பிலிபிட்: கணவன் – மனைவி இருவருக்கும் வெவ்வேறு நபர்களுடன் ஏற்பட்ட தகாத உறவை தொடர்ந்து, கணவனை மண்வெட்டி கைப்பிடியால் அடித்து கொன்ற மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர். உத்தரபிரதேச மாநிலம் பிலிபிட் மாவட்டம் கஜ்ரவுலா அடுத்த சிவநகர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராம்பால் (55). இவரது மனைவி துலாரோ தேவி (50). இவர்களுக்கு சோம்பால் (29) என்ற மகன் உள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் தனது தந்தை ராம்பாலை காணவில்லை என்று போலீசில் புகார் அளித்தார். அதையடுத்து போலீசார் வழக்குபதிந்து ராம்பாலை தேடி வந்தனர். ெதாடர் விசாரணையில் ராம்பாலை கொன்று அவரது உடல் 5 பாகங்களாக வெட்டப்பட்ட நிலையில், அப்பகுதியில் அமைந்துள்ள கால்வாயில் மீட்கப்பட்டது.
இதுகுறித்து போலீஸ் எஸ்பி அதுல் சர்மா கூறுகையில், ‘கொலை செய்யப்பட்ட ராம்பாலின் உடற்பகுதி ஒரு பையிலும், அவரது கைகள், கால்கள் மற்றும் தலை மற்றொரு பையிலும் மீட்கப்பட்டன. கொலையாளியை தேடி வந்த நிலையில், அவரது மகன் சோம்பால் அளித்த வாக்குமூலத்தில் தனது தந்தை – தாய் இடையே அடிக்கடி தகராறு நடந்து வரும் என்றார். அதன் அடிப்படையில் துலாரோ தேவியிடம் துருவி துருவி விசாரணை நடத்தப்பட்டது. அவர் தனது கணவர் ராம்பாலை கொலை செய்து, உடலை 5 பாகங்களாக வெட்டி கால்வாயில் வீசியதை ஒப்புக் கொண்டார். ெதாடர் விசாரணையில், கணவன் – மனைவி இருவரும் வெவ்வேறு நபர்களுடன் தகாத உறவில் இருந்து வந்துள்ளனர். அதனால் குடும்பத்தில் கணவன் – மனைவிக்குள் சண்டை ஏற்படுவது வழக்கம். கடந்த 24ம் தேதி குடிபோதையில் வீட்டுக்கு வந்த ராம்பால், தனது மனைவி துலாரோ தேவியை அடித்து துன்புறுத்தி உள்ளார்.
அன்றிரவு ராம்பால் இரவு தூங்கிக் கொண்டிருந்தபோது, அவரது கைகளை துலாரோ தேவி கட்டினார். அவர் படுத்திருந்த கட்டிலில் கால்களை கட்டிப்போட்டு மண்வெட்டியின் கைப்பிடியால் சரமாரியாக அடித்து கொன்றார். அடுத்தநாள் காலை, ராம்பாலின் உடலை அப்புறப்படுத்த வேண்டி பர்சகேரா தொழிற்பேட்டையில் பணிபுரியும் தனது கள்ளக்காதலனை தொடர்பு கொண்டார். அவர் வர மறுத்ததால் கள்ளக்காதலனின் வீட்டிற்கே சென்று உதவி கோரினார். மீண்டும் அவர் மறுத்ததால், தனது வீட்டிற்குத் திரும்பினார். பின்னர், கணவரின் உடலை ஐந்து பாகங்களாக வெட்டி எடுத்து இரண்டு பைகளில் அடைத்தார்.
அதன்பின் அங்கிருந்து அருகில் உள்ள கால்வாயில் வீசி எறிந்துள்ளார். தற்போது துலாரோ தேவி மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கொலைக்கு பயன்படுத்திய மண்வெட்டி கைப்பிடி, கத்தி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. தொடர் விசாரணைக்கு பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்’ என்றார்.