கிருஷ்ணகிரி: பள்ளியில் நடந்த என்சிசி முகாமில் மாணவி பலத்காரம் செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியான நாம் தமிழர் கட்சி நிர்வாகிக்கு உதவிய 2 நண்பர்கள், மேலும் ஒரு ஆசிரியை கைது செய்யப்பட்டனர். கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே கந்திகுப்பம் கிராமத்தில் தனியார் பள்ளி வளாகத்தில், கடந்த 5ம் தேதி முதல் 9ம் தேதி வரை என்சிசி முகாம் நடைபெற்றது. அங்கேயே தங்கி 17 மாணவிகள் முகாமில் கலந்து கொண்டனர்.
இதில் சக மாணவிகளுடன் பள்ளி ஆடிட்டோரியத்தில் தூங்கி கொண்டிருந்த 13 வயதுடைய 8ம் வகுப்பு மாணவியை, என்சிசி பயிற்சியாளரான காவேரிப்பட்டணம் காந்தி நகர் காலனியைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகி சிவா (எ) சிவராமன்(35) அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து மாணவி புகாரையடுத்து சேலம் சரக டிஐஜி உமா, கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்பி தங்கதுரை ஆகியோர், நேற்று முன்தினம் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.
இதனையடுத்து குற்றத்தை மறைத்ததற்காக பள்ளி முதல்வரான திருப்பத்தூரைச் சேர்ந்த சதீஷ்குமார்(35), ஆசிரியை ஜெனிபர்(35), பள்ளி தாளாளர் சாம்சன் வெஸ்லி(52), பயிற்சியாளர்கள் சக்திவேல்(39), சிந்து(21), முன்னாள் சிஆர்பிஎப் வீரர் சுப்பிரமணி(54) ஆகிய 7 பேரை போலீசார் கைது செய்து, கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். முக்கிய குற்றவாளியான சிவா(எ)சிவராமன் கோவையில் பதுங்கியிருந்தார். அவரை நேற்று முன்தினம் மாலை கைது செய்த போலீசார், கிருஷ்ணகிரி அழைத்து வந்தனர். பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்து சென்றபோது, போலீசாரிடம் இருந்து சிவராமன் தப்பியோட முயற்சி செய்தார்.
அப்போது தவறி கீழே விழுந்ததில், அவருக்கு வலது காலில் முறிவு ஏற்பட்டது. இதனால், அவரை கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று, அப்பள்ளியின் ஆசிரியை கோமதி (52), சிவராமனுக்கு உடந்தையாக இருந்த திம்மாபுரம் முரளி (30), தர்மபுரி மாவட்டம் எட்டிமரத்துப்பட்டி சீனிவாசன் (27) ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
பின்னர் மூவரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இவர்களையும் சேர்த்து இதுவரை 11 பேர் கைதாகியுள்ளனர். சிவராமன் இதுபோல் பல பள்ளி, கல்லூரிகளில் என்சிசி முகாம் நடத்தியது தெரியவந்துள்ளது. அதுபற்றி போலீசார் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
* 1098ல் புகார் செய்ய கலெக்டர் அறிவுறுத்தல்
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் சரயு, நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: கந்திகுப்பம் தனியார் பள்ளியில் நடந்த முகாமிற்கும், என்சிசிக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. என்சிசி என்ற பெயரில், வெளியில் இருந்து ஆட்கள் வந்து போலி முகாம் நடத்தியுள்ளனர். விதிமீறி நடத்தப்பட்ட முகாமில், மாணவ, மாணவிகளுக்கான பாதுகாப்பு வழிகாட்டுதல் எதுவும் பின்பற்றப்படவில்லை. இதுகுறித்து, பள்ளிக்கல்வித்துறை விரிவான அறிக்கை கேட்டுள்ளது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மூலம் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த பள்ளியில் இதற்கு முன்பு இது போன்ற சம்பவங்கள், விதிமீறல்கள் நடந்துள்ளதா என்பது குறித்தும், எந்தெந்த பள்ளிகளில் போலி என்சிசி முகாம்கள் நடந்தது என்பது குறித்தும் விசாரித்து வருகிறோம். பள்ளிகள் மற்றும் வெளியிடங்களில், மாணவிகளுக்கு இது போன்ற சம்பவங்கள் நடைபெற்றால் உடனடியாக “1098” என்ற எண்ணில் புகார் அளிக்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.
* போலியான முகாம் என்.சி.சி. விளக்கம்
என்.சி.சி. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அந்தமான் நிகோபார் தலைமை அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு மாநிலம், கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே என்.சி.சி முகாமில், மாணவி பலாத்காரம் செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளது. அந்த மாணவி பங்கேற்ற முகாம், ஒரு போலியான முகாம். அதை நடத்திய நபர்களும் என்.சி.சி., உறுப்பினர்கள் அல்ல. அவர்களும் போலியானவர்கள். என்.சி.சி. முகாமிற்காக இந்த பள்ளி சார்பில் எந்தவித பதிவும் செய்யப்படவில்லை. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் என்.சி.சி., எந்த ஒரு முகாமையும் நடத்தவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.