்லூர் அருகே பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள புதிய ஜல்லிக்கட்டு அரங்கம் முதல்வர் நாளை திறக்கிறார்: போட்டியில் பங்கேற்க 9,312 காளைகளும், 3,669 வீரர்களும் முன்பதிவு

by Dhanush Kumar

அலங்காநல்லூர் : மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகேயுள்ள கீழக்கரை கிராமத்தில், 66 ஏக்கர் பரப்பளவில், ரூ.44 கோடி மதிப்பில் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்காக கலைஞர் ஏறுதழுவுதல் அரங்கம் கட்டப்பட்டுள்ளது. இந்த அரங்கத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை (ஜன.24) காலை 10 மணிக்கு திறந்து வைக்கிறார். தொடர்ந்து அரங்கத்தில் முதன்முதலாக நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு நிகழ்வுகளையும் பார்வையிடுகிறார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில் அங்குள்ள வாடிவாசல், பார்வையாளர் அமரும் மேடை உள்ளிட்ட பகுதிகளை அமைச்சர் பி.மூர்த்தி நேற்று ஆய்வு செய்தார். பாரம்பரியம் பழம் பெருமை உள்ளிட்ட பல்வேறு நிலைகளிலும் இந்த மைதானம் பார்த்து பார்த்து வடிவமைக்கப்பட்டிருக்கிறது. வாடிவாசல், அதன் இருபுறமும் பார்வையாளர் மாடம் அதற்கு மேற்புறம் உள்ள நிரந்தர பார்வையாளர் மாடம் தற்காலிக பார்வையாளர் கேலரி என சுமார் 20 ஆயிரம் பேர் அமர்ந்து ஒரே நேரத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நேரடியாக பார்க்கக் கூடிய வகையில் அரங்க அமைப்பு செய்யப்பட்டுள்ளது. வாடிவாசல் முன்பு தென்னை நார் கழிவுகள் தரைப்பகுதியில் கொட்டி தயார்படுத்தப்பட்டுள்ளது.

எந்த பகுதியில் இருந்து பார்த்தாலும் ஜல்லிக்கட்டு காளைகள் வெளியேறும் இடம், ஜல்லிக்கட்டு காளைகள் சேகரிக்கும் இடம் வரை தெளிவாக தெரியும் வகையில் பார்வையாளர்களுக்கான இருக்கை மற்றும் மேடையை வடிவமைத்துள்ளனர். அதேபோல் முக்கிய பிரமுகர்கள் அமர்ந்து போட்டிகளை பார்க்கும் வகையில் தனியாக குளிர்சாதன அரங்கும் அமைக்கப்பட்டுள்ளது. காயம்பட்ட வீரர்கள் மற்றும் ஜல்லிக்கட்டு நிகழ்வில் கலந்து கொள்வதற்கு முன்பு வீரர்களுக்கான பரிசோதனை செய்வதற்கு அரங்க வளாகத்திற்குள்ளேயே ஆரம்ப சுகாதார மருத்துவ மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கான முன்பதிவு ஆன்லைன் முறையில் நடந்து முடிந்துள்ளது. இதில் பங்கேற்பதற்காக 9,312 காளைகளும், 3,669 மாடுபிடி வீரர்களும் முன்பதிவு செய்துள்ளனர். இதில் தேர்வு செய்யப்படும் காளைகளும், மாடுபிடி வீரர்களும் பங்கேற்பர். கலைஞர் ஏறுதழுவுதல் அரங்கில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டியை வெளிநாட்டினர் மற்றும் சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்திட சுற்றுலாத்துறை தரப்பில் தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. போட்டியைக் காண ஆர்வமுள்ள வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் தங்கள் பெயர்களை touristofficemadurai@gmail.com என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம்.

You may also like

Leave a Comment

17 − 16 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi