சோழவந்தான்: தியேட்டர் ஊழியரை தாக்கிய வழக்கில் அதிமுக நிர்வாகி கைது செய்யப்பட்டார். மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் கிராமத்தில் உள்ள ஒரு தியேட்டரில், கடந்த 23ம் தேதி, இரவு காட்சி முடிந்து பொதுவான வழியில் வெளியேறியுள்ளனர். அப்போது வெளியே வந்த வாடிப்பட்டி அதிமுக பேரூர் செயலாளரும், பேரூராட்சி கவுன்சிலருமான அசோக்குமார் மற்றும் அவருடன் வந்த இருவர், அவ்வழியே செல்லாமல், மூடியிருந்த மற்றொரு கதவை உதைத்து தள்ளிவிட்டு வெளியே சென்றுள்ளனர். இதை பார்த்த தியேட்டர் ஊழியர் சப்பாணி அவர்களை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மூவரும் சேர்ந்து சப்பாணியை சரமாரியாக தாக்கியதுடன், கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதில் காயமடைந்த சப்பாணி மதுரை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து காடுபட்டி போலீசார் வழக்குப்பதிந்து நேற்று காலை அசோக்குமாரை (42) கைது செய்து வாடிப்பட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது சப்பாணியும் நீதிமன்றத்தில் ஆஜராகி, புகாரை வாபஸ் பெறுவதாக கூறியதையடுத்து அசோக்குமார் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.