Tuesday, February 27, 2024
Home » மின்சாரம், குடிநீர் 4 நாட்களாக விநியோகம் செய்யாததால் அரசு பேருந்தை சிறை பிடித்த கிராம மக்கள்

மின்சாரம், குடிநீர் 4 நாட்களாக விநியோகம் செய்யாததால் அரசு பேருந்தை சிறை பிடித்த கிராம மக்கள்

by Neethimaan


கூடுவாஞ்சேரி: கீரப் பாக்கம் ஊராட்சியில் மின்சாரம் மற்றும் குடிநீர் ஆகியவை கடந்த 4 நாட்களாக விநியோகம் செய்யாததால் மாநகர பேருந்தை சிறை பிடித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட வண்டலூர் அடுத்த கீரப்பாக்கம் ஊராட்சியில், கீரப்பாக்கம், முருகமங்கலம், அருங்கால் ஆகிய கிராமங்கள் உள்ளன. இங்கு 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இதில், கீரப்பாக்கம் கிராமத்தில் உள்ள முத்தாலம்மன் கோவில் தெருவில் இருந்து துலுக்கானத்தம்மன் கோயில் தெருவுக்கு செல்லும் பிரதான சாலை ஓரத்தில் 300க்கும் மேற்பட்ட ஆதிதிராவிடர் குடும்பத்தினர் பல தலைமுறைகளாக வசித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த சில தினங்களாக பெய்து வந்த தொடர் கன மழையினாலும், மிக்ஜாம் புயலாலும் ஏராளமான மரங்கள் மற்றும் மின் கம்பங்கள் முறிந்து விழுந்தன.

இதுகுறித்து ஊராட்சி மன்ற நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பொதுமக்கள் பலமுறை புகார் கூறியும் இதுவரை மின் கம்பங்கள் மாற்றப்பட்டு குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. இதில் 4, 5, 6 மற்றும் 7வது வார்டு பகுதிகளில் குளிப்பதற்கும், துணி துவைப்பதற்கும் மற்றும் குடிப்பதற்கும் தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால், ஆத்திரமடைந்த 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் நேற்று காலை திரண்டு வந்து கீரப்பாக்கம் நான்கு ரோடு சந்திப்பில் தாம்பரத்தில் இருந்து வந்த 55 டி என்ற மாநகர பேருந்தை சிறைப்பிடித்து ஒரு மணி நேரமாக கோசமிட்டபடி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் காயார் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது பொதுமக்கள் கூறுகையில், ‘புயல் மழை வந்தபோது ஏராளமான மரங்களும் மின்கம்பங்களும் முறிந்து விழுந்தன. இதனை சரி செய்து தரும்படி சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் மற்றும் அதிகாரிகளிடம் பலமுறை புகார் கூறியும் கண்டு கொள்ளவில்லை. கடந்த 4 நாட்களாக துணி துவைக்க முடியாமலும் குளிக்க முடியாமலும் குடிப்பதற்கு தண்ணீர் இல்லாமல் கடும் அவதிப்பட்டு வருகின்றோம். பணம் கொடுத்து தண்ணீர் கேன் வாங்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நேரில் வந்து கள ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையென்றால் மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம் என கூறினர். இதனை அடுத்து போலீசார் மின்கம்பங்கள் வரவைத்து சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதனை அடுத்து, அனைவரும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இதேபோல் கீரப்பாக்கம் பிரதான சாலையில் பல லட்சம் மதிப்பீட்டில் தரைப்பாலம் அமைக்கும் பணி கடந்த இரண்டு மாதங்களாக நடைபெற்று வருகிறது. இதில் இரு சக்கர மற்றும் மூன்று சக்கர வாகனங்களை தவிர்த்து மற்ற வாகனங்களுக்கு போக்குவரத்து செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் சிமெண்ட் கற்கள் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலைகளில் இருந்து கற்களை ஏற்றி வரும் லாரிகளின் அட்டகாசத்தால் தரைப்பாலத்தில் நேற்று காலை ஒரு லாரி சேற்றில் சிக்கி கொண்டது. இதனால் அப்பகுதியில் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் அடுத்தடுத்து நடந்த சம்பவங்களால் கீரப்பாக்கம் ஊராட்சியில் நேற்று காலை பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

3 × 2 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi