மானாமதுரை: மானாமதுரை ரயில் நிலையத்தில் ராமேஸ்வரம் – மதுரை ரயில் இன்ஜினுக்கு டீசல் நிரப்ப நடைமேடையின் கடைசிப் பகுதியில் ரயில் நிறுத்தப்படுவதால் நீண்டதூரம் நடந்துசென்று ரயிலை பிடிக்க வேண்டியுள்ளதால் பயணிகள் அவதிப்படுகின்றனர். சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வழியாக ராமேஸ்வரம், மதுரைக்கு தினமும் 3 பயணிகள் ரயில்கள் 6 முறை இயக்கப்படுகிறது. காலை, மதியம், இரவு வேளைகளில் இயக்கப்படும் ரயில்களில் ராமேஸ்வரத்தில் இருந்து மதுரை செல்லும் ரயிலுக்கு ரயில்வே ஸ்டேஷன் அருகே உள்ள பங்கில் டீசல் நிரப்புவது வழக்கம். கடந்த இருபது ஆண்டுகளாக இந்த நடைமுறையில் உள்ளது.
ராமேஸ்வரம், விருதுநகர் மார்க்கமாக வரும் அனைத்து எக்ஸ்பிரஸ், பயணிகள் ரயில்களின் என்ஜின்களுக்கு ஸ்டேஷன் அருகே வடக்கு முனையில் டீசல் நிரப்பப்படும். ராமேஸ்வரத்தில் இருந்து மதுரை செல்லும் பயணிகள் ரயில்களுக்கு நடைமேடை ஒன்று, நடைமேடை மூன்றில் டீசல் நிரப்பும் வசதி உள்ளது. ராமேஸ்வரத்தில் இருந்து காலை 8 மணிக்கும், மதியம் 1.50 மணிக்கும், இரவு 8.15 மணிக்கும் மதுரை செல்லும் ரயில்களுக்கு முழு கொள்ளளவு நிரம்பும் வரை டீசல் பிடிக்கப்படும். இதனால் இந்த இஞ்சின்கள் மறுமார்க்கமாக காலை 7.55 மணிக்கும், மதியம் 2.50 மணிக்கும், இரவு 7.15 மணிக்கும் திரும்பி செல்லும்போது டீசல் நிரப்புவது இல்லை.
பல ஆண்டுகளாக இருந்த நடைமுறை சமீப காலமாக தலை கீழாக மாற்றப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களாக ரயில் நிலையத்தின் கடைசியில் உள்ள எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கு டீசல் நிரப்பும் தெற்கு பகுதியில் பயணிகள் ரயில்களுக்கு டீசல் நிரப்பப்படுகிறது. இதற்காக வழக்கமாக ஸ்டேஷன் அருகில் பயணிகள் ரயில் நிற்பதற்கு பதிலாக ஸ்டேஷனில் இருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் நிற்பதால் முதியோர், மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிகள் வேகமாக ஓடிச்சென்று ரயிலை பிடிக்க முடியாமல் சிரமப்படுகின்றனர்.
இது குறித்து ரயில் பயணிகள் சங்க நிர்வாகி அப்துல்கரீம் கூறுகையில், `பயணிகள் ரயில் 10 பெட்டிகளுடன் இயக்கப்படுவதால் ரயில் நிலைய நுழைவு வாயில் அருகில் நிறுத்தப்படும். தற்ேபாது டீசலுக்காக ெதாலைவில் நிறுத்தப்படுவதால் ரயிலில் ஏறுவதற்கும் மதுரையில் இருந்து வரும் பயணிகள் இறங்கி நடந்து ஸ்டேஷனுக்குள் வருவதற்கும் நீண்ட தொலைவு நடந்து செல்ல வேண்டியுள்ளது. எனவே பழைய முறைப்படி மதுரை செல்லும் போதே ரயில் இஞ்சினுக்கு டீசல் நிரப்ப மதுரை கோட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.