திருமலை: ஆந்திராவில் பணியிடமாற்றம் பெற்ற கோவையை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரிக்கு கிரேனில் பிரமாண்ட மாலை அணிவித்து பிரியாவிடை நிகழ்ச்சி நடத்திய சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியடைய செய்துள்ளது. ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகனின் சொந்த மாவட்டமான கடப்பாவில் கடந்த 4 ஆண்டாக எஸ்.பியாக பணியாற்றியவர் தமிழ்நாட்டில் கோவையை சேர்ந்த கே.கே.என்.அன்புராஜன். சமீபத்தில் அவர் அனந்தபுரம் மாவட்டத்திற்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.
அவர் தங்கள் மாவட்டத்தை விட்டு பிரிந்து வேறு மாவட்டத்திற்கு செல்வதால் அவரது சேவையை கவுரவிக்கும் விதமாக கூடுதல் எஸ்பி முதல் காவலர் வரை அனைவரும் இணைந்து பிரியாவிடை நிகழ்ச்சிக்கு நேற்று ஏற்பாடு செய்தனர். இதற்காக பிரமாண்டமான 20 அடி உயரத்திற்கு மாலை ஏற்பாடு செய்யப்பட்டு, கிரேன் மூலம் அவருக்கு அணிவிக்கப்பட்டது. முன்னதாக என்டிஆர் சந்திப்பு, சிஎஸ்ஐ சர்ச் சர்க்கிள், கோட்டிரெட்டி சந்திப்பு வழியாக எஸ்பி பங்களா வரை வழிநெடுகிலும் மலர் தூவி தங்கள் மீது அன்பு வைத்து அக்கறையுடன் பணிபுரிந்த அதிகாரிக்கு பிரியாவிடை செய்து அனுப்பி வைத்தனர்.