இஸ்லாமிய வாழ்வியல்
மிக நீண்ட சொற்பொழிவுகள் மக்கள் மனங்களில் பதியுமோ இல்லையோ, வினா – விடை வடிவிலான செய்திகள் இதயத்தில் நன்கு பதிந்துவிடும். மார்க்கம், இறைநெறி தொடர்பாக நபி(ஸல்) அவர்களிடம் யார் வந்து என்ன கேள்வி கேட்டாலும், கோபப்படாமல் இனிமையாகப் பதில் சொல்வார்.
“என்ன இந்த ஆளு, சும்மா தொண தொணவென்று கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறாரே?” என்று ஒருபோதும் நபிகளார் சலித்துக் கொண்டதே இல்லை. அம்ர் பின் அபசா என்று ஒரு தோழர். அவர் ஒரு முறை நபிகளாரிடம் மார்க்கம் தொடர்பாக கேள்விக்கு மேல் கேள்வி கேட்டார். அவருக்கு சுருக்கமாகவும் அழகாகவும் தெளிவாகவும் நபிகளார் விடை அளித்தார்.
அம்ர் பின் அபசா கேட்ட வினாக்களும் நபிகளார் அளித்த விடைகளும் வருமாறு:
“இறைத்தூதரே, இஸ்லாமிய அழைப்பியலின் தொடக்க கட்டத்தில் தங்களைப் பின்பற்றியவர்கள் யார்?”
“ஒரு சுதந்திரமானவரும் ஓர் அடிமையும்.” (அதாவது தோழர்கள் அபூபக்கரும்பிலாலும்)
“இஸ்லாம் என்றால் என்ன?”
“இனிமையான பேச்சும், பசித்தவர்களுக்கு உணவளிப்பதும்.”
“ஈமான் என்றால் என்ன?”
பொறுமையும் பெருந்தன்மையும்.”
“முஸ்லிம்களில் சிறந்தவர் யார்?”
“எவருடைய நாவினாலும், கையினாலும் ஏனைய முஸ்லிம்கள் பாதுகாப்பாக இருக்கின்றனரோ அவர்.”
“ஈமான் – இறைநம்பிக்கையின் சிறந்த அம்சம் எது?”
“நற்பண்பு.”
“சிறந்த தொழுகை எது?”
“உள்ளச்சத்துடன் நீண்ட நேரம் நின்று ஓதி தொழக்கூடிய தொழுகை.”
“சிறந்த ஹிஜ்ரத் (புலம்பெயர்தல்) எது?”
“உமது இறைவன் வெறுத்தவற்றை நீயும் வெறுப்பது.”
“அறப்போரில் சிறந்தது எது?”
“எந்தப் போரில் ஒருவருடைய குதிரை கொல்லப்பட்டு, அவரும் தியாக மரணத்தை அடைந்தாரோ அந்தப் போர்.”
“நேரங்களில் சிறந்த நேரம் எது?”
“பின்னிரவின் நடுப்பகுதி.” (ஆதார நூல்: மிஷ்காத், நபிமொழி எண்- 46)
தோழர் கேட்ட வினாக்களுக்கு நபிகளார் அளித்த விடைகளை ஆராய்ந்தால், ஒவ்வொரு விடைக்கும் விளக்கமாக ஒரு நூலே எழுதலாம். எடுத்துக்காட்டாக, “சிறந்த ஹிஜ்ரத் – புலம்பெயர்தல் எது?” எனும் கேள்விக்கு நபிகளார் அளித்த ஒற்றை வரி விடையில் இஸ்லாமிய வாழ்வியலின் ஒட்டுமொத்த சாரத்தையும் பிழிந்து தந்துவிட்டார்.
– சிராஜுல்ஹஸன்
இந்த வாரச் சிந்தனை
“இறைநம்பிக்கை கொண்டவர்களே, நீங்கள் முழுக்க முழுக்க இஸ்லாத்தில் நுழைந்துவிடுங்கள். ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள்.”
(குர்ஆன் 2:208)