ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை அருகே கிருஷ்ணா கால்வாயில் மீன் பிடித்து கொண்டிருந்த வாலிபர் திடீரென நிலைதடுமாறி விழுந்து காணாமல் போய்விட்டார். கால்வாயில் மூழ்கி காணாமல் போன வாலிபரின் சடலத்தை மீட்கும் பணிகளில் இன்று காலை 2வது நாளாக போலீசாரும் தீயணைப்பு படையினரும் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. ஊத்துக்கோட்டை அருகே பனப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் (28). மீன்பிடி தொழிலாளி. இவர் நேற்று மாலை ஊத்துக்கோட்டை அருகே சிட்ரப்பாக்கம் பகுதியில் உள்ள கிருஷ்ணா கால்வாயில் மீன்பிடித்து கொண்டிருந்தார். அப்போது அவர் திடீரென நிலைதடுமாறி கால்வாய்க்குள் விழுந்ததாக கூறப்படுகிறது. கால்வாயில் நீரோட்டம் அதிகமாக இருந்ததால் சுரேஷ் நீரில் அடித்து செல்லப்பட்டார்.
இதுகுறித்து தகவலறிந்ததும் ஊத்துக்கோட்டை போலீசாரும் தேர்வாய் பகுதியில் இருந்து தீயணைப்பு படை வீரர்களும் விரைந்து வந்தனர். அவர்கள் நேற்றிரவு வரை தேடியும், கால்வாய்க்குள் மூழ்கிய சுரேஷை கண்டுபிடித்து மீட்க முடியவில்லை. இதைத் தொடர்ந்து, 2வது நாளாக இன்று காலை கிருஷ்ண கால்வாயில் மூழ்கி அடித்து செல்லப்பட்ட சுரேஷின் சடலத்தை மீட்கும் பணிகளில் போலீசாரும் தீயணைப்பு படையினரும் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.