* 3 பேர் காயத்துடன் மீட்பு
* சாத்தான்குளம் அருகே சோகம்
சாத்தான்குளம்: கோவையில் இருந்து சாத்தான்குளம் அருகே ஆலயத் திருவிழாவுக்கு சென்றபோது தறிகெட்டு ஓடிய வேன், சாலையோரம் இருந்த தரைநிலை கிணற்றில் பாய்ந்தது. இதில் ஒன்றரை வயது குழந்தை உள்பட 5 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர். கோவை சங்கிலியம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மோசஸ் (50). இவரும், மனைவி வசந்தா (45), மகன் கெர்சோம் (29), இவரது மனைவி சைனி கிருபா (26), ஒன்றரை வயது குழந்தை ஸ்டாலின், உறவினர்கள் ரவி கோயில் பிச்சை (55), இவரது மனைவி லெற்றியா கிருபா (40), ரவி கெர்சோன் என்பவரின் மகள் ஜெரினியா எஸ்தர் ஆகிய 8 பேரும் தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே வெள்ளாளன்விளை கிராமத்தில் நடந்த ஆலய பிரதிஷ்டை விழாவில் பங்கேற்பதற்காக நேற்று காலை வேனில் கோவையில் இருந்து புறப்பட்டனர். மோசஸ் வேனை ஓட்டினார்.
நேற்று மாலை 4.30 மணியளவில் நெல்லை மாவட்டம் சிந்தாமணியில் இருந்து பேய்க்குளம் வழியாக வெள்ளாளன்விளைக்கு சென்று கொண்டிருந்தனர். மீரான்குளம் அருகே திடீரென கட்டுப்பாட்டை இழந்து, தறிகெட்டு ஓடிய வேன் சாலையோரம் தடுப்புச் சுவர் இல்லாத தரைநிலை கிணற்றில் பாய்ந்தது. இந்த கிணற்றில் 50 அடி அளவுக்கு தண்ணீர் இருந்ததால் வேன் கிணற்றில் மூழ்கியது. அலறல் சத்தம் கேட்டு திரண்ட இப்பகுதி மக்கள் சிலர் கிணற்றில் குதித்து வேனில் இருந்த கெர்சோம், சைனி கிருபா, ஜெரினியா எஸ்தர் ஆகிய மூவரையும் லேசான காயத்துடன் மீட்டனர். மற்ற 5 பேரும் வேனுடன் கிணற்றில் இருந்த தண்ணீரில் மூழ்கினர்.
தகவலறிந்து ஊர் மக்கள் ஏராளமானோர் அங்கு கூடினர். சாத்தான்குளம் போலீசாரும், சாத்தான்குளம், நாங்குநேரி தீயணைப்பு நிலைய வீரர்கள், தூத்துக்குடியில் இருந்து முத்துக்குளி வீரர்கள் மற்றும் பொதுமக்கள், இரு பொக்லைன் இயந்திரங்கள், ராட்சத கிரேன் ஆகியவற்றின் துணையுடன் மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். எனினும் ஒன்றரை வயது குழந்தை உள்ளிட்ட 5 பேரும் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது.