* அவசர காலகட்டத்தில் ஆம்புலன்ஸ் செல்வதில் சிக்கல்
* விவசாய பொருட்களை கொண்டு செல்ல முடியாத அவலம்
களக்காடு: களக்காடு அருகே ஆற்றை கடக்க, உயர் மட்ட பாலம் இல்லாததால் வாகனங்கள் நுழைய முடியாமல், போக்குவரத்து வசதி இன்றி கிராமம் தீவு போல துண்டிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் கடுமையாக பாதிப்பு அடைந்துள்ளனர். நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள காமராஜ் நகரில் 800க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் விவசாய தொழிலாளர்கள் ஆவர். மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள இந்த கிராம மக்கள் தங்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு அருகே உள்ள மஞ்சுவிளைக்கு தான் வர வேண்டும். காமராஜ்நகர்-மஞ்சுவிளை இடையே ஓடும் பச்சையாற்றின் மீது கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு நடைபாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலம் மிகவும் குறுகியதாக உள்ளது. மேலும் பழுதடைந்த நிலையில் காட்சி அளிக்கிறது.
பாலத்தின் தடுப்பு கம்பிகள் சேதமடைந்துள்ளது. அபாயகரமாக உள்ள இந்த பாலத்தின் வழியாகத்தான் கிராம மக்கள் தினசரி வந்து செல்கின்றனர். இந்த கிராமத்தை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் மஞ்சுவிளை, களக்காடு, நெல்லை மற்றும் வெளியூர்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் கல்வி பயின்று வருகின்றனர். அவர்களும் கரணம் தப்பினால் மரணம் என்பது போல இந்த பாலத்தின் வழியாகவே ஒரு வித அச்சத்துடன் வந்து செல்கின்றனர். 20 அடி உயரத்தில் பாலம் உள்ளதால் சிறுவர்கள் ஆற்றில் விழுந்து விடக் கூடாது என்பதற்காக பெற்றோர்களும் உடன் வர வேண்டியதுள்ளது. பாலம் குறுகியதாக இருப்பதால் ஆட்டோ, கார்கள், வேன்கள், பள்ளி பேருந்துகள் என எந்த வாகனமும் கிராமத்திற்குள் நுழைய முடியாது என்பதால் தனி தீவு போலவே காமராஜ்நகர் காட்சி அளிக்கிறது.
இந்த கிராம மக்களுக்கான ரேசன் கடையும் மஞ்சுவிளையில் உள்ளது. எனவே பொருட்களை வாங்கி கொண்டு பாலத்தின் வழியாக சிரமத்துடனேயே பயணித்து வருகின்றனர். கிராமத்தில் யாருக்காவது உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டால் கூட ஆம்புலன்ஸ் கிராமத்திற்குள் வர முடியாது என்பதால் அவசர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளை மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்ல முடியாமலும் பாதிப்பு அடைந்து வருகின்றனர். குறுகிய பாலத்தில் அடிக்கடி விபத்துகளும் நடந்து வருவதாகக் கூறப்படுகிறது. அத்துடன் காமராஜ்நகர் பகுதியில் உள்ள விளைநிலங்களுக்கு விவசாய பொருட்களை கொண்டு செல்ல முடியாமல் விவசாயிகளும் அவதி பட்டு வருகின்றனர்.
நவீனமயமாக மாறி வரும் இக்காலத்தில் இன்னமும் காமராஜ்நகர் கிராம மக்களுக்கு போக்குவரத்து என்பது எட்டாகனியாகவே உள்ளது வேதனை தரக்கூடியதாகவே உள்ளது. எனவே மஞ்சுவிளை-காமராஜ்நகர் இடையே பச்சையாற்றின் மீதுள்ள நடை பாலத்தை அகற்றி விட்டு புதிதாக அகலத்துடன் கூடிய உயர் மட்ட பாலம் அமைத்து தர வேண்டும் என்று காமராஜ்நகர் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.